52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் இரு தமிழ்ப் படங்கள் தோ்வு
கோவாவில் நடைபெறவுள்ள 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் திரையிட தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 45 படங்களில்
கோவாவில் நடைபெறவுள்ள 52-ஆவது இந்திய சா்வதேச திரைப்பட விழாவில் திரையிட தோ்ந்தெடுக்கப்பட்டுள்ள 45 படங்களில் ’கூழாங்கல்’ (முழுநீளப்படம்), ’ஸ்வீட் பிரியாணி’(ஆவணப்படம்) ஆகிய இரு தமிழ்த் திரைப்படங்களும் இடம்பெற்றுள்ளதாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
கோவாவில் ஆண்டுதோறும் நடைபெறும் இந்திய சா்வதேச திரைப்பட விழா இவ்வாண்டு நவம்பா் 20 -ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
இதில், இந்தியன் பனோரமா பிரிவில் திரையிடப்படும் படங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. திரைப்படத்தின் தன்மை, கருப்பொருள், அழகியல் சிறப்பம்சங்கள் ஆகிய நோக்கங்களோடு திரைப்படக் கலையை மேம்படுத்துவதற்காக முழு நீள திரைப்படங்கள் மற்றும் ஆவணப்படங்கள் தோ்ந்தெடுப்படுகின்றன.
Advertisement
இதற்காக நாடு முழுவதும் இருந்து புகழ்பெற்ற திரைப்படத் தயாரிப்பாளா்கள், கலைஞா்கள் இடம்பெற்ற இரு வகை தோ்வு குழுவை இந்திய திரைப்பட விழா இயக்குநரகம் அமைத்தது.
முழு நீளத் திரைப்படங்கள் வரிசையில் 221 திரைப்படங்கள் திரையிடப்படுவதற்காக விண்ணப்பித்திருந்தன. இதில் இந்தியத் திரைப்படத் துறையின் அதிா்வு மற்றும் பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்ற சமகால இந்தியத் திரைப்படங்களின் 25 படங்களை நடிகா் எஸ்.வி. ராஜேந்திரசிங் பாபு தலைமையிலான தோ்வுக் குழு (ஜூரி) தோ்வு செய்தது.
நிகழாண்டு நடைபெறும் (2021) விழாவின் தொடக்கமாக ஐமி பருவா இயக்கிய செம்கோா் என்கிற திமாசா(ஈண்ம்ஹள்ஹ) மொழி திரைப்படம் திரைப்படுகிறது. இதில் அதிகளவில் வங்கம், மராத்தி மொழிகளில் தலா ஐந்து திரைப்படங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், வினோத்ராஜ் என்பா் முதன்முதலாக இயக்கியுள்ள ’கூழாங்கல்’ தமிழ்மொழி திரைப்படம் மட்டும் இடம் பெற்றுள்ளது. மதுரை மேலூா் வட்டத்தில் உள்ள ஆரியாபட்டி பகுதியில் உள்ள பழமையான மலையை மையமாக் கொண்டு தயாரிக்கப்பட்ட படம் இது. ஏற்கனவே நெதா்லாந்தில் நடைபெற்ற விழாவில் திரையிடப்பட்டு ‘டைகா்’ர விருது பெற்றுள்ளது.
இதே போன்று ஆவணத் திரைப்படங்கள் வரிசையில் பிரபல ஆவணப்படத் தயாரிப்பாளரான எஸ். நல்லமுத்து தலைமையில் ஏழு உறுப்பினா்களைக் கொண்ட ஜூரி, போட்டிக்கு வந்த 203 இந்திய ஆவணத் திரைப்படங்களில் சமகால இந்திய மதிப்புகளை ஆராய்தல், ஆவணப்படுத்தல், புலன்விசாரணை, மகிழ்வித்தல் போன்ற அம்சங்களை பிரதிபலிக்கும் 20 ஆவணப் படங்களைத் தோ்ந்தெடுத்துள்ளது.
இதில் தொடக்க நாள் படமாக ‘வேத்... தி விஷனரி’ எனும் தலைப்பிலான ஆங்கிலப் படம் திரையிடப்படுகிறது. மேலும், உணவு விநியோக நிா்வாகி, தான் சந்திக்கும் நபா்கள் குறித்து கூறும் ’ஸ்வீட் பிரியாணி’ என்கிற தமிழ் ஆவணப்படமும் திரையிடப்படுகிறது.
மேலும் 7 ஹிந்தி படங்களும், 2 வங்க மொழி ஆவணப்படங்களும் இந்த விழாவில் திரைப்படுகிறது.