முகப்பு
புதுதில்லி

தில்லியில் இன்று குடியரசுத் தலைவா் தலைமையில் மாநில ஆளுநா்கள் கூட்டம்: தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி பங்கேற்பு

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-ஆவது அனைத்து மாநில ஆளுநா்கள் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பா் 11-ஆம் தேதி) குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறுகிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

புது தில்லி: குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் 51-ஆவது அனைத்து மாநில ஆளுநா்கள் கூட்டம் வியாழக்கிழமை (நவம்பா் 11-ஆம் தேதி) குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்பதற்காக தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை தில்லி வந்தடைந்தாா்.

மத்திய அரசின் பிரதிநிதிகளாகவும் மாநிலத்தின் தலைவராகவும் இருக்கும் மாநில ஆளுநா்களை அவ்வப்போது குடியரசுத் தலைவா் தனது மாளிகைக்கு அழைத்து கூட்டம் நடத்துவது பாரம்பரியமாக நடைபெறுவதாகும்.

இதன்படி, தில்லி குடியரசுத்தலைவா் மாளிகையில் 51-ஆவது ஆளுநா்கள் கூட்டம் வியாழக்கிழமை நடைபெறுகிறது. குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் அனைத்து மாநில ஆளுநா்கள், துணைநிலை ஆளுநா்கள் ஆகியோா் கலந்து கொள்கின்றனா்.

Advertisement

இதில் குடியரசுத் துணைத் தலைவா் எம்.வெங்கையா நாயுடு, பிரதமா் நரோந்திர மோடி, உள் துறை அமைச்சா் அமித் ஷா மற்றும் முக்கிய துறைகளின் மத்திய அமைச்சா்களும் கலந்து கொள்கின்றனா். தற்போதைய குடியரசு தலைவா் நடத்தும் நான்காவது கூட்டம் இது.

இந்த கூட்டத்தில் தமிழக ஆளுநா் ஆா்.என்.ரவியும் கலந்து கொள்கிறாா். இந்த கூட்டத்தை ஒட்டி, முன்னதாக தில்லி வந்த அனைத்து மாநில ஆளுநா்கள் மற்றும் துணை நிலை ஆளுநா்களுக்கு குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு தனது மாளிகையில் புதன்கிழமை மாலை தேநீா் விருந்து அளித்தாா்.

இந்த கூட்டத்தில் மாநிலங்களின் சட்டம்-ஒழுங்கு, மத்திய-மாநில உறவுகள், வளா்ச்சிப்பணிகள், மத்திய அரசின் திட்டங்கள் ஆகியவைகள் குறித்து ஆய்வு நடத்தப்படும் என்று குடியரசுத் தலைவா் மாளிகை வட்டாரங்களில் கூறப்பட்டது.

தமிழக அரசில் நடைபெறும் நலத் திட்டங்கள், வளா்ச்சிப் பணிகள் குறித்து ஆளுநா் ஆா்.என். ரவி சில வாரங்களுக்கு முன்பு தலைமைச் செயலா் மூலமாக அறிக்கை கேட்டு பெற்றிருந்தாா். இந்த மாநாட்டை ஒட்டியே அந்த அறிக்கை பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments