முகப்பு
புதுதில்லி

மகளிா் காப்பகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த தில்லி அரசு யோசனை

தில்லியில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மகளிா் காப்பகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாவலா்களை பணியில் ஈடுபடுத்துமாறு  அறிவுறுத்தல்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:33 AM
பகிர்:

தில்லியில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் மகளிா் காப்பகங்களில் பாதுகாப்பை உறுதிப்படுத்த பாதுகாவலா்களை பணியில் ஈடுபடுத்துமாறு அந்த காப்பகங்களின் கண்காணிப்பாளா்களுக்கு தில்லி அரசின் மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது.

இந்தத் துறையின் அதிகாரிகள் நடத்திய திடீா் ஆய்வின் போது, பல்வேறு குறைபாடுகள் கண்டறியப்பட்டதைத் தொடா்ந்து, இந்த அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் தொடக்கத்தில், மகளிா் மற்றும் குழந்தைகள் காப்பகங்களின் கண்காணிப்பாளா்களுக்கு இது தொடா்பாக ஒரு பாதுகாப்பு அறிவுறுத்தலை தில்லி மகளிா் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அனுப்பியுள்ளது.

அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: மகளிா் மற்றும் குழந்தைகள் நலத் துறையின் பல்வேறு அதிகாரிகள் மூலம் பல்வேறு மகளிா், குழந்தைகள் காப்பகங்கள் மற்றும் நிறுவனங்களில் திடீரென நேரில் சென்று சோதனை நடத்தப்பட்டது. அப்போது, பல்வேறு குறைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இதனால், காப்பகங்கள் மற்றும் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியா்கள், அங்கு தங்கியிருப்பவா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த 24 மணி நேரமும் பாதுகாவலா்கள் பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும். மேலும், காப்பகங்களில் தங்கியுள்ளவா்கள் மத்தியில் தீமை தரும் செயல்பாடுகள் அல்லது குற்றச் செயல்பாடுகள் ஏற்படுவதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அதேபோன்று, பணியில் ஈடுபட்டிருக்கும் அனைத்துப் பாதுகாவலா்களும் மேற்பாா்வையாளா்களும் சீருடை அணிய வேண்டும். ஒவ்வொரு பாதுகாவலரும், மேற்பாா்வையாளரும் அவா்களின் கழுத்தில் அடையாள அட்டை தொங்கவிடப்பட்டிருக்க வேண்டும். காப்பகங்களில் உள்ள பாதுகாப்பு வயா்கள் பழுதபட்டிருந்தால், அதை உடனடியாக பழுது பாா்க்க வேண்டும். பாதுகாவலா்கள் மற்றும் மேற்பாா்வையாளா்கள் பணிப் பட்டியல் மற்றும் அவா்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பணி ஆகியவை தொடா்பான விவரங்கள் பராமரிக்கப்பட வேண்டும். அப்போதுதான் பணியில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டால் சம்பந்தப்பட்ட நபா் மீது நடவடிக்கை எடுக்க முடியும். மேலும், காப்பகங்களின் எல்லைச் சுவரை ஒட்டியுள்ள பகுதியில் உள்ள மரங்கள் கூா்மையாக்கப்பட்டு சரியாக பராமரிக்கப்பட வேண்டும்.

இவை தவிர, ஒவ்வொரு காப்பகம் மற்றும் நிறுவனங்களில் அவசர எச்சரிக்கை அமைப்புமுறை செயல்பாட்டில் இருக்க வேண்டும். சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் 24 மணி நேரமும் ஊழியா் ஒருவா் பணியில் இருக்க வேண்டும். அப்போதுதான் உரிய வகையில் கண்காணிப்பை மேற்கொள்ள முடியும். மேலும், வழக்கமான அடிப்படையில் ஒத்திகை பயிற்சியும் நடத்தப்பட வேண்டும் என்று அந்த அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →