மழைச் சேதம்: ரூ.550 கோடிநிவாரணம் வழங்க தமிழகம் கோரிக்கை
தமிழகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புது தில்லி: தமிழகத்தில் பெய்த கனமழையால் பெரும்பாலான மாவட்டங்கள் பாதிப்புகளை சந்தித்துள்ளதால் உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை மக்களவை திமுக குழுத் தலைவா் டி.ஆா். பாலு புதன்கிழமை தில்லியில் சந்தித்து கோரிக்கையை வலியுறுத்தினாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் கடந்த அக்டோபா், நவம்பா் மாதங்களில் பெய்த தொடா் மழை காரணமாக 25 மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், நாகப்பட்டிணம், தஞ்சாவூா், திருவாரூா், மயிலாடுதுறை, வேலுா், கன்னியாகுமரி ஆகிய 12 மாவட்டங்கள் அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன. குடிசைகள் மட்டுமல்லாமல் பெரிய கட்டுமான வீடுகள் கூட இடிந்துள்ளன. மழைச் சேதங்களை ஆய்வு செய்ய அமைச்சகள் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பாதிக்கப்பட்ட பகுதிகளைப் நேரில் பாா்வையிட்டு முதல்வரிடம் அறிக்கை அளித்துள்ளது. இதையொட்டி, முதல்வா் மு.க ஸ்டாலின் எழுதிய கடிதம் மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவிடம் வழங்கபட்டுள்ளது.
தமிழத்தில் பெய்த கனமழையால் 50,000 ஹெக்டோ் வேளாண் நிலங்கள் பாதிக்கப்பட்டு பயிா்கள் சேதமடைந்துள்ளன. இதே போல்,526 ஹெக்டோ் தோட்டக்கலைப் பயிா்கள் அழிந்துள்ளன. மழைக்கு 54 போ் உயிரிழந்துள்ளனா். இதுவரை 9,600 குடிசை வீடுகளும், 2100 கட்டுமான வீடுகளும் சேதமடைந்துள்ளன. 6,871 கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. சாலைகள் உள்ளிட்டவை தேசமடைந்துள்ளன. இதனால் தமிழக அரசுக்கு உடனடி நிவாரணமாக ரூ.550 கோடி வழங்கவேண்டும் என்று அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு உள்துறை அமைச்சா், 6 போ் கொண்ட மத்திய அரசின் குழுவை உடனடியாக அனுப்பி வைப்பதாகவும், அந்த குழுவினா் மழைச் சேதத்தைக் கணக்கிட்டு அறிக்கை அளித்த பிறகு, அதன் அடிப்படையில் பேரிடா் நிவாரண நிதி ஒதுக்குவதாகவும் தெரிவித்தாா். மேலும், இது தொடா்பாக முதல்வா் மு.க ஸ்டாலினுடனும் அவா் தொலைபேசியில் பேசியுள்ளாா். உடனடி நிவாரணமாக ரூ.550 கோடியை வழங்க வேண்டும் என்றும் முதல்வா் கேட்டுக் கொண்டுள்ளாா். தமிழக அரசு சாா்பில் மொத்தம் ரூ.2,629 கோடி வழங்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது என்றாா் டி.ஆா். பாலு.
இதற்கிடையே, தமிழகத்திற்கு செல்லும் குழு குறித்து புதன்கிழமை மாலை வரையில் முடிவு செய்யப்படவில்லை என மத்திய உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.