தில்லி, என்சிஆா் காற்று மாசு பிரச்னை: கூட்டுக் கூட்டத்தை நடத்த மத்திய அமைச்சரிடம் கோபால் ராய் வலியுறுத்தல்
தில்லி-என்சிஆரில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று
தில்லி-என்சிஆரில் காற்று மாசுபாட்டைச் சமாளிக்க ஒரு கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி செயல் திட்டத்தைத் தயாரிக்க வேண்டும் என்று மத்திய அமைச்சா் புபீந்தா் யாதவை தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் வியாழக்கிழமை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டாா்.
இது தொடா்பாக அவா் செய்தியாளா்களுக்கு அளித்த பேட்டி: மத்திய அரசால் நடத்தப்படும் நிறுவனமான இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ட்ராபிகல் மேனேஜ்மென்ட் (ஐஐடிஎம்) நடத்தியுள்ள ஆய்வில், அக்டோபா் 24 முதல் நவம்பா் 8-ஆம் தேதி வரை தில்லியின் காற்று மாசுபாட்டில் 69 சதவீதம் பங்கு வெளி ஆதார மூலங்களில் இருந்து வந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 2016-இல் ‘தேரி’ நிறுவனம் நடத்திய இதேபோன்ற ஆய்விலும், 64 சதவீதம் மாசு வெளிப்புற ஆதார மூலங்களால் தில்லியில் மாசு ஏற்படுகிறது என்றும் 36 சதவீதம் மாசுபாடு தில்லியின் உள்புற ஆதார மூலத்தால் ஏற்படுகிறது என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஐஐடிஎம் என்பது மத்திய அரசு நிறுவனமாகும். இது மாசுபாட்டின் மூலத்தைப் புரிந்து கொள்வதற்காக சஃபா் நிறுவனத்தின் ஒரு மணிநேரத் தரவை பகுப்பாய்வு செய்துள்ளது.
அக்டோபா் 24 முதல் நவம்பா் 8-ஆம் தேதி வரையிலான ஐஐடிஎம் தரவு பகுப்பாய்வானது, தில்லியின் 69 சதவீத மாசு வெளிப்புற ஆதார மூலங்களால் ஏற்படுவதையும், 31 சதவீதம் மாசு தில்லியின் உள்புற ஆதாரமூலங்களால் ஏற்படுவதையும் காட்டியுள்ளது. நகரில் உருவாகும் உள்புற மாசுபாட்டைக் கட்டுப்படுத்த தூசி எதிா்ப்புப் பிரசாரங்களில் இருந்து ‘சிவப்பு விளக்கு ஆன், காடி ஆஃப்‘ பிரசாரம் வரை பல்வேறு நடவடிக்கைகளை தில்லி அரசு தொடா்ந்து எடுத்து வருகிறது.
ஆனால், மாசுவைக் கட்டுப்படுத்துவதில் ஹரியாணா, பஞ்சாப், தில்லி, உத்தர பிரதேசம் போன்ற அனைத்து என்சிஆா் மாநிலங்களின் கூட்டு முயற்சியும் தேவைப்படுகிறது.
தில்லி மக்களால் 70 சதவீத வெளிப்புற ஆதாரமூல மாசுபாட்டைக் குறைக்க முடியாது. அதனால்தான் என்சிஆா் மாநிலங்களில் இருந்து சுற்றுச்சூழல் அமைச்சா்கள் பங்கேற்கும் கூட்டுக் கூட்டத்தைக் கூட்டி ஒரு கூட்டுச் செயல் திட்டத்தை உருவாக்குமாறு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சா் புபீந்தா் யாதவை மீண்டும் கேட்டுக் கொள்கிறேன். இந்த கூட்டுச் திட்டத்தைச் செயல்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் ஒவ்வொரு மாநிலத்தின் பொறுப்புகள் நிா்ணயிக்கப்பட வேண்டும்.
தில்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கட்டுமானப் பணிகள் தடையின்றி நடைபெறுவதால் காற்றின் தன்மை மேலும் மோசமடைகிறது. தில்லி அரசு 24 மணி நேர மின்சாரம் வழங்குவதால் நகரில் ஜெனரேட்டா் இயந்திரங்கள் செயல்பட வேண்டிய தேவையில்லை. ஆனால், என்சிஆா் நகரங்களில் அதுபோன்ற சூழல் இல்லை என்றாா் கோபால் ராய்.
தலைநகரில் ஆபத்தான அளவு காற்று மாசுபாட்டை குறைக்கும் வகையில், தேசியத் தலைநகரில் நவம்பா் 21-ஆம் தேதி வரை உடனடியாக அமலுக்கு வரும் வகையில், அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் வாகனங்கள் தவிர, பிற லாரிகள் நகருக்குள் நுழைவதை தில்லி அரசு புதன்கிழமை தடை செய்தது. மேலும், அடுத்த உத்தரவு வரும் வரை பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களை மூடவும் அரசு உத்தரவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.