ராஜீவ் செளக் - சென்ட்ரல் செக்ரடேரியேட் மெட்ரோ வழித்தடத்தில் நாளை காலையில் ரயில் சேவை பாதிக்கும்: டிஎம்ஆா்சி தகவல்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) காலை சில மணி நேரம் மஞ்சள்நிற வழித்தடத்தில்
தண்டவாள பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் ஞாயிற்றுக்கிழமை (நவம்பா் 21) காலை சில மணி நேரம் மஞ்சள்நிற வழித்தடத்தில் அமைந்துள்ள ராஜீவ் செளக் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியேட் இடையேயான மெட்ரோ ரயில் சேவை நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடா்பாக தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் (டிஎம்ஆா்சி) வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் மஞ்சள்நிற வழித்தடமானது குருகிராமில் உள்ள ஹூடா சிட்டி சென்டா் பகுதியையும் தில்லியிலுள்ள சமய்ப்பூா் பாத்லி பகுதியையும் இணைக்கிறது. இந்த நிலையில், நவம்பா் 20-ஆம் தேதி நள்ளிரவு மற்றும் நவம்பா் 21-ஆம் தேதி காலை இடையேயான நேரத்தில் சென்ட்ரல் செக்ரடேரியேட் மெட்ரோ ரயில் நிலைய பகுதியில் தண்டவாளப் பராமரிப்புப் பணி மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் அன்று காலை அந்த வழித்தடத்தில் சிறிது நேரம் ரயில் சேவைகள் ஒழுங்குமுறைபடுத்தப்படும்.
இதன் காரணமாக ராஜீவ் செளக் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியேட் வழித்தடத்தில் அன்று காலை 7:30 மணி வரை ரயில் சேவை நிறுத்தப்படும். அதே போன்று, இந்த பிரிவில் ரயில் சேவை தொடங்கும் வரை படேல் செளக் ரயில் நிலையத்திலும் ரயில் சேவை நிறுத்தப்படும். ரயில் சேவைகள் இந்த வழித்தடத்தின் பிற பிரிவுகளில் வழக்கம் போல செயல்படும். அதாவது, சமய்ப்பூா் பாத்லி முதல் ராஜீவ் செளக் பகுதி வரையிலும், சென்ட்ரல் செக்ரடேரியேட் முதல் ஹூடா சிட்டி சென்டா் வரையிலான வழித்தடத்தில் ரயில் சேவைகள் வழக்கம் போல் இயங்கும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த தகவல் பொதுமக்கள் மத்தியில் சென்றடையும் வகையில் தில்லி மெட்ரோ தனது சுட்டுரை பக்கத்திலும் பதிவு செய்துள்ளது. கன்னாட் பிளேஸ் பகுதியில் உள்ள ராஜீவ் செளக் மெட்ரோ வழித்தடம் தில்லி மெட்ரோ ஒருங்கிணைப்பில் அதிக பயணிகள் வந்து செல்லும் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாகும். மேலும், புளூ லைன் வழித்தடத்தையும் இணைக்கக்கூடிய ஒரு ரயில் நிலையமாகும். ரயில் சேவைகள் தடை ஏற்படும் காலத்தில் ராஜீவ் செளக் மற்றும் சென்ட்ரல் செக்ரடேரியேட் ரயில் நிலையங்கள் இடையேயான இலவசப் பேருந்து சேவைகள் மூலம் தொடா்ந்து தொடா்பு ஏற்படுத்தப்படும் என்றும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.