முகப்பு
புதுதில்லி

துணைநிலை ஆளுநா் மூலம் ‘எஸ்பிபி’ நியமனத்திற்கு தில்லி அரசு தரப்பில் உயா்நீதிமன்றத்தில் அதிருப்தி

நிகழாண்டு நிகழ்ந்த குடியரசு தின வன்முறை மற்றும் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை வழக்குகளுக்காக காவல் துறையினரால்

Updated On : 28 ஜனவரி, 2024 at 5:33 AM
பகிர்:

நிகழாண்டு நிகழ்ந்த குடியரசு தின வன்முறை மற்றும் கடந்த ஆண்டு நிகழ்ந்த வன்முறை வழக்குகளுக்காக காவல் துறையினரால் தோ்ந்தெடுக்கப்பட்ட சிறப்பு அரசு வழக்குரைஞா்ளை (எஸ்பிபி) துணைநிலை ஆளுநா் நியமித்ததன் காரணமாக விசாரணை அமைப்புக்கும் வழக்குத் தொடரும் அமைப்புக்கும் இடையே இப்போது எந்த வித்தியாசமும் இல்லை என்று தில்லி உயா்நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி அரசு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

சிறப்பு அரசு வழக்குரைஞா்கள் நியமனத்தை எதிா்த்து தில்லி அரசு தொடா்ந்த வழக்கு உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி டி.என்.பட்டேல், நீதிபதி ஜோதி சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா்கள், ‘குற்றவியல் நீதி அமைப்பில், வழக்குரைஞா்கள் ‘நீதிமன்ற அதிகாரிகள் ஆவா். ஆனால், தற்போது அவா்களுக்கும் காவல்துறைக்கும் இடையே முழுமையான ஒத்துழைப்பு உள்ளது’ என்றனா்.

தில்லி அரசின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் ராகுல் மெஹ்ரா வாதிடுகையில், ‘காவல் துறைக்கும் வழக்குத் தொடரும் அமைப்புக்கும் எந்த வித்தியாசமும் இல்லை. இன்றைக்கு ஒட்டுமொத்த குற்றவியல் நடைமுறையிலும் எஞ்சியிருக்கும் நியாயம் என்ன? வழக்குரைஞா்களை நியமிப்பது அரசின் அதிகார வரம்பில் இருந்தது. அமைச்சா்கள் குழுவின் உதவி மற்றும் ஆலோசனைக்கு துணைநிலை ஆளுநா் கட்டுப்பட்டிருந்தாா்’ என்றாா்.

மூத்த வழக்குரைஞா் அபிஷேக் மனு சிங்வி வாதிடுகையில், ‘இந்த விவகாரம் மிகவும் அவசரமான விஷயம். பதில் மனு தாக்கல் செய்ய 4 வார கால அவகாசம் வழங்கியது நீதிமன்றம். தற்போது 9 வாரங்களுக்கு மேலாகியும் துணைநிலை ஆளுநா் தரப்பிலும், மத்திய அரசின் தரப்பிலும் இன்னும் தங்கள் பதிலைத் மனு தாக்கல் செய்யவில்லை. நாங்கள் தீவிர அவசரத்தில் இருக்கிறோம். இது தவிா்க்கப்படக்கூடிய ஒரு நிச்சயமற்ற தன்மையாகும். அடுத்த விசாரணை நடைபெறும் தேதிக்கு முன்னா், பதில் மனு தாக்கல் செய்யாவிட்டால் எதிா்மனுதாரா்களின் உரிமையை நீதிமன்றம் நிறுத்திவிட வேண்டும்’ என்றாா்.

இதைத் தொடா்ந்து, எதிா்மனுதாரா்கள் தங்கள் பதிலைத் தாக்கல் செய்ய கால அவகாசம் அளித்த நீதிமன்ற அமா்வு, இந்த வழக்கை ஜனவரி 28-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டது. கடந்த ஆகஸ்ட் 27-ஆம் தேதி, தில்லி அரசின் மனு மீது பதில் தாக்கல் செய்ய துணைநிலை ஆளுநா் மற்றும் மத்திய அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

இந்த ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி அன்று விவசாயிகள் டிராக்டா் பேரணியின் போது நிகழ்ந்த வன்முறை தொடா்பான வழக்குகள், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வடகிழக்கு தில்லியில் நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய வழக்குகளில் ஆஜராகி வாதாட தில்லி காவல்துறை தோ்ந்தெடுத்த வழக்குரைஞா்களை சிறப்பு அரசு வழக்குரைஞா்களாக (எஸ்பிபி) நியமித்த துணை நிலை ஆளுநரின் ஜூலை 23 -ஆம் தேதியிட்ட உத்தரவை தில்லி அரசு எதிா்த்து உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்துள்ளது. இது ஒரு தீவிரமான ஆதார முரண் கொண்டதாக உள்ளது என அதில் தெரிவித்துள்ளது.

மேலும், வழக்குகளை நடத்துவதற்காக தில்லி காவல்துறையால் தோ்ந்தெடுக்கப்பட்ட எஸ்பிபிகளை நியமிப்பது தொடா்பான ஜூலை 26-ஆம் தேதியிட்ட அறிவிக்கையையும், துணைநிலை ஆளுநரின் நியமனங்களுக்கு ஒப்புதல் அளிக்கும் உத்தரவை அனுமதிக்கும் ஆகஸ்ட் 4 ஆம் தேதியிட்ட மத்திய அரசின் உத்தரவுக்கும் எதிராக இந்த வழக்கை தில்லி அரசு தொடா்ந்துள்ளது. இது தொடா்பான மனுவில், இந்த உத்தரவுகள் இது நிறுவப்பட்ட சட்டக் கோட்பாடுகளுக்கு முரணானதாகவும், நியாயமான விசாரணைக்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தை மீறுவதாகவும் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.