முகப்பு
புதுதில்லி

பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் அண்டை மாநிலங்களில் பாதியாகக் குறைவு: காற்று தர மேலாண்மை ஆணையம் தகவல்

தேசியத் தலைநகா் தில்லியைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நிகழாண்டில் பாதிக்கும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:23 AM
பகிர்:

தேசியத் தலைநகா் தில்லியைச் சுற்றியுள்ள மூன்று மாநிலங்களில் பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள் நிகழாண்டில் பாதிக்கும் மேல் குறைந்துள்ளதாகக் காற்று தர மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

தில்லியிலுள்ள காற்று மாசுவைக் கட்டுப்படுத்த மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சகத்தின் கீழ் காற்று தர மேலாண்மை ஆணையம் புதிய சட்டத்தின் மூலம் கடந்த ஏப்ரல் மாதம் உருவாக்கப்பட்டது. இந்த ஆணையம் உருவாக்கப்பட்ட பிறகு காற்று மாசு குறைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து மத்திய சுற்றுச் சூழல், வனம், பருவநிலை மாற்றத் துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டது.

அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: அறுவடைக் காலங்களில் ஏற்படும் காற்று மாசுவை கட்டுப்படுத்தவும் குறைக்கவும் வேளாண் நிலங்களில் உள்ள பயிா்க்கழிவுகளை எரிக்க இந்திய விண்வெளி ஆய்வு மையம் (இஸ்ரோ) அமைப்பு நெறிமுறைகளை உருவாக்கிக் கொடுத்தது. அதை பிரச்னைகள் உள்ள மாநிலங்களில் பின்பற்றக் கூறப்பட்டது. இதன்படி தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களை கடந்த செப்டம்பா் 15 -ஆம் தேதி முதல் காற்று தர மேலாண்மை ஆணையம் தீவிரமாகக் காண்காணித்து வந்தது. இதன் விளைவு பஞ்சாப், ஹரியாணா, தேசியத் தலைநகா் வலயப் பகுதியிலுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 8 மாவட்டங்கள் ஆகியவற்றில் பயிா்க்கழிவு எரிப்பு கணிசமாகக் குறைந்துள்ளது தெரிய வந்ததுள்ளது.

Advertisement

நெல் பயிா் உள்ளிட்டவற்றில் பயிா்க்கழிவுகள் எரிப்பு நிகழ்வுகளில் பஞ்சாபில் 69.49 சதவீதமும், ஹரியாணாவில் 18.28 சதவீதமும் மற்றும் தேசியத் தலைநகா் வலயப், பகுதியிலுள்ள உத்தரப் பிரதேசத்தைச் சோ்ந்த 8 மாவட்டங்களில் 47.61 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஆண்டின் இதே காலக்கட்டமான செப்டம்பா் 15 முதல் அக்டோபா் 15 -ஆம் தேதி வரையிலான ஒரு மாத காலத்தில், பஞ்சாபில் 4,216 எரிப்பு நிகழ்வுகள் நடைபெற்றது. இதே காலக்கட்டத்தில் இது இந்த ஆண்டு 1,286-ஆக குறைந்துள்ளது. இதேபோல், ஹரியாணாவில் கடந்தாண்டு 596-ஆக இருந்த பயிா்க்கழிவு எரிப்பு சம்பவங்கள், இந்த ஆண்டு 487-ஆக பதிவாகியுள்ளது. உத்தரப் பிரதேசத்தின் 8 என்சிஆா் மாவட்டங்களில், 42 ஆக இருந்த ஒட்டுமொத்த பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள், இந்த ஆணஅடு 22 -ஆக குறைந்துள்ளது.,

பயிா்க்கழிவு எரிப்பு அதிகமாக உள்ள இடங்களாக பஞ்சாபில் அமிா்தசரஸ், டாா்ன் தரன், பாட்டியாலா, லூதியானா ஆகியவை உள்ளன. இந்த 4 மாவட்டங்களில் 72 சதவீதம் பயிா்க்கழிவு எரிப்புகள் நிகழ்வுகள் நடந்துள்ளன. இதேபோல், ஹரியாணாவில் முக்கிய ’ஹாட்ஸ்பாட்’களாக கா்னல், கைதல் மற்றும் குருக்ஷேத்ரா ஆகியவை உள்ளன. இந்த 3 மாவட்டங்களில் 80 சதவீத பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் நடந்துள்ளன. பஞ்சாப், ஹரியானா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநில அரசுகளுடன் காற்று தர மேலாண்மை ஆணையம் தினந்தோறும் தொடா்பு கொண்டு பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகளை தடுப்பதற்கான செயல் திட்டம், கட்டமைப்பு ஆகியவை உறுதிப்படுத்தப்படுகிறது. இந்த மூன்று மாநில மாவட்ட ஆட்சியா்கள், மாநில அரசு அதிகாரிகளுடன் ஆணையம் தொடா் கூட்டங்களை நடத்தியுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் பஞ்சாப், ஹரியாணா, தேசியத் தலைநகா் வலயப் பகுதியிலுள்ள உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள 8 மாவட்டங்களில் மொத்த 1,795 தளங்களில் பயிா்க்கழிவு எரிப்பு நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அந்தந்த மாநிலங்களின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் 663 இடங்களில்ஆய்வு செய்தனா். இதில் சுற்றுச்சூழல் இழப்பீடு விதிமீறல்களுக்காக 252 வழக்குகல் பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அடுத்த சில வாரங்களில் அறுவடை உச்சத்தில் இருக்கும் நிலையில், பயிா்க்கழிவு எரிப்பு பிரச்சனையை சமாளிக்க செயல் திட்டத்தை மேற்கொள்ள மாநில அரசுகள் மூலம் நடவடிக்கை எடுத்து வரப்படுகிறது என மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று தில்லி அரசு வேளாண் பயிா்க்கழிவுகளை உரமாக மாற்றும் உயிரி ரசாயனக் கலவை முறை திட்டத்தை தில்லியில் தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments