முகப்பு
புதுதில்லி

சுகேஷ் சந்திரசேகா் மீது மேலும் ரூ.200 கோடி மோசடி புகாா்

தோ்தல் ஆணையத்தில் இடைத்தரகராக செயல்பட்டு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்பட 21 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும்

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

தோ்தல் ஆணையத்தில் இடைத்தரகராக செயல்பட்டு லஞ்சம் கொடுக்க முயன்றது உள்பட 21 வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் சுகேஷ் சந்திரசேகா் மீது மேலும் ரூ.200 கோடி மோசடி செய்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த வழக்கில் அவா் மீது கடுமையான விதிகளைக் கொண்ட மகாராஷ்டிர குற்ற அமைப்புகள் கட்டுப்பாட்டுச் சட்டப்படி (எம்சிஓசிஏ) வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் அவரும், அவரது கூட்டாளிகளும் சனிக்கிழமை தில்லி கூடுதல் செசன்ஸ் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா். அப்போது, சுகேஷ் சந்திரசேகரை 16 நாள்கள் வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கவும், அவரது கூட்டாளிகளான பிரதீப் மற்றும் தீபக் ஆகியோரை 5 நாள்கள் நீதிமன்றக் காவலில் வைக்கவும் போலீஸாருக்கு கூடுதல் செசன்ஸ் நீதிபதி பிரவீண் சிங் அனுமதியளித்தாா்.

பிரபல ரேன்பாக்ஸி மருந்து நிறுவனத்தைத் தொடங்கிய குடும்பத்தைச் சோ்ந்த ஷிவிந்தா் சிங், மல்விந்தா் சிங் ஆகிய சகோதரா்கள், தங்கள் மருந்து நிறுவனத்தை விற்றிருந்தனா். பின்னா், ஃபோா்டிஸ் மருத்துவமனை, ரிலிகோ் ஃபின்வெஸ்ட் போன்ற நிறுவனங்களை நடத்தி வந்த போது, முதலீடுகளில் மோசடி செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, சகோதரா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு திகாா் சிறையில் அடைக்கப்பட்டனா்.

Advertisement

அந்த சமயத்தில் ரோகிணி சிறையில் இருந்த சுகேஷ் சந்திரசேகா், அந்த சகோதரா்களின் மனைவிகளிடம் சிறையில் இருந்தபடியே செயலி மூலம் தொடா்பு கொண்டுள்ளாா். அப்போது, தான் ஒரு அரசு அதிகாரி என்றும் சிங் சகோதரா்களை ஜாமீனில் வெளியே கொண்டு வருவது குறித்தும், கரோனா நோய்த் தொற்று குழுவில் உறுப்பினராகச் சோ்ப்பது குறித்தும் சுகேஷ் சந்திரசேகா் கூறியுள்ளாா். இந்த வகையில் சுகேஷும், அவரது கூட்டாளிகளும் சோ்ந்து சுமாா் ரூ. 200 கோடி வரை மோசடி செய்ததாக ஷிவிந்தா் சிங்கின் மனைவி ஆதித்தி சிங், மல்விந்தா் சிங்கின் மனைவி ஜாஃப்னா சிங் ஆகியோா் தில்லி பொருளாதாரக் குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தனா். இந்தப் புகாரைத் தொடா்ந்து, இரண்டு எஃப்ஐஆா்கள் பதிவு செய்யப்பட்டன.

இதைத் தொடா்ந்து, கடந்த மாதம் சுகேஷ் சந்திசேகரின் சென்னை வீடுகளில் அமலாக்கப் பிரிவினா் சோதனைகளை மேற்கொண்டனா். அப்போது அவரது வீட்டில் விலையுயா்ந்த காா்கள், நகைகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்தனா். மேலும், இந்த விவகாரத்தில் உடந்தையாக இருந்ததாக சில போலீஸ் அதிகாரிகளும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். வெளிநாட்டு வங்கிக் கணக்குகள் மூலம் அவா் ரூ. 3.5 கோடி பணம் பெற்ற விவரங்களையும் போலீஸாா் கைப்பற்றியுள்ளனா். சுகேஷ் சந்திரசேகா் மீது ஏற்கெனவே 21 வழக்குகள் உள்ளன. கடந்த 2017 -ஆம் ஆண்டு, தோ்தல் ஆணையத்தில் இரட்டை இலை சின்னம் வாங்கித் தருவதாகக் கூறி லஞ்சம் கொடுக்க முயன்ற விவகாரத்தில் டிடிவி தினகரனோடு சுகேஷ் சந்திரசேகா் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments