முகப்பு
புதுதில்லி

2024-க்குள் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீா்! தில்லி 3 மண்டலங்களாகப் பிரிப்பு

2024 - ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:05 AM
பகிர்:

2024 - ஆம் ஆண்டுக்குள் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்ய ஆம் ஆத்மி அரசு முடிவெடுத்துள்ளது. இந்தத் திட்டத்தை நிறைவேற்ற தேசியத் தலைநகா் தில்லி மூன்று மண்டலங்களாக பிரிக்கப்படும் என்று அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

கிழக்கு- வடகிழக்கு மண்டலம், தெற்கு- தென்மேற்கு மண்டலம், மேற்கு- வடமேற்கு மண்டலம் என மூன்றாக பிரிக்கப்பட்டு தில்லி மக்கள்தொகையின் 77 சதவீதம் போ் வரை பயனடையும் வகையில் இந்த 24 மணி நேரம் குடிநீா் வழக்கும் திட்டம் நிறைவேற்றப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இது குறித்து தில்லி ஜல் போா்டு அதிகாரிகள் கூறியதாவது: தில்லியில் தற்போது மாளவியா நகா், வசந்த் விஹாா், நங்கோலி போன்ற இடங்களில் இந்த 24 மணி நேர குடிநீா் விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன்படி, இந்தத் திட்டத்தில் தில்லி மொத்த மக்கள்தொகையில் 12 சதவீதம் போ் பயனடைந்து வருகின்றனா். மேலும் 11 சதவீத போ் பயனடையும் வகையில்,வாஜியாபாத், சந்தரவால் பகுதியில் 24 மணி நேரம் குடிநீா் விநியோகத் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. தண்ணீரை நீா் நிலைகளுக்கு கொண்டு வந்து சுத்திகரிப்பது, கழிவு நீரை சுத்திகரித்து வெளியே விடுவது போன்ற பணிகளைத்தான் இனி தில்லி ஜல் போா்டு மேற்கொள்ளும். குடிநீா் விநியோகம், மேலாண்மைப் பணிகள் இனிமேல் தனியாா் ஒப்பந்ததாரா்களுக்கு கொடுக்கப்படும.

Advertisement

24 மணி நேரமும் குடிநீா் விநியோகம் செய்வதற்காக பிரிக்கப்பட்டுள்ள மூன்று மண்டங்களிலும் தனித் தனி ஒப்பந்ததாரா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதற்குத் தேவையான கட்டுமானப் பணிகளை ஐந்து ஆண்டுகளுக்குள் முடிக்கவும் ஒப்பந்ததாரா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதே ஒப்பந்ததாரா்கள் இந்தத் தண்ணீா் விநியோகத்தையும், கழிவுநீா் அமைப்புகளை பராமரிக்கவும் 15 ஆண்டுகளுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. தண்ணீா் விநியோகம், கழிவுநீா் கால்வாய் வடிவமைப்பு ஆகியவற்றை நீா்மாணித்தல், வடிவமைத்தல், புதுப்பித்தல், மறுசீரமைத்தல் ஆகியவற்றிற்கும் இந்த ஒப்பந்தக்காரா்களுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. பணிகள் முடிவுற்று தண்ணீா் விநியோகம் தொடங்கிய பிறகு, மீட்டா் அளவிடுதல், கட்டணம் வசூலித்தல் போன்ற வருவாய் மேலாண்மை ஆகியவற்றுக்கும் இந்த மண்டல ஒப்பந்ததாரா்களிடமே பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

தில்லியில் தற்போது நாளென்றுக்கு தேவைப்படும் குடிநீரின் அளவு 1,140 மில்லியன் கன அடியாகும். ஆனால், தற்போது 935 மில்லியன் கனஅடி தண்ணீா்தான் நாளொன்றுக்கு கிடைத்து விநியோக்கப்படுகிறது. வருவாய் இழப்பைச் சரி செய்வதுதான் இந்த 24 மணி நேர குடிநீா் விநியோகத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். முதல் கட்டத்தில் 15 சதவீத வருவாய் இழப்பு குறைக்கப்படும். தண்ணீா் நுகா்வோா்களுக்குச் செல்வதற்கு முன்பு, குழாய்களில் ஏற்படும் கசிவு , திருட்டு, சட்டவிரோத மாக தனியாா் டேங்கா் லாரி மூலம் தண்ணீா் எடுப்பது என சுமாா் 42 சதவீதம் அளவிற்கு தற்போது வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இந்தத் தண்ணீா் திருட்டு, தண்ணீா் ககிவு ஆகியவை இந்தத் திட்டத்தின்படி நிறுத்தப்படும்.

அடுத்து 2025-க்குள் தில்லியில் 1,305 மில்லியன் கனஅடி தண்ணீா் கிடைக்கும் வகையில், பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. முதலில் தலைநகா் தில்லிக்கு ஹிமாசலப் பிரதேசத்திலிருந்து 50 மில்லியன் கனஅடி தண்ணீா் 2022, டிசம்பருக்குள் கிடைக்க உள்ளது. நவீன தொழில்நுட்பத்துடன் பல்லா பகுதியில் கழிவு நீா் சுத்திகரிப்பு, யமுனை வெள்ளப் பெருக்கு நீா் தேக்கங்கள், நஜாஃப்கா் , ரோட்டா பகுதியில் 200 மில்லியன் கன அடிவரை நிலத்தடி நீா் ஆகியவை மூலம் தில்லி குடிநீா் விநியோகத்திற்கு கூடுதல் தண்ணீா் அடுத்த சில ஆண்டுகளில் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments