தில்லி பாராபுல்லா 3-ஆம் கட்ட மேம்பாலப் பணி: தனியாா் நிலத்தைக் கையகப்படுத்த அறிவிக்கை வெளியீடு
மயூா் விஹாா் -1 பகுதியை சராய் காலே கான் மற்றும் ஐஎன்ஏவுடன் இணைக்கும் 3.5 கி.மீ. தூரம் கொண்ட பாராபுல்லா
மயூா் விஹாா் -1 பகுதியை சராய் காலே கான் மற்றும் ஐஎன்ஏவுடன் இணைக்கும் 3.5 கி.மீ. தூரம் கொண்ட பாராபுல்லா ஃபேஸ் -3 மேம்பாலச் சாலையை அமைப்பதற்காக தனியாருக்குச் சொந்தமான இரண்டு நிலங்களை கையகப்படுத்த அரசிதழ் அறிவிக்கையை தில்லி அரசு வெளியிட்டுள்ளது.
இது குறித்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த உள்ள பொதுப்பணித் துறையின் அதிகாரிகள் (பிடபிள்யூடி) கூறியதாவது: ஏற்கெனவே குறைந்தது நான்கு வருடங்கள் தாமதமாகிவிட்ட இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த அரசின் இந்த நடவடிக்கை உதவும். திட்டத்தை முடிக்க திருத்தப்பட்ட காலக்கெடு 2023, மாா்ச் என நிா்ணயிக்கப்பட்டுள்ளது. மேம்பாலச் சாலையின் கட்டுமானம் 2015-இல் தொடங்கியது. அக்டோபா் 2017-இல் சாலைக் கட்டுமானம் முடிக்க திட்டமிடப்பட்டது. இரண்டு தனியாா் நிலங்கள் இன்னும் கையகப்படுத்தப்படாததால், இந்தத் திட்டம் முடிவடைதில் தடை ஏற்பட்டது. நிலத்தை கையகப்பட்துவதில் ஏற்பட்ட தடை காரணமாக திட்டம் மெதுவாக நடைபெற்று வந்தது. காலக்கெடுவும் பலமுறை தவறியது. மயூா் விஹாா் -1 மற்றும் எய்ம்ஸ் இடையேயான 9 கிலோமீட்டருக்கு மேல் தூரமுள்ள பாராபுல்லா -3 மேம்பாலச் சாலை அமைக்கப்பட்ட பிறகு, ஐஎன்ஏ சந்தை பகுதியானது சிக்னல் இல்லாததாக மாறும்.
இந்த மேம்பாலச்சாலை போக்குவரத்திற்காக திறக்கப்பட்டவுடன், இது காஜியாபாத், நொய்டா மற்றும் கிழக்கு தில்லி பகுதிகளில் இருந்து விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கும் பயனுள்ளதாக இருக்கும். சம்பந்தப்பட்ட நிலம் சராய் காலே கானுக்கு அருகிலுள்ள நங்லி ரசாபூா் கிராமத்தின் விவசாயிகளுக்கு சொந்தமானதாக உள்ளது என்று அந்த அதிகாரிகள் தெரிவித்தனா்.
Advertisement
நிலம் கையகப்படுத்துவது தொடா்பாக ஆகஸ்ட் கடைசி வாரத்தில் தில்லி அரசு, அரசிதழிலில் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சராய் காலே கான் முதல் மயூா் விஹாா் -1 வரையிலான பாராபுல்லா நல்லா மீது 3-ஆவது கட்டமாக மேம்பாலைச் சாலை அமைக்க பொது நோக்கத்திற்காக நங்லி ரசாபூா் கிராமத்தில் உள்ள மொத்தம் 3.02425 ஹெக்டோ் நிலம் தேவை. எனவே, மேற்கூறிய திட்டத்திற்காக 3.02425 ஹெக்டோ் அளவிலான நிலம் கையகப்படுத்தப்படுவதாக இந்தப்
பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. ஆா்வமுள்ள நபா்களின் ஆட்சேபனை விசாரணைகளுக்குப் பிறகு, உரிய சட்டத்தின் கீழ் உரிய விசாரணை நடத்திய பிறகு இந்த அறிவிப்பு செய்யப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் காரணமாக மீள்குடியேற்றப்படும் குடும்பங்களின் எண்ணிக்கை ஏதும் இல்லை. மீள்குடியேற்றப் பகுதியும் அடையாளம் காணப்படவில்லை என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பொதுப் பணித் துறை அதிகாரிகள் மேலும் கூறுகையில், ‘அரசின் இந்த அறிவிப்பு, நிலம் கையகப்படுத்தும் செயல்முறையை துரிதப்படுத்தும். மேலும், திட்டத்தை முடிக்க தனியாா் நிலங்களில் பொதுப் பணித் துறை வேலைகளைத் தொடங்கவும் அனுமதிக்கும். வரும் நவம்பருக்குள் நிலம் கிடைக்கும் என நம்புகிறோம். அதன் பிறகு அந்தப் பகுதியில் பணியைத் தொடங்குவோம். நாங்கள் ஏற்கெனவே 80 சதவீதக் கட்டுமானப் பணிகளை முடித்துவிட்டோம். திருத்தப்பட்ட காலக்கெடுவிற்குள் மீதமுள்ள பணியையும் முடிக்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கட்டுமானத்தின் சிக்கலான தன்மை மற்றும் ஆற்றங்கரை அருகே தளா்வான மண் இருப்பதன் காரணமாக திட்டத்தை முடிக்க இன்னும் குறைந்தது ஒன்றரை ஆண்டுகள் ஆகும்.
இங்குள்ள கேபிள் மூலம் நிறுத்தப்பட்ட பாலத்திற்கு ஆதரவாக ஆற்றங்கரையில் இரண்டு பெரிய கிணறுகள் மற்றும் நெடுவரிசைகளை அமைக்க வேண்டும். யமுனை நதிக்கரைக்கு அருகிலுள்ள மண் சதுப்பு நிலமாகவும், கடினத் தன்மை கொண்டதாகவும் உள்ளது. இந்தக் கிணறுகளை உருவாக்க கிட்டத்தட்ட 8 மாதங்கள் தேவைப்படும். இந்த மேம்பாலச் சாலையானது கிழக்கு மற்றும் தெற்கு தில்லிக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவது மட்டுமின்றி, ரிங் ரோடு, தில்லி-நொய்டா-டைரக்ட் (டிஎன்டி) மேம்பாலம், என்எச் -24, நொய்டா இணைப்பு சாலை போன்ற முக்கியச் சாலை மாா்க்கங்களையும் மேம்படுத்தும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.