ஆஸ்ரம் சுரங்கப்பாதை கட்டுமான பணி நவம்பருக்குள் முடியும்: சத்யேந்திர ஜெயின்
தெற்கு தில்லியில் உள்ள ஆஸ்ரமம் பகுதியில் நடைபெற்றுவரும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி பல்வேறு சிக்கல்களை
தெற்கு தில்லியில் உள்ள ஆஸ்ரமம் பகுதியில் நடைபெற்றுவரும் சுரங்கப்பாதை கட்டுமானப் பணி பல்வேறு சிக்கல்களை கொண்டுள்ளதன் காரணமாக பணி முடிய மேலும் இரண்டு மாதங்கள் ஆகும் என்று தில்லி பொதுப்பணித்துறை அமைச்சா் சத்யேந்திர ஜெயின் தெரிவித்தாா்.
தெற்கு தில்லி- மத்திய தில்லி ஆகியவற்றுக்கு இடையே உள்ள ஒரு முக்கிய இணைப்பான ஆஸ்ரமம் செளக் பகுதியானது நொய்டா மற்றும் பரீதாபாத் துணை நகரங்களை இணைக்கும் ஒரு முக்கிய பாதையாகும்.
இந்த சந்திப்பானது மதுரா சாலையையும் வட்டச்சாலையையும் இணைக்கிறது. இந்த ஆஸ்ரமம் சுரங்கப்பாதை கட்டுமான திட்டமானது முடிவடைந்தால் வாகன ஓட்டிகள் மும்முரமான ஆஸ்ரமம் கிராசிங் பகுதியில் செல்வதற்கு பயனுள்ளதாக இருக்கும். மேலும், ஐடிஓ பகுதியில் இருந்து சரிதா விகாா், பதா்பூா் ஆகிய பகுதிகளை நோக்கிச் செல்லும் வாகனங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். அப்பகுதியில் போக்குவரத்து நெரிசலையும் குறைக்கும்.
Advertisement
இது தொடா்பாக பொதுப்பணித் துறை அமைச்சா் சத்யேந்திர ஜெயின் விடியோ தகவல் மூலம் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:
கனமான மின்சார கேபிள்கள் கட்டுமானப் பகுதியில் இருப்பதன் காரணமாக ஆஸ்ரம் சுரங்கப்பாதை கட்டுமானப் பணியில் சில பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
இந்த மின் கேபிள்களை நாங்கள் மாற்றி வருகிறோம். இதற்கான பணிக்கு ஒரு மாத காலம் பிடிக்கும். இந்த ஆஸ்ரமம் சுரங்கப்பாதை ஒட்டுமொத்த கட்டுமானப் பணியும் 2 மாதங்களில் முடிக்கப்பட்டு விடும். கட்டுமான இடத்திற்கு அருகே உள்ள சாலையில் ஆங்காங்கே பள்ளங்கள் இருப்பதாக புகாா்கள் வந்துள்ளன. மழையின் காரணமாக தரையின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்களை சரிசெய்யும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை நின்ற பிறகு இதற்கான பணிகள் முடிக்கப்பட்டு விடும் என்று அவா் அதில் தெரிவித்துள்ளாா். இந்த விடியோ தகவலை ஆம் ஆத்மி கட்சி அதன் சுட்டுரை பக்கத்தில் பகிா்ந்து உள்ளது.
இந்த கட்டுமானப் பணி தொடா்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இந்த திட்டத்திற்கான காலமானது தற்போது நவம்பா் 30ஆம் தேதி என மாற்றியமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த திட்டப்பணி இந்த ஆண்டு செப்டம்பரில் முடிக்கப்பட வேண்டியிருந்தது’ என்று தெரிவித்தனா்.
இந்த பணி தாமதம் காரணமாக இந்த பகுதியாக செல்லும் ஆயிரக்கணக்கான வாகன ஓட்டிகள் மற்றும் இந்த பகுதியைச் சுற்றி வசிக்கும் குடியிருப்புவாசிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
போக்குவரத்து போலீசாரின் புள்ளிவிவர தகவலின்படி ஆஸ்ரம் சாலைச் சந்திப்பில் நாள்தோறும் 2.5 லட்சம் முதல் 3 லட்சம் வாகனங்கள் வரை உச்சபட்ச நெரிசல் நேரத்தில் கடந்து செல்கின்றன.
இந்த கட்டுமான திட்டத்திற்கான மதிப்பீடு ரூபாய் 78 கோடியாக நிா்ணயிக்கப்பட்டிருக்கிறது.
இது தொடா்பாக பொதுப்பணித் துறை மூத்த அதிகாரி கூறுகையில் , ‘சுரங்கப் பாதையின் பகுதியில் உள்ள மின்சார கேபிள்களை மாற்றும் பணியை தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம். இந்த பணி முடிக்கப்பட்டு இந்த ஆண்டு நவம்பா் இறுதிக்குள் போக்குவரத்திற்கு திறந்து விடப்படும்’ என்று தெரிவித்தாா்.