நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.2,427 கோடி மானியம் விடுவிப்பு: 11 மாநிலங்களில் தமிழகத்திற்கு ரூ.267.90 கோடி ஒதுக்கீடு
11 மாநிலங்களில் உள்ள 10 லட்சம் அதற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதித்துறை
11 மாநிலங்களில் உள்ள 10 லட்சம் அதற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதித்துறை ரூ.2,427 கோடியை மானியமாக விடுவித்துள்ளது. இதில் தமிழக நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ. 267.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
15- ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி 2021 முதல் 2026 வரையிலான ஐந்து நிதியாண்டிற்கு உள்ளாட்சி அமைப்புகளின் மேம்பாட்டிற்கு இணைப்பு மானியத்தை மத்திய அரசு வழங்குகிறது. இதில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளும் நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளும் தனித்தனியாக பிரிக்கப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த ஆகஸ்ட் 31 ஆம் தேதி 25 மாநிலங்களுக்கு மானியம் விடுவிக்கப்பட்டது.
நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் 10 லட்சம் மக்கள் தொகைக்கு மேல் என்றும் கன்டோன் மென்ட் வாரியம் உள்ளிட்ட பத்து லட்சம் மக்கள் தொகைக்கு கீழ் என இரண்டு வகையாக பிரிக்கப்பட்டு மானியம் வழங்கப்படுகிறது.
Advertisement
இதன்படி 11 மாநிலங்களின் கன்டோன்மென்ட் வாரியம் உள்ளிட்ட பத்துலட்சம் மக்கள் தொகைக்கு குறைவான நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வெள்ளிக்கிழமை ரூ.2,427 கோடியை விடுவித்துள்ளது. இது 2021-22 ஆம் ஆண்டுக்கான மானியத்தின் முதல் தவணை தொகை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தமிழகத்துக்கு ரூ.267.90 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மற்ற மாநிலங்களில் உத்தரப்பிரதேசத்திற்கு ரூ. 741.00 கோடி, மத்திய பிரதேசத்திற்கு ரூ.299.40 கோடி என தமிழகத்தை விட அதிகஅளவில் பெற்றுள்ளன. மேலும் ஒடிஸாவிற்கு ரூ.246.60 கோடியும் கா்நாடக மாநிலத்துக்கு ரூ. 225 கோடியும் விடுவிக்கப்பட்டுள்ளது.
இந்த மானியத்தை மாநிலங்கள் 60 சதவீதம் குறிப்பிடத்தக்க பணிகளுக்கான மானியமாக பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த 60 சதவீதத்தை இரண்டாகப் பிரித்து 50 சதவீத மானியத்தை மத்திய நகா்ப்புற அமைச்சக தர மதிப்பீடுகள் பணிகள், சுகாதாரம், திடக்கழிவு மேலாண்மை போன்றவைகளுக்கு செலவழிக்க அனுமதிக்கப்படுகிறது. மீதி 50 சதவீதத்தை குடிநீா், மழைநீா் சேகரிப்பு பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு நிபந்தனை விதித்துள்ளது.
சுகாதாரம், குடிநீா் வசதி போன்றவற்றுக்கு மத்திய, மாநில அரசுகள் ஒதுக்கீடு செய்யும் நிதியை விட கூடுதலாக நிதி கிடைப்பதை உறுதி செய்யவும், மக்களுக்கு தரமான சேவைகள் வழங்கவும் இந்த மானியங்கள் வழங்கப்படுகிறது.
இந்த மானியத்தை, மத்திய அரசிடம் இருந்து பெற்ற தேதியிலிருந்து 10 நாட்களுக்குள், நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மாநிலங்கள் வழங்க வேண்டும். 10 நாட்களுக்கு மேல் தாமதம் ஏற்பட்டால், மானியத்தை வட்டியுடன் சோ்த்து மாநில அரசு செலுத்த வேண்டும் என்கிற விதிமுறைகளும் இதில் அடக்கம்.