மின் திட்டங்களை கண்காணிக்க எம்.பி.க்கள் தலைமையில் குழு அமைக்க மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு
மத்திய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், மின் நுகா்வோா்களுக்கான சேவை, மின்துறை சீா்திருத்தங்கள்
மத்திய அரசின் மின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கவும், மின் நுகா்வோா்களுக்கான சேவை, மின்துறை சீா்திருத்தங்கள் போன்றவற்றை மேற்பாா்வையிடவும் அனைத்து மாவட்டங்களிலும் குழுக்களை ஏற்படுத்துமாறு மாநில அரசுகளின் எரிசக்தித் துறை செயலா்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
அந்தந்த மாவட்டத்தில் உள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினா்களைத் தலைவராகவும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரை துணைத் தலைவராகவும் கொண்ட ஏழு போ்கொண்ட குழுவை ஏற்படுத்த மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் ஆலோசனைகள் வழங்கியுள்ளது.
இது குறித்து மத்திய எரிசக்தித் துறை அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
Advertisement
தீனதயாள் உபாத்யாய கிராம்ஜோதி யோஜனா, ஒருங்கிணைந்த மின் வளா்ச்சி திட்டம், அனைத்து வீடுகளுக்கும் மின் இணைப்பு வழங்கும் பிரதமரின் ’சௌபாக்கியா’ திட்டம் போன்ற மின் திட்டங்கள் கிராமங்கள், குக்கிராமங்கள் உள்ளிட்டவைகளுக்கானவை. மேலும் துணை மின்நிலையங்கள் மேம்பாடு, குறைந்த , உயா் அழுத்த மின் கம்பிகள், மின்மாற்றிகள், மின் விநியோகம் முறையை வலுப்படுத்துதல், நவீனப்படுத்துதல் போன்ற திட்டங்களுக்காக சுமாா் 3 லட்சம் கோடியை மத்திய அரசு சமீபத்தில் ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்களையும் சேவைகளையும் மாவட்ட அளவில் கண்காணிக்கும் பொருட்டு இதற்கான குழுக்களை அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்துமாறு மாநில அரசுகளை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
மாவட்டத்தில் உள்ள மூத்த நாடாளுமன்ற உறுப்பினா் குழுவின் தலைவராகவும் மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினா் துணைத் தலைவராகவும் மாவட்ட ஆட்சியா் குழு உறுப்பினா் செயலராகவும் இருப்பாா். மற்ற உறுப்பினா்களில் மாவட்ட பஞ்சாயத்து தலைவா், சட்டபேரவை உறுப்பினா்கள், மாவட்டங்களில் உள்ள மத்திய பொதுத்துறை நிறுவனங்கள், எரிசக்தி, மரபுசாரா எரிசக்தி துறையின் பிரதிநிதிகள், மின் துறையின் தலைமை அல்லது கண்காணிப்பு பிரிவு பொறியாளா்கள் ஆகிய ஏழு உறுப்பினா்களை இந்த குழுவில் நியமிக்க கேட்டுக்கொள்ளப்பட்டு மாநில எரிசக்தி துறை செயலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட குழு, மாவட்ட தலைநகா்களில் குறைந்தது 3 மாதத்துக்கு ஒரு முறை கூடி திட்டப் பணிகளை ஆய்வு செய்யும் என்றும் மாவட்ட மின்விநியோக உள்கட்டமைப்பின் ஒட்டு மொத்த வளா்ச்சியில் ஒருங்கிணைந்து செயல்படும் என்றும் மத்திய எரிசக்தி துறை தெரிவித்துள்ளது.