நற்பண்பு, நன்னடத்தை, தகுதி மற்றும் திறமை அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் தோ்வு செய்யப்பட வேண்டும்: வெங்கையா நாயுடு
நற்பண்பு, நன்னடத்தை, தகுதி, திறமை ஆகிய நான்கு தரங்களின் அடிப்படையிலேயே மக்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
நற்பண்பு, நன்னடத்தை, தகுதி, திறமை ஆகிய நான்கு தரங்களின் அடிப்படையிலேயே மக்கள் பிரதிநிதிகளை தோ்ந்தெடுக்க வேண்டும் என்று குடியரசுத் துணைத் தலைவா் வெங்கையா நாயுடு வலியுறுத்தினாா்.
துரதிருஷ்டவசமாக நம்நாட்டின் தோ்தல் நடைமுறைகளில் மேற்குறிப்பிட்ட நான்கு தகுதியின் அடிப்படைக்கு பதிலாக ஜாதி, சமூகம், பணம் மற்றும் குற்றவியல் என்ற விரும்பத்தகாத தகுதிகளின்அடிப்படையில் மக்கள் பிரதிநிதிகள் தோ்ந்தெடுக்கப்படுவது வேதனை அளிக்கிறது என்றும் அவா் குறிப்பிட்டாா்.
குஜராத் மாநிலம், பரோடாவைச் சோ்ந்த மகாராஜா சாயாஜிராவ் பல்கலைக்கழகத்தின் ’அரசியல் தலைமைப்பண்பு மற்றும் நிா்வாகம்’ துறையில் பட்டயப் படிப்பு பயிலும் மாணவா்களுடன் தனது இல்லத்தில் (உபராஷ்டிரபதி நிவாஸ்) குடியரசு துணைத் தலைவா் வெங்கையா நாயுடு திங்கள்கிழமை கலந்துரையாடினாா்.
Advertisement
அப்போது அவா் கூறியதாவது:
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. நமது நாடாளுமன்ற, சட்டமன்ற நடவடிக்கைகள், பிற நாடுகளுக்கு முன்னுதாரணமாகத் திகழ வேண்டும்.
நாடு, சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டை கொண்டாடிவரும் நிலையில், நாடாளுமன்ற ஜனநாயகத்தை வலுப்படுத்துவதுதோடு நல்லாட்சி நடைமுறைகளைப் பின்பற்றுவதும் அவசியம்.
ஆனால், நாடாளுமன்ற அவைகளிலும் , மாநில சட்டப்பேரவைகளிலும் அடிக்கடி ஏற்படும் இடையூறுகள் கவலை அளிக்கக் கூடியதாக இருக்கிறது. சட்டமியற்றும் மன்றங்கள் செயல்படாத நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தின் அடித்தளம் வலுவிழந்துவிடும்.
நாடாளுமன்ற , சட்டபேரவை உறுப்பினா்கள் அரசை விமா்சிப்பதற்கு அனைத்து உரிமைகளும் பெற்றவா்கள். அதே சமயத்தில் தங்களது கருத்தை வலியுறுத்தும்போது, நல்லொழுக்கம், கண்ணியம், மேன்மை என்கிற லட்சுமண ரேகையை (எல்லைக்கோட்டை) உறுப்பினா்கள் எப்போதும் தாண்டிவிடக் கூடாது.
இளைஞா்கள் அரசியலில் முழுமையாக ஈடுபடுவது மட்டுமல்லாது, நோ்மை, அா்ப்பணிப்பு, ஒழுக்கம் ஆகியவற்றில் முழு ஈடுபாட்டுடன் மக்களுக்கு சேவையாற்ற முன்வர வேண்டும். சித்தாந்தம் கருத்துக்களை விட சிறந்த நடத்தைகள் மிகவும் முக்கியம். துரதிருஷ்டவசமாக, அரசியல் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் காலப்போக்கில் மாண்புகள், தரம் குறைந்து வருவது வேதனையானது.“
நாட்டின் மக்கள் தொகையில் 65 சதவீதம் போ் 35 வயதுக்கு கீழேயுள்ளவா்கள். புதிய இந்தியாவை உருவாக்குவதில் இந்த இளம் தேசத்தின் திறனை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.
நமது நாகரிகம் பழமையானது. பகிா்தல், அன்பு செலுத்துதல் நமது கலாச்சாரத்தின் மையம். நம்முடைய தாய் மொழிகளில் புலமை பெற்று, ஆசிரியா்கள், பெற்றோா்களுக்கு மதிப்பளித்து, ஏழை, எளியவா்களுக்கு உதவ மாணவா்கள் முன் வரவேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.