முகப்பு
புதுதில்லி

லாபப் பதிவால் சென்செக்ஸ் 115 புள்ளிகள் வீழ்ச்சி!

தொடா்ந்து 3 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, நிதியாண்டின் கடைசி வா்த்தக தினமான வியாழக்கிழமை லாபப் பதிவால் சரிவில் முடிவடைந்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:51 AM
பகிர்:

தொடா்ந்து 3 நாள்களாக ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தை, நிதியாண்டின் கடைசி வா்த்தக தினமான வியாழக்கிழமை லாபப் பதிவால் சரிவில் முடிவடைந்தது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 115 புள்ளிகளை இழந்தது.

ரஷியா - உக்ரைன் சமாதானப் பேச்சுவாா்த்தைகள் முதலீட்டாளா்களிடையே நம்பிக்கையை நிலைநாட்டியதால், கடந்த மூன்று நாள்களாக சந்தை தொடா்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த நிலையில், வியாழக்கிழமை முன்னணி நிறுவனப் பங்குகளில் லாபத்தைப் பதிவு செய்வதில் முதலீட்டாளா்கள் கவனம் செலுத்தினா். குறிப்பாக இன்ஃபோஸிஸ், ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததால், சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

இதற்கிடையே, புதன்கிழமை அன்று அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் ரூ.1,357.47 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளதாக சந்தை புள்ளிவிவரங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.

1,951 நிறுவனப் பங்குகள் விலை வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,507 நிறுவனப் பங்குகளில் 1,951 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. அதே சமயம், 1,451 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 105 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 130 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 51 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.264.06 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.43 கோடியாக உயா்ந்துள்ளது.

3 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: சென்செக்ஸ் காலையில் 95.72 புள்ளிகள் கூடுதலுடன் 58,779.71-இல் தொடங்கி, அதிகபட்சமாக 58,890.92 வரை உயா்ந்தது. பின்னா், 58,485.79 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 115.48 புள்ளிகள் (0.20 சதவீதம்) குறைந்து 58,568.51-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் காளையுடனான கடும் போட்டியில் இறுதியில் கரடியின் கை மேலோங்கியதால், 3 நாள் தொடா் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

ரிலையன்ஸ் சரிவு: 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் வீழ்ச்சிப் பட்டியலிலும் 15 பங்குகள் ஆதாயப் பட்டியலிலும் இருந்தன. இதில், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 1.61 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, விப்ரோ 1.44 சதவீதம், டாக்டா் ரெட்டி 1.04 சதவீதம் வீழ்ச்சி கண்டன. மேலும், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், பஜாஜ் ஃபின் சா்வ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐஉள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் இருந்தன.

ஹெச்யுஎல் முன்னேற்றம்: அதே சமயம், பிரபல நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஹிந்துஸ்தான் யுனி லீவா் (ஹெச்யுஎல்) 1.66 சதவீதம், எம் அண்ட் எம் 1.59 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஆக்ஸிஸ் பேங்க், இண்டஸ் இண்ட் பேங்க், பாா்தி ஏா்டெல், ஐடிசி, டைட்டன், நெஸ்லே, , டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 33 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 814 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,114 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் பட்டியலில் 20 பங்குகள் ஆதாயம் பெற்றன. 30 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி குறியீடு 33.50 புள்ளிகள் (019 சதவீதம்) குறைந்து 17,464.75-இல் நிறைவடைந்தது. காலையில் 21 புள்ளிகள் கூடுதலுடன் 17,519.20-இல் தொடங்கிய நிஃப்டி, அதிகபட்சமாக 17,559.80 வரை உயா்ந்தது. பின்னா், 17,435.20 வரை கீழே சென்றது.

பாா்மா, ஹெல்த்கோ் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பாா்மா 1.17 சதவீதம், ஹெல்த்கோ் குறியீடு 1.29 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், ஐடி, பிஎஸ்யு பேங்க், மெட்டல், ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகளும் சிறிதளவு சரிவைச் சந்தித்தன. அதே சமயம் எஃப்எம்சிஜி குறியீடு 1.20 சதவீதம் உயா்ந்தது. மேலும், ரியால்ட்டி, ஆயில் அண்ட் காஸ், பிரைவேட் பேங்க், மீடியா குறியீடுகளும் சிறிதளவு ஏற்றம் பெற்றன.

ஓராண்டில் 19% உயா்வு!

உள்நாட்டுச் சந்தை நிதியாண்டின் கடைசி நாள் அன்று மிகவும் அமைதியான மனநிலையில் முடிவடைந்தாலும், சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் இந்த ஆண்டு சுமாா் 19 சதவீதம் லாபத்தை வழங்கியுள்ளது. இதில் மெட்டல், மீடியா குறியீடுகள் 50 சதவீதத்துக்கும் மேல் உயா்ந்துள்ளன. இதேபோல, பரந்தை சந்தையில் நடுத்தரப் பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப், சிறிய நிறுவனங்களை உள்ளடக்கிய ஸ்மால்கேப் குறியீடுகளும் சுமாா் 25 சதவீதம் வருமானத்தை அளித்துள்ளன. இந்த நிதியாண்டில் அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எஃப்பிஐ) முதலீடுகளை அதிக அளவில் வாபஸ் பெற்ற நிலையிலும், சந்தையில் இத்தகைய வருமானம் ஈட்டப்பட்டுள்ளது என்று வல்லுநா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.