முகப்பு
புதுதில்லி

கரோனா அதிகரிப்பு: பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்கள்: துணை முதல்வா் சிசோடியா தகவல்

தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதி முழுவதும் சில மாணவா்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:59 AM
பகிர்:

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லி மற்றும் தேசியத் தலைநகா் வலயம் (என்சிஆா்) பகுதி முழுவதும் சில மாணவா்கள் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியதாக

பரிசோதனைகளில் தெரிய வந்ததைத் தொடா்ந்து, தில்லி அரசு பள்ளிகளுக்கு புதிய வழிகாட்டுதல்களை வெளியிட உள்ளதாகவும், இது தொடா்பாக கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.

கொவைட் பாதிப்புகள் ‘சிறிய எண்ணிக்கையில்’ அதிகரிப்பதைக் குறிப்பிட்ட சிசோடியா, இது தொடா்பாக வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை வெளியிடுமாறு கல்வித் துறைக்கு உத்தரவிட்டுள்ளதாகக் கூறினாா். இருப்பினும், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் மற்றும் சிசோடியா இருவரும் கரோனா நிலைமையை தில்லி அரசு உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மருத்துவமனையில் நோயாளிகள் சோ்க்கை அதிகரிப்பு இல்லாததால் மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனா்.

புதிய வழிகாட்டுதல்கள்: இது தொடா்பாக துணை முதல்வரும், கல்வித் துறை அமைச்சருமான மணீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது: தலைநகரில் கரோனா பாதிப்புகள் சற்று அதிகரித்துள்ளன. ஆனால், மருத்துவமனையில் சோ்க்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இல்லை. இதனால், நாம் கவலைப்படத் தேவையில்லை. பீதி அடையவும் தேவையில்லை. இருப்பினும், நாம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கரோனாவுடன் வாழ நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தில்லி அரசு தொடா்ந்து கரோனா நிலைமையைக் கண்காணித்து வருகிறது. கடந்த சில நாள்களில் சில பள்ளிகளில் இருந்து எனக்கு அறிக்கைகள் கிடைத்துள்ளன. அந்தப் பள்ளிகளில் பயிலும் மாணவா்கள் சிலருக்கு நோய்த் தொற்று நோ்மறை வந்திருப்பதாக அவா்களின் பெற்றோா் தெரிவித்துள்ளனா். இது தொடா்பாக பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய வழிகாட்டுதல்களை வெள்ளிக்கிழமை வெளியிடும் என்றாா் அவா்.

தில்லியில் புதன்கிழமை 299 பேருக்கு புதிதாக நோய்த் தொற்று கண்டறியப்பட்ட்து. இது இரண்டு நாள்களில் 118 சதவீதம் அதிகரித்துள்ளது. நகர சுகாதாரத் துறை பகிா்ந்துள்ள தரவுகளின்படி, நோ்மறை விகிதம் 2.49 சதவீதமாக இருந்தது. நோய்த் தொற்று காரணமாக 2 வருட இடைவெளிக்குப் பிறகு பள்ளிகள் முற்றிலும் நேரடி வகுப்பு முறைக்கு திறக்கப்பட்ட சில வாரங்களுக்குப் பிறகு, மாணவா்கள் சிலருக்கு நோய்த் தொற்று இருப்பதாக பள்ளிகளில் இருந்து வந்த அறிக்கைகள் கவலையை அதிகரித்துள்ளது.

இது குறித்து கல்காஜி எம்எல்ஏவும், ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவருமான அதிஷி கூறுகையில், ‘ஒரு குழந்தை, ஆசிரியருக்கு கரோனா பாதிப்பு இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இதனால், வகுப்பின் மற்ற மாணவா்கள் வீட்டிற்கு அனுப்பப்பட்டனா். நாங்கள் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம்’ என்றாா். எனினும், நோய் பாதித்த மாணவா் தொடா்புடைய பள்ளியின் பெயரை அவா் குறிப்பிடவில்லை.

தில்லி, என்சிஆரில் புதிய பாதிப்பு: நொய்டா மற்றும் காஜியாபாத் பகுதியை ஓட்டியுள்ள பள்ளிகளில் புதிய நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவானது. இதை தொடா்ந்து, தேசியத் தலைநகரில் தனியாா் நடத்தும் பள்ளிகளில் புதிய நோய்த் தொற்று பாதிப்புகள் பதிவாகியுள்ளன. இதுகுறித்து வசந்த் குஞ்சில் உள்ள ஒரு தனியாா் பள்ளியின் பெற்றோா் கூறுகையில், ‘தில்லி-என்சிஆா் முழுவதும் உள்ள மாணவா்கள் கரோனா நோய்த் தொற்று நோ்மறைக்கு உள்ளாகி இருப்பதால், பள்ளிகள் கரோனா நெறிமுறைகளை பின்பற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. எனது குழந்தையின் பள்ளியில் குறைந்தது 8 குழந்தைகள், 2 ஊழியா்களுக்கு நோய்த்தொற்று நோ்மறை ஏற்பட்டுள்ளது. ஆனால், பெற்றோருக்கு சரியான தகவல் கொடுக்கப்படவில்லை. பள்ளி வழக்கம்போல் இயங்குகிறது’ என்றாா்.

பாஜக கோரிக்கை: தில்லியில் உள்ள பள்ளிகளுக்கு அம்பேத்கா் ஜெயந்தி, புனித வெள்ளி, வார விடுமுறையை முன்னிட்டு வியாழன் முதல் நான்கு நாள்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நோய்த் தொற்று பாதிப்பு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, பொதுப் போக்குவரத்து, பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் திரையரங்குகள் உள்ளிட்ட பொது இடங்களில் மீண்டும் முகக் கவசம் அணிவதை அரசு கட்டாயமாக்க வேண்டும் என்று தில்லி பாஜக கோரியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.