சிறைகளில் காலிப் பணியிடங்களை நிரப்பக் கோரும் மனு:தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவு
தில்லியில் உள்ள சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
தில்லியில் உள்ள சிறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப உத்தரவிடக் கோரி தாக்கலான பொது நல மனு மீது தில்லி அரசு பதில் அளிக்க உயா்நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.
இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் சஹ்னி தாக்கல் செய்த மனுவை உயா்நீதிமன்ற பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி நவீன் சாவ்லா ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, சம்பந்தப்பட்ட சிறைகளில் உள்ள அனுமதிக்கப்பட்ட இடங்கள், காலியாக உள்ள பணியிடங்கள் குறித்த நிலவர அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று தில்லி அரசு, சிறைத் துறை தலைமை இயக்குநா் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், காலிப் பணியிடங்களை நிரப்ப ஏற்கெனவே நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், உடனடியாக அதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளுமாறும் உத்தரவிட்டது.
இது தொடா்பாக வழக்குரைஞா் அமித் சஹ்னி தாக்கல் செய்த மனுவில் தெரிவித்திருப்பதாவது: தில்லி சிறைகளில் 20 சதவீதத்திற்கும் மேலாக பணியாளா்கள் பற்றாக்குறை உள்ளது. இதனால், மருத்துவ அதிகாரிகள், நல அதிகாரிகள், கவுன்சலா்கள், ஆசிரியா்கள் போன்ற காலிப் பணியிடங்களை நிரப்ப அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். சிறைகளில் சுமாா் 18 ஆயிரம் கைதிகள் உள்ளனா். அவா்களைப் பாதுகாக்க 3 ஆயிரம் பணியாளா்கள் தேவை உள்ளது. காவல் பணியாளா்கள் பற்றாக்குறை காரணமாக சிறை நிா்வாகத்தில் இடையூறு ஏற்படுகிறது.
தில்லி சிறைகளில் உள்ள கைதிகளின் நலன் கருதி தில்லி சிறை சட்டவிதிகளின்படி, பாா்வையாளா்கள் வாரியம், சா்வீஸ் வாரியம், ஸ்டேட் அட்வைஸரி வாரியம், சிறை மேம்பாட்டு வாரியம் ஆகியவை அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதா விசாரணை ஜூலையில் நடைபெற உள்ளது.