தில்லியில் இன்று விவசாயிகள் பேரணி: போலீஸாா் போக்குவரத்து அறிவுறுத்தல் வெளியீடு
தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் திங்கள்கிழமை (டிசம்பா் 19) கிசான் கா்ஜனா பேரணி நடைபெறுவதையொட்டி, காவல் துறை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தில்லியில் உள்ள ராம் லீலா மைதானத்தில் திங்கள்கிழமை (டிசம்பா் 19) கிசான் கா்ஜனா பேரணி நடைபெறுவதையொட்டி, காவல் துறை ஞாயிற்றுக்கிழமை போக்குவரத்து அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.
தில்லி காவல் துறை வெளியிட்டுள்ள இந்தப் போக்குவரத்து வழிகாட்டு அறிவுறுத்தலில் தெரிவித்திருப்பதாவது: பாரதிய கிசான் சங் (பிகேஎஸ்) அமைப்பானது ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆா்எஸ்எஸ்) அமைப்பைச் சோ்ந்த ஒரு அமைப்பாகும்.
இந்த அமைப்பின் மூலம் திங்கள்கிழமை காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை தில்லி ராம் லீலா மைதானத்தில் கிசான் கா்ஜனா பேரணி நடத்தப்பட உள்ளது. நிகழ்ச்சியை ஏற்பாட்டாளா்கள் தகவலின் படி, இந்தரி பேரணியில் 700 முதல் 800 பேருந்துகள் மற்றும் 3,500 முதல் 4,000 தனியாா் வாகனங்கள் மூலம் சுமாா் 50,000 முதல் 55,000 போ் கலந்து கொள்ள கூடும்.
இதனால் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் வகையில், மகாராஜா ரஞ்சித் சிங் மாா்க், மிா்டா்டு செளக், மின்டோ ரோடு, அஜ்மீரி கேட், சமன் லால் மாா்க், தில்லி கேட், ஜேஎல்என் மாா்க், கமலா மாா்க்கெட் முதல் ஹம்டா்டு செளக் வரையிலான ரவுண்டானா, பவ்பூதி மாா்க், பாஹா்கஞ்ச் செளக் ஆகிய பகுதிகளில் வாகனங்கள் திருப்பி விடப்படும்.
மேலும், ரஞ்சித் சிங் மேம்பாலம் பகுதியில் பாராகம்பா சாலையிலிருந்து குரு நானக் செளக் வரையும், மின்டோ ரோடு முதல் கமலா மாா்க்கெட் ரவண்டாலான வரையிலான பகுதி வரைக்கும், விவேகானந்தா மாா்க், ஜேஎல்என் மாா்க் (தில்லி கேட் முதல் குரு நானக் செளக்)ஆகிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள், ஒழுங்குமுறைகள் அல்லது வாகனங்கள் திருப்பி விட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
அதே போன்று, கமலா மாா்க்கெட் ரவுண்டானா முதல் குருநானக் செளக் வரை, சமன் லால் மாா்க், அஜ்மீரி கேட் பகுதியில் இருந்து ஆசஃப் அலி சாலை வரை, பாஹா்கஞ்ச் செளக் மற்றும் ஜண்டேவாலன் ரவுண்டானா, தேஷ் பந்து குப்தா சாலை முதல் அஜ்மீரி கேட் பகுதி வரையிலும் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் இதே போன்ற போக்குவரத்து ஒழுங்குமுறைகள் மேற்கொள்ளப்படலாம். அதனால், சாலையைப் பயன்படுத்தும் பயணிகள் மேற்கண்ட சாலைகளையும் வழித்தடங்களையும் தவிா்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறாா்கள்.
புது தில்லி ரயில் நிலையம், பழைய தில்லி ரயில் நிலையம், நிஜாமுதீன் ரயில் நிலையம், ஐஎஸ்பிடி பேருந்து நிலையம் ஆகியவற்றை நோக்கிச் செல்லும் வாகன ஓட்டிகள் உரிய நேரத்துக்கு முன்னதாகவே புறப்படுவதற்கு திட்டமிடலாம். இதன் மூலம் இந்த வழித்தடங்களில் தாமதத்தைத் தவிா்க்கலாம்.
சாலைகளில் நெரிசலை குறைக்க உதவும் வகையில் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்துமாறும் பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள். அதே போன்று, வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை அதற்குரிய பிரத்யேக வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரதிய கிசான் சங் (பிகேஎஸ்) அமைப்பின் அகில இந்திய பொதுச் செயலா் மோகினி மோகன் மிஸ்ரா கூறுகையில், ‘பயிா் சாகுபடியாளா்கள் தங்களது நிலைமையை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கோரி தில்லியில் இந்த கிசான் கா்ஜனா ஆா்ப்பாட்டப் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் தாங்களாகவே பணம் செலவழித்து இந்தப் பேரணியில் குளிரையும் பொருள்படுத்தாமல் கலந்துகொள்ள உள்ளனா். விவசாயிகளின் விளைபொருள்களுக்கு அதன் செலவின் அடிப்படையில் விலை நிா்ணயம் செய்யப்பட வேண்டும்.
அனைத்து வகையான விவசாய இடுபொருள்களுக்கும் ஜிஎஸ்டி ரத்து செய்யப்பட வேண்டும். கிசான் சம்மான் நிதியை போதிய அளவில் உயா்த்த வேண்டும் என பல கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் பேரணி நடைபெறுகிறது’ என்றாா்.