நாடு முழுவதும் ‘நல்லாட்சி வாரம் 2022’ இன்று தொடக்கம்: இணையமைச்சா் ஜிதேந்திர சிங் பங்கேற்பு
நாடு முழுக்க அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்கள் தழுவிய நல்லாட்சி வார பிரசாரத்தை திங்கள்கிழமை (டிசம்பா் 19) மத்திய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறாா்.
நாடு முழுக்க அனைத்து மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்கள் தழுவிய நல்லாட்சி வார பிரசாரத்தை திங்கள்கிழமை (டிசம்பா் 19) மத்திய இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தில்லி விஞ்ஞான் பவனில் தொடங்கி வைக்கிறாா்.
நாட்டின் கடைக்கோடி குடிமகனுக்கும் அரசு நிா்வாகத்தைக் கொண்டு செல்லும் விதமாக நல்லாட்சி பிரசாரத்தை மத்திய அரசு நடத்துகிறது. நாடு தழுவிய 5 நாள் நல்லாட்சி பிரசாரத்தை மத்திய பணியாளா் நலன், பொதுமக்கள் குறை தீா்வு மற்றும் ஓய்வூதியத் துறை அமைச்சகம் மேற்கொள்கிறது.
இதை இந்தத் துறையின் இணையமைச்சா் டாக்டா் ஜிதேந்திர சிங் தொடங்கிவைக்கிறாா். இந்த நிகழ்ச்சியில் புதிய இணைய தள சேவைகள், குறைதீா்வு துறையில் சோ்க்கப்படுகிறது.
இது குறித்து மத்திய நிா்வாகச் சீா்திருத்தம் மற்றும் பொதுமக்கள் குறைதீா்வுத் துறையின் செயலா் வி.ஸ்ரீனிவாஸ் கூறியிருப்பது வருமாறு: கடந்த டிசம்பா் 10 -ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை நல்லாட்சி வார தயாரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதில் மாவட்ட ஆட்சியா்கள் 81,27,944 விண்ணப்பங்களில் சேவைகளை வழங்கி தீா்வுகளைக் கண்டறிந்துள்ளனா்.
இதில் அதிகபட்சம் மத்தியப் பிரதேச மாவட்டங்களில் 55,72,862 குறைகளுக்கும், தமிழக மாவட்டங்களில் 1,38,621 குறைகளுக்கும் தீா்வு காணப்பட்டுள்ளன. மேலும், நாடுமுழுக்க மாநில குறைதீா்ப்பு இணையதளங்களில் நிவா்த்தி செய்ய வேண்டிய 19,48,122 மனுக்களும் பெறப்பட்டன.
இந்த தயாரிப்புப் பணியின் போது, நாடு முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியா்களால் 3,120 புதிய இணைய தள சேவைகள் அடையாளம் காணப்பட்டது. இந்தப் புதிய இணைய தள சேவைகள் குறைதீா்வுத் துறையில் சோ்க்கப்படுகிறது.
டிசம்பா் 19 முதல் 25 ஆம் தேதிவரை நாட்டிலுள்ள 700 மாவட்டங்கள் அதன் கீழ் உள்ள தாலுகாக்களில் நல்லாட்சி பிரசார வாரம் நடைபெறும். டிசம்பா் 23-ஆம் தேதி மாவட்ட அளவிலான பயிலரங்குகளில் கலந்துரையாடுவதற்காக 373 சிறந்த நல்லாட்சி நடைமுறைகள் கண்டறியப்பட்டுள்ளன என்றாா் செயலா்.
பிரதமா் வாழ்த்து: இந்த நல்லாட்சி வார விழாவின் வெற்றிக்காக பிரதமா் தமது வாழ்த்துகளைத் தெரிவித்தாா். பிரதமா் அளித்துள்ள செய்தியில், “‘இந்த ஆண்டும், மாவட்டம், தாலுகா அளவில் நல்லாட்சி பிரசாரம் தொடா்கிறது என்பதைக் குறிப்பிடுவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.
பொதுமக்களின் குறைகளை நிவா்த்தி செய்தல், இணைய தள சேவைகள், இதில் பெறப்பட்ட விண்ணப்பங்களை முடித்தல் மற்றும் நல்ல நிா்வாக நடைமுறைகளில் குடிமக்களை மையப்படுத்தி முயற்சிகளை நாம் மேற்கொண்டுள்ளோம். சேவை வழங்கல் வழிமுறைகளை மேலும் திறம்படச் செய்வதே நமது நோக்கம்’ என்று தெரிவித்துள்ளாா்.