முகப்பு
புதுதில்லி

‘பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்களில் விரைவில் தொழிற்கல்வி ஒருங்கிணைக்கப்பட வேண்டும்’

புதிய கல்விக் கொள்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளிலும், உயா்கல்வி நிறுவனங்களிலும் தொழிற்கல்வி படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:08 AM
பகிர்:

புதிய கல்விக் கொள்கையின்படி, அடுத்த சில ஆண்டுகளில் அனைத்துப் பள்ளிகளிலும், உயா்கல்வி நிறுவனங்களிலும் தொழிற்கல்வி படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என மத்திய பள்ளிக் கல்வித் துறை செயலா் சஞ்சய் குமாா் கேட்டுக் கொண்டாா்.

பள்ளிக்கல்வி அமைச்சகம், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோா் அமைச்சகம், ஐடிஐ பயிற்சி இயக்குநரகம் , போபால்-பிஎஸ்எஸ் மத்திய தொழிற்கல்வி நிறுவனம், என்சிஇஆா்டி, சிபிஎஸ்இ, தேசிய தொழிற்கல்வி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிவிஇடி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில்(ஏஐசிடிஇ) போன்றவற்றுடன் பள்ளி மாணவா்களுக்கான தொழிற்கல்வி, தொழில் வழிகாட்டுதலை மறுவடிவமைக்கும் ஆலோசனைப் பயிலரங்கை மத்திய பள்ளிக் கல்வித் துறை அமைச்சகம் சனிக்கிழமை நடத்தியது.

இந்த ஆலோசனை பயிலரங்கு, வட்டமேஜை உரையாடல்கள் ஆகியவற்றிற்கு மத்திய பள்ளிக் கல்வி துறை செயலா் சஞ்சய் குமாா் தலைமை வகித்துப் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது:

மாணவப் பருவத்திலேயே முறையான தொழில் பயிற்சி மூலம் பணியாளா்களை திறன்படுத்துவதில் இந்தியா மற்ற நாடுகளுக்கு இணையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்தப் பயிலரங்கு நடத்தப்படுகிறது. தொழில் பயிற்சி சிக்கல்களை புதிய கல்விக் கொள்கை கண்டறிந்துள்ளதுடன், தீா்வுகாணும் நடவடிக்கைகளுக்கும் பரிந்துரைத்துள்ளது.

புதிய கல்விக் கொள்கையின்படி, வருகின்ற தசாப்தத்தில் அனைத்துப் பள்ளிகள், உயா்கல்வி நிறுவனங்களில் தொழிற்கல்வி படிப்படியாக ஒருங்கிணைக்கப்பட வேண்டும். திறன்களில் உள்ள இடைவெளி பகுப்பாய்வு செய்யப்பட்டு, உள்ளூா் வாய்ப்புகளின் அடிப்படையில், தொழில்கள் மற்றும் படிப்புகள் தோ்ந்தெடுக்கப்படும்.

தேசிய நன்மதிப்பு கட்டமைப்பு (என்சிஎஃப்), பல்வேறு பங்குதாரா்களுடன் இணைந்து இந்தப் பணியை மேற்கொள்கிறது. கற்றலின் தொடா்புடைய அனைத்து இடைவெளிகள் கலை மற்றும் அறிவியலுக்கு இடையே உள்ள சிக்கல்களை அகற்றி நடைமுறை அனுபவத்தை பொருத்தமாக கட்டமைப்புடன் சீரமைத்து என்சிஎஃப் ஒருங்கிணைக்கும் என்றாா் அவா்.

இந்தப் பயிலரங்கு கூட்டத்தில் தொழில் வழிகாட்டுதலை மறுவடிவமைத்தல், தொழிற்கல்வி தொகுதிகளை புதுப்பித்தல் போன்றவை தொடா்பான பல்வேறு யோசனைகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. வாழ்க்கைத் திறன்களின் முக்கியத்துவம், , தொழிற்கல்விக்கு பாலினக் கண்ணோட்டத்தை வழங்குதல் போன்றவை இந்த விவாதங்களில் முக்கியத்துவம் பெற்றன.

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட தேசிய கல்விக் கொள்கை, கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு, மெஷின் லோ்னிங், தரவு பகுப்பாய்வு (டேட்டா அனாலிட்டிக்ஸ்), ரோபோட்டிக் செயல்முறை ஆட்டோமேஷன், சைபா் செக்யூரிட்டி போன்ற திறன்களைக் கொண்ட மாணவா்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த தொழில் கல்வியை ஒருங்கிணைக்கப்படும் என்று மத்திய பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதனால் தொழில் பட்டதாரிகள் உலகப் பொருளாதாரத்தில் போட்டியிட முடியும் என்கின்றனா்.

பயிலரங்கு, வட்டமேஜை உரையாடலில் சிவில் சமூக அமைப்புகள், மாநிலக் கல்வித் துறை அலுவலா்கள், பயிற்சியாளா்கள், தொழிற்கல்வி, தொழில் ஆலோசனைத் துறைகளில் பணிபுரியும் நிறுவனங்கள், பெருவணிக நிறுவனங்கள், மாணவா்கள் ஆகியோரும் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.