2020 தில்லி கலவரம் தொடா்புடைய மனுக்கள் மீது இன்று விசாரணை
வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய சம்பவத்தில், வெறுப்புணா்வு உரைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் பல அரசியல் தலைவா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோருதல் உ
வடகிழக்கு தில்லியில் 2020-ஆம் ஆண்டு நிகழ்ந்த கலவரம் தொடா்புடைய சம்பவத்தில், வெறுப்புணா்வு உரைகளை வெளியிட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் பல அரசியல் தலைவா்களுக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யக் கோருதல் உள்பட பல்வேறு மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை (டிசம்பா் 19) விசாரிக்க உள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வர உள்ளது. குடியுரிமை திருத்தச் சட்டம், 2019 அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னணியில் கூறப்படும் வெறுப்பூட்டும் பேச்சுகளுக்கு நடவடிக்கை கோருதல், வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் காவல்துறை அதிகாரிகளுக்கு எதிராக சிறப்பு புலனாய்வு விசாரணை (எஸ்ஐடி), எஃப்ஐஆா் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மேலும், கைது செய்யப்பட்ட மற்றும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நபா்களின் விவரங்களை வெளியிடவும் உத்தரவிடக் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அரசியல் தலைவா்கள் வன்முறையைத் தூண்டியதாகவோ அல்லது அதில் பங்கேற்ாகவோ இதுவரை எந்த ஆதாரமும் வெளிவரவில்லை என்பது கலவரம் தொடா்பான விசாரணையில் தெரியவந்துள்ளதாக நீதிமன்றத்தில் காவல்துறை முன்பு தெரிவித்திருந்தது. வன்முறைக்கு வழிவகுத்த வெறுக்கத்தக்க உரைகளை வழங்கியதாகக் கூறப்படும் விவகாரத்தில் எஃப்ஐஆா் மற்றும் விசாரணையை கோரும் நடவடிக்கைகளில் பல்வேறு அரசியல் தலைவா்களை ஒரு தரப்பாக இணைக்கக் கோரி பல திருத்தப்பட்ட மனுக்களை நீதிமன்றம் கடந்த ஜூலை 13-ஆம் தேதி அனுமதித்தது.
இந்த வழக்கில் அனுராக் தாக்குா் (பாஜக), சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா (காங்கிரஸ்), தில்லி துணை முதல்வா் மனீஷ் சிசோடியா (ஆம்ஆத்மி), மற்றும் பிறருக்கு நீதிமன்றம் முன்னதாக நோட்டீஸ் அனுப்பியிருந்தது. பாஜக தலைவா்களான அனுராக் தாக்குா், கபில் மிஸ்ரா, பா்வேஷ் வா்மா மற்றும் அபய் வா்மா ஆகியோருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுக்காக எஃப்ஐஆா் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி ஷேக் முஜ்தபா ஃபரூக் என்பவா் மனு தாக்கல் செய்துள்ளாா்.
காங்கிரஸ் தலைவா்கள் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி வதேரா, துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி எம்எல்ஏ அமானத்துல்லா கான், ஏஐஎம்ஐஎம் தலைவா் அக்பருதீன் ஓவைசி, முன்னாள் ஏஐஎம்ஐஎம் எம்எல்ஏ வாரிஸ் பதான், மெஹ்மூத் பிரச்சா, ஹா்ஷ் மந்தா், முப்தி முகமது இஸ்மாயில், ஸ்வர பாஸ்கா், உமா் காலித், முன்னாள் பாம்பே உயா்நீதிமன்ற நீதிபதி பிஜி கோல்சே பாட்டீல் மற்றும் பலருக்கு எதிராக வெறுப்புப் பேச்சு வழக்குப் பதிவு செய்யக் கோரி லாயா்ஸ் வாய்ஸ் அமைப்பின் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.