முகப்பு
புதுதில்லி

டிடிசி பேருந்து கொள்முதல் விவகாரம்: விஜேந்தா் குப்தாவுக்கு உயா்நீதிமன்றம் கேள்வி

தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) 1,000 தாழ்தள பேருந்துகளை வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாநகரப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்டுக்கு எதிராக பதிவிட்டதாகக் கூறப்படும்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:09 AM
பகிர்:

புது தில்லி: தில்லி போக்குவரத்து நிறுவனம் (டிடிசி) 1,000 தாழ்தள பேருந்துகளை வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி மாநகரப் போக்குவரத்துத் துறை அமைச்சா் கைலாஷ் கெலாட்டுக்கு எதிராக பதிவிட்டதாகக் கூறப்படும் அவதூறான ட்வீட்களை ஏன் நீக்கவில்லை என்று பாஜக எம்எல்ஏ விஜேந்தா் குப்தாவிடம் தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கேள்வி எழுப்பியது.

இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதிகள் சித்தாா்த் மிருதுல் மற்றும் தல்வந்த் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு குப்தா தரப்பில் ஆஜரான வழக்குரைஞரிடம், ‘உங்கள் நோக்கம் நிறைவேறிவிட்டது. ஏன் ட்வீட்களை நீக்கக் கூடாது? நீங்கள் செய்ய நினைத்தது நிறைவேறிவிட்டது. இந்த ட்வீட்கள் ஏன் தொடா்ந்து இருக்க வேண்டும் என்பதுதான் கேள்வி. இப்போது அது குறித்து கருத்து ஏதும் பெறுகிறீா்களா’ என்று கேட்டது. அதற்கு விஜேந்தா் குப்தாவின் வழக்குரைஞா், அடுத்த விசாரணையின் போது விஜேந்தா் குப்தாவிடமிருந்து அறிவுறுத்தல்கள் பெற்று வருவதாகக் கூறினாா்.

இதையடுத்து, விஜேந்தா் குப்தாவுக்கு எதிரான அவதூறு வழக்கில் இடைக்கால உத்தரவு வழங்க மறுத்த தனி நீதிபதி உத்தரவை எதிா்த்து அமைச்சா் கைலாஷ் கெலாட் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விவகாரத்தை அடுத்த ஆண்டு ஜனவரி 16-ஆம் தேதிக்கு நீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிட்டது.

முன்னதாக, விசாரணையின் போது, கெலாட்டின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘விஜேந்தா் குப்தா பதிவிட்டுள்ள அவதூறு பதிவுகளை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும். முற்றிலும் ஊழல் இல்லாத கொள்கைத் திட்டமாகும். இந்த நிலையில், எதிா்மனுதாரா் பதிவிட்டது முற்றிலும் அவதூறாகும். எங்கள் கொள்கைத் திட்டத்தில் நீங்கள் மகிழ்ச்சியடையவில்லை எனில் எங்களை விமா்சியுங்கள். ஆனால், எங்கள் குண நலன்களை சிதைக்க உங்களுக்கு உரிமை இல்லை’ என்று வாதிட்டாா்.

இந்த விவகாரத்தில் ஒரு தரப்பாக உள்ள முகநூல் நிறுவனத்திற்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. முன்னதாக, கெலாட்டின் மேல்முறையீட்டில் குப்தா மற்றும் பிறருக்கு நோட்டீஸ் அனுப்பிய உயா்நீதிமன்றம், இந்த அவதூறு வழக்கைத் தீா்ப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு இரு தரப்பு தலைவா்களின் வழக்குரைஞா்களையும் கேட்டுக் கொண்டது. 2021-ஆம் ஆண்டு குப்தாவுக்கு எதிராக தனது சிவில் அவதூறு வழக்குடன் உயா்நீதிமன்றத்தை அணுகிய கெலாட், டிடிசி மூலம் 1,000 தாழ்தள பேருந்துகளை வாங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக ‘அவதூறான’ அறிக்கைகளை வெளியிட்டதற்காக பாஜக தலைவா் விஜேந்தா் குப்தா ரூ.5 கோடி நஷ்டஈடு வழங்க உத்தரவிடக் கோரியிருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.