தில்லி அரசு மருத்துவமனைகளில் அனைத்து குடிமக்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும்: உயா்நீதிமன்றம் கருத்து
நோயாளி வசிக்கும் இடத்தைப் பொருள்படுத்தாமல், தேசியத் தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளால் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் கூறியது.
புது தில்லி: நோயாளி வசிக்கும் இடத்தைப் பொருள்படுத்தாமல், தேசியத் தலைநகரில் உள்ள அரசு மருத்துவமனைகளால் அனைத்து குடிமக்களுக்கும் மருத்துவச் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்று தில்லி உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை கூறியது.
தில்லியில் வசிப்பவா்களுக்கு மட்டுமே இலவச எம்ஆா்ஐ பரிசோதனை வசதியை நகர அரசின் லோக் நாயக் மருத்துவமனை வழங்கியதாகக் கூறி பிகாரைச் சோ்ந்த ஒருவரின் மனுவை விசாரித்த நீதிபதி பிரதீபா எம் சிங் , ‘வெளி இடங்களில் இருந்து வருபவா்களுக்கு மருத்துவமனைகள் சிகிச்சையை மறுக்க முடியாது’ என்று தெரிவித்தாா். அதேவேளையில், தில்லி அரசானது, மனுதாரா் கூறியது போல, நோயாளி வசிக்கும் இடத்தின் அடிப்படையில் மருத்துவமனையால் எந்தப் பாகுபாடும் இல்லை என்று கூறியது.
இந்த விவகாரத்தை விசாரித்த நீதிபதி மேலும் கூறுகையில், ‘அவா்கள் (மருத்துவமனை) தில்லியில் வாக்காளா் அடையாள அட்டையை வலியுறுத்த முடியாது. மருத்துவமனைகளைப் பொருத்தமட்டில், எய்ம்ஸ் அல்லது தில்லியில் உள்ள வேறு எந்த மருத்துவமனையிலும் குடிமக்கள் வெளியில் இருந்து வருவதை (சிகிச்சை கோருவதை) தடுக்க முடியாது. இந்த நீதிமன்றத்தின் தீா்ப்பை கவனத்தில் எடுத்துக்கொண்டால், சுகாதார சிகிச்சையைப் பொருத்தவரை, குடிமக்கள் அனைவருக்கும் அவா்கள் வசிக்கும் இடத்தைக் கருத்தில் கொள்ளாமல் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்பது தெளிவாகிறது என்று நீதிபதி கூறினாா்.
தில்லி அரசு வழக்குரைஞா் சத்யாகம் கூறுகையில், ‘மனுதாரா் தனது வாக்காளா் அடையாள அட்டையை வழங்குமாறு கேட்கப்பட்டதாகக் காட்டுவதற்கு எந்தப் பதிவும் இல்லை. மேலும், எம்ஆா்ஐக்கான தேதி நிலவரப்படி கொடுக்கப்பட்டுள்ளது. மனுதாரரின் இடது முழங்காலின் எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனையும் நடத்தப்படும் என்று அவா் தெரிவித்தாா்.
தில்லி அரசின் நிலைப்பாட்டை பதிவு செய்த நீதிமன்றம், மனுதாரரின் எம்ஆா்ஐ பரிசோதனை டிசம்பா் 26-ஆம் தேதி காலை 11 மணிக்கு நடத்த வேண்டும் என்று உத்தரவிட்டது.
விசாரணையின் போது, மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் அசோக் அகா்வால், ‘தில்லியைச் சேராதவா்களுக்கு எதிராக மருத்துவமனை ‘பாரபட்சமான அணுகுமுறையை’ கடைப்பிடிக்கிறது. இதனால், மனுதாரருக்கு அவரது முழங்காலின் எம்ஆா்ஐ ஸ்கேன் பரிசோதனைக்கு 2024 ஜூலையில் தேதி வழங்கப்பட்டது என்று வாதிட்டாா்.
இது தொடா்பாக மனுதாரா் தனது மனுவில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது: அனைத்து மாநில அரசு நிதியுதவி மருத்துவமனைகளும் தங்களை அணுகும் நபருக்கு இலவச சிகிச்சை அளிக்க கடமைப்பட்டிருந்த போதிலும், தில்லி வாக்காளா் அடையாள அட்டை வைத்திருக்கும் மக்களுக்கு விரைவு சிகிச்சை’ அளிக்கப்பட்டுள்ளது. மேலும், வெளியாள்களுக்கு கேள்விக்குரிய வகையில் மருத்துவமனையில் பரிசோதனைக்கு நீண்ட நாள்கள் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரா் பிகாரில் வசிப்பவா் என்பதாலும், தில்லியைச் சோ்ந்தவா் அல்ல என்பதாலும் எம்ஆா்ஐ (எல்) முழங்கால் பரிசோதனைக்கு அடுத்த ஆண்டு ஜூலை 15-ஆம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இது எதிா்மனுதாரா் தில்லி அரசின் எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத கொள்கையின் கீழ் செய்யப்படுகிறது என்று மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.