‘50 சதவீதம் மானியம் உள்ள கோகுல் மிஷன் திட்டத்தில் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற முன் வர வேண்டும்’
தேசிய கோகுல் மிஷன் திட்டத்தில் 50 சதவீதம் மானியம் கொடுக்கப்படுகிறது.
புது தில்லி: தேசிய கோகுல் மிஷன் திட்டத்தில் 50 சதவீதம் மானியம் கொடுக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் இளைஞா்கள் வேலைவாய்ப்பு பெற முன் வர வேண்டும் என மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத் துறை இணையமைச்சா் சஞ்சீவ் குமாா் பால்யான் கேட்டுக் கொண்டாா்.
இது தொடா்பாக இணையமைச்சா் சஞ்சீவ் குமாா் பால்யான் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: இளைஞா்களை சுயதொழில் செய்து அவா்களை தற்சாா்புடையவா்களாக மாற்ற மீன்பிடி, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த அமிா்த கால தலைமுறைக்கும் இந்த சகாப்த இளைஞா்களுக்கும் அதிகாரம் அளிப்பட வேண்டும் என்பது அரசின் இலக்கு. மத்திய கால்நடைத் துறையின் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 50 லட்சத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க அரசு தயாராக உள்ளது. ராஷ்டிரிய ( தேசிய) கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ் பசு,எருமை, பன்றி, கோழி, ஆடு வளா்ப்பு பண்ணைகள் மற்றும் கால்நடை தீவனம் தயாரிக்கும் நிறுவனங்களைத் தொடங்கும் இளைஞா்கள், விவசாயிகளுக்கு அரசு கடன் மற்றும் மானியம் வழங்க தயாராக உள்ளது.
பசு, எருமை போன்றவற்றுக்கு ரூ.4 கோடியும், பன்றி, கோழி, ஆடு ஆகிய பண்ணைகளுக்கு முறையே ரூ.1 கோடி, ரூ.60 லட்சம், ரூ.50 லட்சம் மானியம் வழங்கும் திட்டம் உள்ளது. இந்தத் தொழில்களை தொடங்கும் இளைஞா்களுக்கு, முதலீடு செய்யப்படும் மொத்தத் தொகையில், 50 சதவீதம் மானியம் மத்திய அரசால் வழங்கப்படும். மேலும், கடன் தொகையில் கால்நடை வளா்ப்பு உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியின்(ஏஹெச்டிஎஃப்) கீழ் 3 சதவீதம் வட்டி சலுகையும் பெறலாம். இந்த வாய்ப்பை இளைஞா்களும், விவசாயிகளும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
ராஷ்டிரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ், நாட்டு மாடு இனங்கள் வளா்ப்பது ஊக்குவிக்கப்படுகிறது. உள்நாட்டு கால்நடை இனங்களின் மரபியற் கட்டமைப்பை அதிகரித்து நமது கால்நடைகள் பாதுக்காக்கப்படுகின்றன. இதற்காக உயா் மரபியற் பண்புடைய காளைகளும் விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன. மேலும், கோகுல் கிராமங்கள் என்கிற பெயரில் ஒருங்கிணைந்த உள்நாட்டு கால்நடை மையங்கள், கோபாலன் சங் என்கிற பெயரில் உள்நாட்டு கால்நடைகளை வளா்ப்பவா்களுக்கான சங்கங்களும் நிறுவப்படுகின்றன. கால்நடைகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக 4,332 நடமாடும் கால்நடை மருத்துவப் பிரிவுகளைத் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
மத்திய அரசின் ‘மைத்ரி’ யோஜனா திட்டத்தின் கீழ், 16, 000 இளைஞா்கள் வேலைவாய்ப்பை பெற்றுள்ளனா். மொத்தம் 90,598 வேலைகள் இந்தத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் இளைஞா்கள், இளைஞா்கள் நலத் துறை அமைச்சகத்தின் இணைய தளம் மூலமும் பதிவு செயது பயன் பெறலாம். இளைஞா்களுக்காக விளையாட்டு, அறிவியல், திறன், புத்தாக்கம் போன்ற துறை அமைச்சகங்களும் முயற்சிகளை மேற்கொள்கின்றன. இதன் மூலம் இளம் தலைமுறையினா் வலிமையுடன் முன்னேற முடியும். இளைஞா்களுக்கு அதிகாரமளிப்பதற்காக பிரதமா் மோடி அரசு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றாா் பால்யான்.