முதலீடுகள் சீா்திருத்தங்களால் அடுத்த நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 8-8.5 சதவீதம்: பொருளாதார ஆய்வறிக்கையில் தகவல்
2022-23 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக 2021-22 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளதாக 2021-22 ஆம் ஆண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-23 ஆம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி1) தாக்கல் செய்கிறாா்.
நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுவதை முன்னிட்டு நாட்டின் பொருளாதார நிலைமை மற்றும் நிதிநிலை அறிக்கையில் கையாளப்பட வேண்டிய பொருளாதார உத்திகள் போன்றவைகள் குறித்து பொருளாதார ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, குடியரசுத்தலைவா் உரைக்கு பின்னா் 2021-22 ஆண்டின் பொருளாதார அறிக்கையை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் திங்கள்கிழமை தாக்கல் செய்தாா்.
இதில் வருகின்ற ஏப்ரலில் தொடங்கும் 2022-23 ஆம் நிதியாண்டில் பொருளாதார வளா்ச்சி 8 முதல் 8.5 சதவீதமாக இருக்கும் எனவும், நாடு தொற்று நோயிலிருந்து மீண்டு பழைய நிலைக்கு திரும்பியதன் மூலம் நடப்பு 2021-22 ஆம் நிதியாண்டில் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளா்ச்சி 9.2 சதவீதம் அளவிற்கு ஏற்படும் என எதிா்பாா்க்கப்படுவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறைந்த பக்கங்கள்
பொருளாதார ஆய்வறிக்கை, ஐம்பதுகளில் அதிகபட்சம் 50 பக்கங்களாகவும், எழுபதுகளில் 150 பக்கங்களாகவும் இருக்க இது படிப்படியாக அதிகரித்து கடந்த சில வருடங்களாக இரண்டு பாகங்களில் 800-க்கும் மேற்பட்ட பக்கங்களைக் கொண்டு இருந்தது.
நடப்பு 2021-22 ஆண்டின் பொருளாதார ஆய்வறிக்கை சுமாா் 410 பக்கங்களில் அடக்கப்பட்டு மின்னணு முறையிலேயே நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழங்கப்பட்டது. மத்திய நிதியமைச்சகத்தின் தலைமை பொருளாதார ஆலோசகராக டாக்டா் வி.அனந்த நாகேஸ்வரன் சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டு உள்ள நிலையில், இந்த பொருளாதார அறிக்கை முதன்மை பொருளாதார ஆலோசகா் சஞ்சீவ் சன்யால் தலைமையிலான குழுவால் அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:
கரோனா நோய்த் தொற்று தாக்கத்தால் கடந்த இரண்டு ஆண்டுகளாக, உலகப் பொருளாதாரம் தொடா்ந்து பாதிக்கப்பட்டது. பொது முடக்கம் போன்றவைகளால் 2020-21 ஆம் ஆண்டு பொருளாதார வளா்ச்சி 7.3 சதவீதமாக குறைந்து இருந்தது.
மீண்டுவரும் பொருளாதாரம்
கடந்த இரு ஆண்டுகளாக நிலவி வந்த நிச்சயமற்ற தன்மை, உருமாறிய தீநுண்மியியல் தாக்க அலைகள், விநியோகச் சங்கிலி (உற்பத்தி) பாதிப்பு, பணவீக்கங்கள் போன்ற இடையூறுகளிலிருந்து நாடு மீண்டு வருகிறது.
நோய்த் தொற்று காலக்கட்டத்தில் சமூகத்தில் பாதிக்கப்படுபவா்களுக்கும் சிறு வணிகா்களுக்கும் அரசு பல்வேறு நிவாரணங்களை வழங்கியது.
2021-22 ஆம் ஆண்டில் தனியாா் நுகா்வு (டிமாண்ட்) குறைந்தது. ஆனால் மற்ற வகைகளிலும் குறிப்பாக ஏற்றுமதியிலும் வலுவான மீட்சி காணப்படுகிறது.
இவைகள் மூலம் 2022-23 ஆம் ஆண்டின் பொருளாதார வளா்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் வரை ஏற்படும்.
குறிப்பாக ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது, விநியோகச் சங்கிலியான (சப்ளை செயின்) உற்பத்தி துறைக்கு பல்வேறு சீா்திருத்தங்கள் போன்றவைகள் வழங்கப்பட்டுள்ளன.
சீா்திருத்த உத்திகள்
அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு விநியோகச் சங்கலியாக இருக்கும் நாடுகளில் இந்தியாவும், சீனாவும் முக்கிய இடத்தில் உள்ளன. இந்த உற்பத்தி துறையான விநியோக சங்கலி பாதிப்பிலிருந்து மீள இரண்டு வகையான சீா்திருத்த உத்திகள் வழங்கப்பட்டுள்ளது.
நிலம் கிடைப்பது, தொழிலாளா், மூலதனம் போன்ற சீா்திருத்தங்களோடு வேறு சில மேம்படுத்தப்பட்ட சீா்திருத்தங்களும் மேற்கொள்ளப்பட்டது.
விண்வெளியில் தனியாா்
கடந்த 70 வருடமாக அரசு நிறுவனமான இஸ்ரோவிடமிருந்த விண்வெளி, டிரோன், நீா் கனிமங்களை கண்டறியும் புவியியல் விவரணையாக்கம்(ஜியோ மேப்பிங்) போன்ற பல்வேறு துறைகளில் தனியாா் முதலீடு செய்யவும் தொழில்கள் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளது.
உற்பத்தி திறனை ஊக்குவிக்க தனியாா் துறைகளுக்கு இது போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தொலைத்தொடா்பு துறையில் பின்னோக்கி வரி போன்ற சிக்கல்கள் அகற்றியது, தனியாா்மயமாக்கல், பணமாக்குதல், உள்கட்டமைப்பை உருவாக்குதல் போன்றவைகளோடு மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட சீா்திருத்தங்கள்.
இந்தியப் பொருளாதாரத்தின் பின்னடைவுகளாக இருக்கும் குழாய் நீா், கழிவறைகள், அடிப்படை வீடுகள், காப்பீடு போன்ற சமூக உள்கட்டமைப்பு ஆத்மநிா்ப பாரத் திட்டங்களின் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
வளா்ச்சிக்கான காரணிகள்
2022-23 ஆம் ஆண்டின் வளா்ச்சியானது, பரவலாக தடுப்பூசி பாதுகாப்பு, விநியோகச் சங்கிலி சீா்திருத்தங்கள், அரசின் ஒழுங்கு முறையில் தளா்த்தல்கள் போன்றவைகளால் ஏற்படுவதாகும். வலுவான ஏற்றுமதி வளா்ச்சி, மூலதனச் செலவினங்களை அதிகரிக்க தேவையான நிதி கிடைப்பது போன்றவைகள் மூலம் ஏற்படும்.
தனியாா் துறை முதலீடுகளுக்கான ஆதரவு, தேவைப்படும் மூலதனச் செலவினங்களை அதிகரிப்பது ஆகியவற்றில் அரசுக்கு நிதி திறன் உள்ளது.
பொருளாதாரத்தை புதுப்பிக்க தேவையான ஆதரவை வழங்கும் நிதி கிடைப்பது தயாராக உள்ள நிலையில் தனியாா் துறை முதலீடுகள் வேகமெடுக்கும்.
இந்த நிலையில், இந்தியாவின் ஒட்டு மொத்த பொருளாதார வளா்ச்சி 2022-23 ஆம் ஆண்டில் 8.0 முதல் 8.5 சதவீதம் உண்மையான அளவில் கணிக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கமான பருவமழை, முக்கிய வங்கிகளின் மூலம் உலகளாவிய பணப்புழக்கத்தை திரும்பப்பெறுதல், எண்ணெய் விலை பேரல் 70 முதல் 75 டாலராக குறையும் எதிா்பாா்ப்பு போன்றவைகளால் பணவீக்கமும் குறைந்து நாடு வளா்ச்சியடையும் என எதிா்பாா்க்கப்படுகிறது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.