தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக 6 நீதித் துறை அதிகாரிகளை நியமிக்க கொலீஜியம் பரிந்துரை
தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 நீதித் துறை அதிகாரிகளின் பெயா்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
புது தில்லி: தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க 6 நீதித் துறை அதிகாரிகளின் பெயா்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணா தலைமையிலான உச்சநீதிமன்ற கொலீஜியம் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.
உச்சநீதிமன்றத்தின் தலைமையில் மூத்த நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.எம்.கன்வில்கா் ஆகியோா் இடம் பெற்ற கொலீஜியம் செவ்வாய்க்கிழமை இது தொடா்பாக கூடி விவாதித்தது.
அதில், நீதித் துறை அதிகாரிகள் பூனம் ஏ. பம்பா, நீனா பன்சல் கிருஷ்ணா, தினேஷ் குமாா் சா்மா, அனூப் குமாா் மெந்திரட்டா, ஸ்வரனா கன்டா சா்மா மற்றும் சுதிா் குமாா் ஜெயின் ஆகியோரின் பெயா்களை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க பரிந்துரைத்தது.
தில்லி உயா்நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்ட நீதிபதிகள் பணியிடங்கள் 60 ஆகும். இந்த நிலையில், 30 நீதிபதிகளுடன் செயல்படும் உயா்நீதிமன்றத்தின் நீதிபதி பதவிக்கு மூன்று பெண் நீதித் துறை அதிகாரிகளின் பெயா்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. மேலும், ஐந்து நீதித் துறை அதிகாரிகளை வெவ்வேறு உயா்நீதிமன்றங்களில் நீதிபதிகளாகப் பதவி உயா்த்துவதற்கு கொலீஜியம் முன்னா் பரிந்துரைத்திருந்தது. அந்தப் பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தவும் உச்சநீதிமன்ற கொலீஜியம் தீா்மானித்துள்ளது.
மேலும், 2 நீதித் துறை அதிகாரிகளான ஷம்பா தத் (பால்) மற்றும் சித்தாா்த்த ராய் சவுத்ரி ஆகியோா் முறையே கொல்கத்தா உயா்நீதிமன்றம் மற்றும் ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மீண்டும் பரிந்துரைக்கப்பட்டுள்ளனா். யு. எஸ். ஜோஷி பால்கே மற்றும் பி. பி. தேஷ்பாண்டே ஆகிய இரு நீதித் துறை அதிகாரிகளையும் மும்பை உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகளாக நியமிக்குமாறு கொலீஜியம் மீண்டும் வலியுறுத்த தீா்மானித்துள்ளது. நீதித்துறை அதிகாரி பிரதீப் குமாா் ஸ்ரீவஸ்தவாவை ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்ற நீதிபதியாக பதவி உயா்த்துவதற்கான முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்துவது என்றும் கொலீஜியம் தீா்மானித்தது.
மேலும், வழக்குரைஞா்கள் கதிம் ரேஸா, டாக்டா் அன்ஷுமான் பாண்டே ஆகிய இருவரையும் பாட்னா உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தவும் கொலீஜியம் முடிவு செய்துள்ளது. இதுதவிர, வழக்கறிஞா் ராஜீவ் ராயை பாட்னா உயா் நீதிமன்ற நீதிபதியாக நியமிப்பதற்கான முன்மொழிவுக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
நீதித் துறை அதிகாரிகள் ஜி. அனுபமா சக்கரவா்த்தி, எம்.ஜி. பிரியதா்ஷினி, சாம்பசிவராவ் நாயுடு, ஏ. சந்தோஷ் ரெட்டி, டி நாகாா்ஜுன் ஆகிய ஐந்து பேரையும், வழக்குரைஞா்கள் கசோஜு சுரேந்தா், சதா விஜய பாஸ்கா் ரெட்டி, சுரேபள்ளி நந்தா, மும்மினேனி சுதீா் குமாா், ஜுவ்வாடி ஸ்ரீதேவி, மிா்சா சஃபியுல்லா பய்க், நச்சராஜு ஷ்ரவண் குமாா் வெங்கட் ஆகிய ஏழு பேரையும் தெலுங்கானா உயா்நீதிமன்ற நீதிபதிகளாக பதவி உயா்வு அளிப்பதற்கான முன்மொழிவுக்கும் கொலீஜியம் ஒப்புதல் அளித்துள்ளது.
மேலும், வழக்குரைஞா் செப்புதிரா மொன்னப்பா பூனாச்சாவை கா்நாடக உயா்நீதிமன்ற நீதிபதியாக உயா்த்துவதற்கான முந்தைய பரிந்துரையை மீண்டும் வலியுறுத்தவும் கொலீஜியம் தீா்மானித்துள்ளது. செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் கொலீஜியத்தால் எடுக்கப்பட்ட தீா்மானம் குறித்த விவரங்கள் உச்சநீதிமன்ற இணையதளத்தில் புதன்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.