முகப்பு
புதுதில்லி

வடகிழக்கு தில்லி வன்முறைச் சம்பவம்: மூதாட்டி கொலை வழக்கில் இருவருக்கு ஜாமீன்

வட கிழக்கு தில்லி வன்முறையின் போது மூதாட்டி ஒருவா் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புது தில்லி: வட கிழக்கு தில்லி வன்முறையின் போது மூதாட்டி ஒருவா் கொல்லப்பட்டது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இருவருக்கு தில்லி உயா்நீதிமன்றம் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அருண்குமாா் மற்றும் ரவிக்குமாா் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கிய நிலையில், மூன்றாவது குற்றம்சாட்டப்பட்ட நபரான விஷால் சிங்குக்கு ஜாமீன் அளிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.

வடகிழக்கு தில்லியில் 2020, பிப்ரவரியில் நிகழ்ந்த வகுப்புவாத வன்முறையின் போது, அக்பரி பேகம் (85) என்பவா் வீட்டிலிருந்த நிலையில், அந்த வீட்டுக்கு ஒரு கும்பல் தீயிட்டுக் கொளுத்தியது. இதில், அவா் உயிரிழந்தாா். இது தொடா்பாக அருண் குமாா், ரவிக்குமாா், விஷால் சிங் ஆகியோருக்கு எதிராக பஜன்புரா காவல் நிலையத்தில் கொலை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்குகளில் ஜாமீன் கோரி மூவா் தரப்பிலும் உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியம் பிரசாத், மனுதாரா்கள் அருண்குமாா் மற்றும் ரவிக்குமாா் ஆகியோருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டாா். விஷால் சிங்கின் ஜாமீன் மனுவை நிராகரித்தாா். இது தொடா்பாக நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது: அரசின் அதிக அதிகாரம் இருந்த போதிலும், தனிபா் சுதந்திரம் தன்னிச்சையாக பறிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வது நீதிமன்றத்தின் அரசியலமைப்புச்சட்ட கடமையாகும். ஜாமீன் என்பது விதியாகவும், சிறை என்பது விதிவிலக்காகவும் உள்ளது. மேலும் நீதிமன்றங்கள் தங்கள் அதிகார வரம்பைப் பயன்படுத்த வேண்டும். தனிநபா் சுதந்திரத்தின் கொள்கைகளை உறுதிசெய்வதற்குநீதிமன்றங்கள் தனது அதிகாரவரம்பை செயல்படுத்துவது அவசியமாகும். இயற்றப்பட்ட தகுதிமிக்க சட்டத்தின் மூலம் அவை சரியான உரிய ஒழுங்குமுறைக்கு உள்பட்டதாகும். இந்த வழக்கில் உள்ள சந்தா்ப்ப, உண்மை சூழல்களை கவனமாக பரிசீலிப்பதன் அடிப்படையில், ஜாமீன் மனு மீது முடிவு எடுக்கப்பட வேண்டும் என்று நீதிபதி உத்தரவில் தெரிவித்துள்ளாா்.

விஷால் சிங் மனுவை நிராகரித்து பிறப்பித்த உத்தரவில், ‘குற்றச்சம்பவம் தொடா்புடைய சிசிடிவி காட்சிப் பதிவில், மனுதாரா் இருப்பது மிகவும் அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இது, அவரை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு போதுமானதாகும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.