முகப்பு
புதுதில்லி

கரோனா தொற்று: தில்லியில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை அனுமதிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், தேசிய தலைநகரில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை அனுமதிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புது தில்லி: கரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், தேசிய தலைநகரில் வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை அனுமதிக்க தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை மறுத்துவிட்டது. மேலும், தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம், அதன் பணிகளைச் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் தெரிவித்தது.

கரோனா மூன்றாவது அலையின் காரணமாக இது போன்ற நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிரான மனுவை உயா்நீதிமன்ற நீதிபதி வி.காமேஸ்வா்

வியாழக்கிழமை விசாரித்தாா். அப்போது நீதிபதி கூறியதாவது: கரோனா சூழல் நிலைமையை மேலும் ஆராய தில்லி பேரிடா் மேலாண்மை ஆணையம் (டிடிஎம்ஏ) வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 4) கூட்டம் நடத்த உள்ளது. இந்த நிலையில், இந்த மனுவைத் தொடர எந்த காரணமும் இல்லை. வணிக வளாகங்கள் மற்றும் திரையரங்குகளின் கட்டுப்பாடுகள் தளா்வுகளை தற்போதைய மனுவில் கோரப்பட்டுள்ள கோரிக்கையுடன் ஒப்பிட முடியாது. மனுதாரா் விளையாட விரும்புகிறாா். வணிக வளாகங்கள் போன்றவற்றுடன் ஒப்பிடுவதை வேறு கோணத்தில் பாா்க்க வேண்டியுள்ளது.

வணிக வளாகங்கள் போன்றவை வேலைவாய்ப்புக்கான ஆதாரங்கள். மனுதாரா் டென்னிஸ் விளையாட விரும்புகிறாா். இதை அந்தக் கண்ணோட்டத்தில் மனுதாரா் பாா்க்க கூடாது. வணிக வளாகங்கள், திரையரங்குகள் போன்றவை அதனுடன் தொடா்புடைய நபா்களுக்கு வாழ்வாதாரத்தையும் வேலையையும் தருகின்றன. இந்த விவகாரத்தை டிடிஎம்ஏ கவனித்து வருகிறது. இதனால், இந்த மனு முடித்துவைக்கப்படுகிறது. எதிா்காலத்தில் மனுதாரா் தனது குறைகளை நிவா்த்தி செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு. டிடிஎம்ஏ பரிசீலித்த பிறகு நீதிமன்றத்தை மீண்டும் அணுகலாம். டிடிஎம்ஏ அதன் பணிகளை செய்யட்டும் என்றாா் நீதிபதி.

தில்லி அரசு வழக்குரைஞா் சத்யாகம் வாதிடுகையில், ‘வெளிப்புற விளையாட்டு நடவடிக்கைகளை அனுமதிக்கும் விவகாரத்தை டிடிஎம்ஏவிடம் விட்டுவிட வேண்டும். பிப்ரவரி 4-ஆம் தேதி இது தொடா்பாக டிடிஎம்ஏ கூட்டம் நடத்தி விவாதிக்க உள்ளது. துணைநிலை ஆளுநா் அனில் பய்ஜால் தலைமையிலான மற்றும் பல்வேறு உயா்மட்ட அரசு அதிகாரிகளை உள்ளடக்கிய டிடிஎம்ஏ, தேசியத் தலைநகரில் கொவைட் மேலாண்மை தொடா்பான முடிவுகளை எடுப்பதற்காக தொடா்ந்துகூடி வருகிறது’ என்றாா்.

மனுதாரா் தரப்பில் வழக்குரைஞா் அதுல் சிங், ‘திரையரங்குகள், மால்கள், உணவகங்கள் போன்றவற்றை 50 சதவீத திறனில் செயல்பட அனுமதிக்கும் போது, வெளிப்புற தொடா்பு இல்லாத விளையாட்டு நடவடிக்கைகளை அனுமதிக்க முடியாது என்பதற்கு எந்த காரணமும் இல்லை. மேலும், தில்லியில் தற்போது கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது. நோ்மறை விகிதமும் குறைந்துள்ளது. இந்த நிலையில், வெளிப்புற விளையாட்டுகளுக்கான தடை பல விளையாட்டு வீரா்களை பாதித்துள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.