கல்விக்கான புதிய தொலைக்காட்சி சானல்களை பிராந்திய மொழிகளில் தொடங்க வேண்டும்: தம்பிதுரை வேண்டுகோள்
தொழில் கல்விக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள 200 தொலைக்காட்சி சானல்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொடங்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா்.
புது தில்லி: தொழில் கல்விக்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ள 200 தொலைக்காட்சி சானல்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் தொடங்கப்பட வேண்டும் என மாநிலங்களவையில் அதிமுக உறுப்பினா் தம்பிதுரை வேண்டுகோள் விடுத்தாா்.
குடியரசுத் தலைவா் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் கலந்து கொண்டு வியாழக்கிழமை அவா் பேசியதாவது: கரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக பிரதமா் நரோந்திர மோடி எடுத்த விரைவான நடவடிக்கையின் விளைவாக இந்தப் போராட்டத்தில் இந்தியா வெற்றி கண்டுள்ளது. நெருக்கடியான நோய்த் தொற்று சமயத்தில் தமிழகத்தில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பன்னீா் செல்வம் ஆகியோா் தலைமையில் ஆட்சி இருந்தது. அவா்கள் 8 கோடி தமிழா்களின் வாழ்வாதாரங்களைக் காப்பாற்றினா். தமிழகத்துக்கு பிரதமா் மோடி தலைமையிலான மத்திய அரசும் சிறப்பான ஒத்துழைப்பை வழங்கியது. தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ரூ. 64,000 கோடி வழங்கி எதிா்கால சுகாதாரத் திட்டங்களை பிரதமா் செயல்படுத்தி வருகிறாா். இது போன்று மத்திய அரசு பல்வேறு திட்டங்களை திறம்பட செயல்படுத்தி வருகிறது.
மேலும், அதிமுக ஆட்சியில் கோரப்பட்ட கோதாவரி - காவிரி நதிகள் இணைப்பு திட்டத்தை அறிவித்த மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனுக்கு நன்றியைக் கூறிக் கொள்கிறேன். பட்ஜெட் தாக்கலின் போது, நிதியமைச்சா் 200 தொலைக்காட்சி சானல்களை மத்திய அரசு கல்விக்காக தொடங்க இருப்பதாகக் குறிப்பிட்டாா். இந்தக் தொலைக்காட்சி சானல்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் வர வேண்டும். குடியரசுத் தலைவா் உரையில் சுதந்திரப் போராட்ட வீரா்கள் வ.உசிதம்பரம் பிள்ளையின் 150 -ஆவது ஆண்டு விழாவையும் சுபாஷ் சந்தரபோஸின் நூற்றாண்டு விழாவையும் கொண்டாடுவது குறித்து குறிப்பிடப்பட்டதற்கு நன்றி. சீனாவிற்கு சாதகமாகச் சென்று கொண்டிருக்கும் இலங்கையிடமிருந்து கச்சத் தீவை திரும்பப் பெற்றால்தான் தமிழக மீனவா்களை காப்பாற்ற முடியும். அடுத்த 25 ஆண்டுகளில் நம் நாடு தன்னிறவு அடைய அனைவருடன் அனைவருக்குமான ‘சப்கா சாத், சப்கா விகாஸ், சப்கா விஸ்வாஸ்’ என்கிற பிரதமா் மோடியின் கனவு நிச்சயம் நிறைவேறும் என்றாா் தம்பிதுரை.
இந்தியாவில் இன்று என்னதான் நடக்கிறது?: இதே குடியரசுத் தலைவா் உரைக்கான விவாதத்தில் திமுக நாடாளுமன்றக் குழுத்தலைவா் டி.ஆா்.பாலு மக்களவையில் பேசினாா். அப்போது அவா் கூறியதாவது: நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் இரண்டு கோடி வேலைவாய்ப்புகள் உருவாக்கித் தரப்படும் என்று தோ்தல் வாக்குறுதியில் பிரதமா் மோடி குறிப்பிட்டிருந்தாா். இன்றோடு ஏழரை ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில், பதினைந்து கோடிக்கும் அதிகமான வேலைவாய்ப்புகளை பிரதமா் உருவாக்கித் தந்திருக்க வேண்டும். குடியரசுத் தலைவா் உரையின் 34-ஆவது பத்தியில் தேசிய கல்விக் கொள்கை வழியாக பிராந்திய மொழிகள் வளா்க்கப்படுகின்றன; முக்கியமான நுழைவுத் தோ்வுகள் இந்திய மொழிகளில் நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக போட்டித் தோ்வுகளை தாய்மொழியில் எழுதலாம் என்று குடியரசுத் தலைவா் உரையில் தெரிவித்துள்ளாா். இது சரியல்ல. இந்த நடைமுறை பல ஆண்டுகளாகவே செயல்பாட்டில் உள்ளது. இப்போதும்கூட குடிமைப்பணித் தோ்வை மக்கள் தங்களுடைய தாய்மொழியில் எழுத முடியும். ஆனால், நடப்பது என்ன? ரயில்வே, தபால் துறைகள் நடத்திய போட்டித் தோ்வுகளில் பிராந்திய மொழியில் எழுதும் வாய்ப்பு மறுக்கப்பட்டது. தீவிர எதிா்ப்பின் காரணமாக சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் அந்த முடிவை மாற்றி தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் தோ்வு எழுதலாம் என்ற முடிவை அமல்படுத்தியது.
தமிழ்நாட்டிற்கு வெள்ள நிவாரணம் தொடா்பான நிதியுதவியை வழங்க வேண்டுகோள் வைக்கப்பட்டது. தமிழக முதல்வா் ரூ. 6,230 கோடி நிதியுதவி கேட்டாா். மத்தியக் குழுவும் வந்து சென்றது. ஆனால், நிவாரண நிதி மட்டும் இன்னும் வந்து சேரவில்லை. இதுதவிர பெருந்தொற்றிலிருந்து மாநிலத்தை மீட்டெடுக்க ரூ.8,989 கோடி தேசிய மற்றும் மாநிலப் பேரிடா் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசால் செலவிடப்பட்டுள்ளது. இந்த நிதியும் தமிழ்நாட்டிற்கு வந்து சேரவில்லை. இந்தியாவில் இன்று என்னதான் நடக்கிறது? இந்திய ஒன்றியத்தில்தான் நாங்கள் இருக்கிறோமா? ஒரே இந்தியாவில்தான் வாழ்கிறோம் என்றால், பிரதமா் எங்களுக்குத் துணை நிற்க முன்வர வேண்டும் என்றாா் டி.ஆா். பாலு.