முகப்பு
புதுதில்லி

நிலுவை ஊதியம் விவகாரம்: கிழக்கு தில்லி மாநகராட்சி மீது உயா்நீதிமன்றம் அதிருப்தி

ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து கிழக்கு தில்லி மாநகராட்சியிடம் தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தனது அதிருப்தியை தெரிவித்தது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:18 AM
பகிர்:

புது தில்லி: ஊழியா்களுக்கு ஊதியம் வழங்காதது குறித்து கிழக்கு தில்லி மாநகராட்சியிடம் தில்லி உயா்நீதிமன்றம் வியாழக்கிழமை தனது அதிருப்தியை தெரிவித்தது.

ஆசிரியா்கள், மருத்துவமனை ஊழியா்கள், துப்புரவுப் பணியாளா்கள், நகராட்சி அமைப்புகளின் பொறியாளா்கள் ஆகியோருக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியம் வழங்காதது தொடா்பான மனுக்களை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகள் விபின் சாங்கி,ஜஸ்மீத் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வு விசாரித்தது. அப்போது, விசாரணைக்கு ஆஜராக வேண்டிய வழக்குரைஞா்ஒருவா் வராததால், விசாரணையை தள்ளிவைக்குமாறு கிழக்கு தில்லி மாநகராட்சி தரப்பில் ஆஜரான மற்றொரு வழக்குரைஞா் கேட்டுக் கொண்டாா்.

மேலும், ‘மருத்துவா்கள் சிலா் ஊதியம் வழங்காததால் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனா். மாநகராட்சி அதன் நிதி ஆதாரவளங்களை பெருக்க முயற்சி செய்து வருகிறது. மருத்துவா்கள் மற்றும் துப்புரவுத் தொழிலாளா்களுக்கு ஊதியம் வழங்குவது மாநகராட்சியின் முன்னுரிமையாக இருந்தது. ஆனால், சில இடா்பாடுகள் இருக்கிறது’ என்று மாநகராட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 28-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்ற அமா்வு கூறுகையில், ‘ஊதியம் இரு மாதங்களாக வழங்கப்படாமல் இருப்பது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. இதுவே தனியாா் நிறுவனமாக இருந்திருந்தால், நாங்கள் மூடிவிடுமாறு கூறியிருப்போம்’ என்று அதிருப்தியை வெளிப்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.