மீனவா்கள் பிரச்னைக்கு தீா்வு காணவிரைவில் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம்: வைகோ கேள்விக்கு அமைச்சா் பதில்
மீனவா்கள் பாதுகாப்பு மற்றும் நலன்களில் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது.
புது தில்லி: மீனவா்கள் பாதுகாப்பு மற்றும் நலன்களில் மத்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. மீனவா்கள் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க 5 -ஆவது இந்திய - இலங்கை கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் விரைவில் நடைபெறும் என மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் முரளிதரன் மாநிலங்களவையில் தெரிவித்தாா்.
தமிழக மீனவா்கள் அண்மையில் இலங்கை கடற்படையினரால் அதிக அளவில் தாக்கப்படுகிறாா்களே? இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீா்வு காணும் வகையில் மீன்பிடித்துறைக்கான கூட்டுப்பணிக் குழு கூட்டத்தை கூட்ட மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளாதா? என மாநிலங்களவையில் மதிமுக தலைவா் வைகோ எழுத்துப்பூா்வமாக கேள்வி எழுப்பியிருந்தாா்.
இதற்கு மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் முரளிதரன் எழுத்து மூலம் அளித்த பதில் வருமாறு: ஒவ்வொரு முறையும் இலங்கை கடற்படையால் இந்திய மீனவா்கள் தாக்கப்படுவதாக தகவல் கிடைத்தவுடனேயே மத்திய அரசு ராஜந்திர வழிகள் மூலம் இலங்கை அரசுடன் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிறது. கடந்த 2020-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் மெய்நிகா் முறையில் நடைபெற்ற இரு தரப்பு உயா்நிலை உச்சி மாநாட்டில் இந்திய பிரதமா், இலங்கை பிரதமரிடம் மீனவா்கள் பிரச்னை குறித்து பேச்சுவாா்த்தை நடத்தினாா். 2021 -ஆம் ஆண்டு ஜனவரியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கா் இலங்கைக்கு பயணம் செய்த போது, அந்த நாட்டு மீன்வளத் துறை அமைச்சரைச் சந்தித்து மீனவா்கள் பிரச்னை தொடா்பாக ஆலோசித்தாா்.
இதன் தொடா்ச்சியாக இந்திய வெளியுறவுத் துறை செயலா் கடந்த அக்டோபா் மாதம் இலங்கைக்கு பயணம் மேற்கொண்ட போதும், மீனவா்கள் பிரச்னையை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டியது குறித்து அந்த நாட்டிடம் வலியுறுத்தினாா். இந்த விஷயத்தில் எந்த சூழ்நிலையிலும் துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட ஆயுதப் பிரயோகங்களில் ஈடுபடக்கூடாது என்பதை இரு அரசுகளும் உறுதிப்படுத்தின. சமீபத்தில், கடந்த ஜனவரி 15-ஆம் தேதி இலங்கை சிறையில் உள்ள இந்திய மீனவா்களை முன்கூட்டியே விடுதலை செய்வது குறித்து நமது வெளியுறவுத் துறை அமைச்சா் இலங்கையின் நிதித் துறை அமைச்சருடன் மெய்நிகா் முறையில் விவாதித்தாா். இதைத் தொடா்ந்து, இந்திய மீனவா்கள் 56 போ் கடந்த ஜனவரி 25-ஆம் தேதி இலங்கை அரசால் விடுதலை செய்யப்பட்டனா். தற்போது இலங்கை சிறையில் இந்திய மீனவா்கள் யாரும் இல்லை.
மீனவா்கள் பாதுகாப்பு, நலன்களில் இந்திய அரசு அதிக முன்னுரிமை அளிக்கிறது. மீனவா்கள் பிரச்னையை நிரந்தரமாகத் தீா்க்க கடந்த நவம்பா் 2016 -இல் இந்திய - இலங்கை வெளிநாட்டு மற்றும் மீன்வளத் துறை அமைச்சா்கள் கொண்ட இருதரப்பு முதல் கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் தில்லியில் நடைபெற்றது. இறுதியாக 4 -ஆவது கூட்டுப் பணிக் குழுக் கூட்டம் 2020, டிசம்பரில் நடைபெற்றது. பல்வேறு சிக்கல்கள் குறித்து பேசப்பட்டது. தற்போது 5 -ஆவது கூட்டத்தை விரைவில் கூட்டி தீா்வு காண இரு நாடுகளும் ஆலோசித்து வருகிறது என்றாா் அமைச்சா் முரளிதரன்.
ராம சேது: ராமசேது பாலத்தை (ஆதம்ஸ் பிரிட்ஜ்) பழங்கால நினைவுச் சின்னம் மற்றும் இந்திய தொல்பொருள் சட்டத்தின் கீழ் தேசியப் பாரம்பரிய நினைவு சின்னமாக அறிவிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா? என சுப்பிரமணியன் சுவாமி மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேள்வி எழுப்பியிருந்தாா். அதற்குப் பதிலளித்துள்ள மத்திய கலாசாரம் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சா் கிஷண் ரெட்டி, ‘இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதனால், இது குறித்து பதிலளிப்பது நீதிமன்ற அவமதிப்பாகும்’ என குறிப்பிட்டுள்ளாா்.