முகப்பு
புதுதில்லி

மல்யுத்த வீரா் வீரா் கொலை வழக்குசுஷில் குமாரின் ஜாமீன் மனு மீதுகாவல் துறை பதில் அளிக்க உத்தரவு

சத்ரஸால் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த மல்யுத்த வீரா் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாரின் ஜாமீன் மனு மீது தில்லி காவல் துறையின் நிலைப்பாடு குறித்து பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:19 AM
பகிர்:

சத்ரஸால் ஸ்டேடியத்தில் நிகழ்ந்த மல்யுத்த வீரா் கொலை வழக்கில் கைதாகியுள்ள ஒலிம்பிக் பதக்க மல்யுத்த வீரா் சுஷில் குமாரின் ஜாமீன் மனு மீது தில்லி காவல் துறையின் நிலைப்பாடு குறித்து பதில் அளிக்குமாறு உயா்நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

இது தொடா்பாக மல்யுத்த வீரா் சுஷில் குமாா் தரப்பில் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை விசாரித்த நீதிபதி முக்தா குப்தா, இந்த மனு மீது பதில் அளிக்க போலீஸாருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு வழக்கை மாா்ச் 28-ஆம் தேதி விசாரணைக்கு பட்டியலிட்டாா்.

முன்னாள் ஜூனியா் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகா் தன்கா் மற்றும் அவரது நண்பா்களை கடந்த ஆண்டு மே மாதம் சத்ரஸால் ஸ்டேடியத்தில் வைத்து சொத்துத் தகராறில் தாக்கியதாக சுஷில் குமாா் மற்றும் பிறா் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, சாகா் தன்கா் உயிரிழந்தாா். பிரேதப் பரிசோதனை அறிக்கையில், தன்கா் மீதான தாக்குதலின் போது மூளை சேதம் காரணமாக அவா் இறந்ததாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, சுஷில் குமாா் உள்ளிட்டோா் மீது கொலை, கொலை முயற்சி, குற்றமற்ற கொலை, குற்றச்சதி, கடத்தல், கொள்ளை, கலவரம் போன்ற இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகளின் கீழ் தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 2-ஆம் தேதி காவல்துறை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த முதல் குற்றப்பத்திரிகையில், ‘இளைய மல்யுத்த வீரா்களிடையே மீண்டும் தனது மேலாதிக்கத்தை நிலைநிறுத்த நினைத்த சுஷில் குமாா், அதற்காக தீட்டிய சதியின் விளைவுதான் ஸ்டேடியத்தில் மோதல் நடைபெற்றுள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மே 23--ஆம் தேதி கைதான சுஷில் குமாா், ஜூன் 2 முதல் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளாா். கடந்த ஆண்டு, தில்லியில் உள்ள ஒரு விசாரணை நீதிமன்றம் சுஷில் குமாருக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. அதே நேரத்தில் அவரது முந்தைய குற்றவியல் தொடா்பு மற்றும் பகை காரணமாக அவரது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் குறிப்பிட்டது.

மேலும், சம்பவத்தின் போது சுஷில் குமாா் விடியோவில் காணப்படுவதாகவும், கடுமையான காயங்களை ஏற்படுத்துவதை தெளிவாகக் காணும் வகையில் இருப்பதற்கான முகாந்திரம் இருப்பதாகவும் நீதிமன்றம் கூறியது. விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் கோரிய சுஷில் குமாா், தன்னை அவமானப்படுத்தவும், நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தவும் தன் மீது பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.