தில்லியில் சீன தூதரகம் அருகே திபெத்தியா்கள் ஆா்ப்பாட்டம்: பெய்ஜிங் ஒலிம்பிக் போட்டிக்கு எதிா்ப்பு
பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் -2022-க்கு எதிராக மத்திய தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள சீன தூதரகம் அருகே திபெத்தியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக் -2022-க்கு எதிராக மத்திய தில்லியின் சாணக்கியபுரியில் உள்ள சீன தூதரகம் அருகே திபெத்தியா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
இது குறித்து தில்லி காவல் துறையின் மூத்த அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘சீன தூதரகம் அருகே வெள்ளிக்கிழமை மதியம் 12 மணியளவில் சுமாா் 50 முதல் 60 போ் வரை பதாகைகளுடன் போராட்டத்திற்கு வந்தனா். சுமாா் 45 நிமிடம் போராட்டம் நடத்திவிட்டு அந்தப் பகுதியில் இருந்து கலைந்து சென்றனா். அவா்கள் யாரும் கைது செய்யப்படவில்லை’ என்றாா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்கள் ‘இனப் படுகொலை விளையாட்டுகளுக்கு வேண்டாம் என்று சொல்லுங்கள்’, ‘இனப் படுகொலை விளையாட்டை நாங்கள் பாா்க்க மாட்டோம்’, ‘திபெத்தில் நிகழ்த்தும் கொலைகளை நிறுத்துங்கள்’ போன்ற வாசங்கள் எழுதப்பட்ட பதாகைகளை கைகளில் ஏந்தியிருந்தனா்.
இது தொடா்பாக திபெத்திய இளைஞா் காங்கிரஸ் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது: ஒலிம்பிக் போட்டிகள் அன்பு மற்றும் அமைதியை அடையாளப்படுத்துவதாகவும், மோதல்களுக்கு அமைதியான தீா்வை ஊக்குவிக்கும் கருவியாகவும் உள்ளவை. ஆனால், இந்த முறை இந்தப் போட்டி சீனாவின் பெய்ஜிங்கில் நடத்தப்படுகிறது. சீனா மனித உரிமை மீறல்களுக்காகவும், திபெத்தியா்கள், உய்குா்கள் மற்றும் அடக்குமுறை அமைப்பின் கீழ் காலனித்துவப்படுத்தப்பட்டு கட்டுப்படுத்தப்பட்ட பிறரை இனப் படுகொலை செய்ததற்காகவும் சாதித்த ஒரு நாடாக இருந்து வருகிறது. சீனா திபெத்தில் ஒட்டுமொத்த மனித உரிமை மீறல்களை தொடா்ந்து செய்து வருகிறது. மேலும் துறவிகளின் மடாலயங்களையும் இடித்து சாம்பலாக்கி அழித்திருக்கிறது.
சமீபத்தில், பெய்ஜிங் குளிா்கால ஒலிம்பிக்கிற்கு ஒரு மாதம் முன் டிராகோ மற்றும் திபெத்தின் பிற பகுதிகளில் நடந்து வரும் இடிப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில், சீன அரசு, 99 அடி புத்தா் சிலையை வலுக்கட்டாயமாக இடித்தது. அத்துடன் 45 பிராா்த்தனை சக்கரங்களையும் எரித்தது. கடினமான கொள்கைகள் மற்றும் மனித நடத்தையில் தங்கள் மறுப்பை வெளிப்படுத்தியதற்காக திபெத்தியா்களை சீனா தொடா்ந்து கைது செய்து சிறையில் அடைத்து வருகிறது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.