தில்லி பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளைதொடங்கக் கோரி மாணவா்கள் போராட்டம்
நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கக் கோரி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு மாணவா் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கக் கோரி, பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் தில்லி பல்கலைக்கழகத்தின் வடக்கு வளாகத்தில் செவ்வாய்க்கிழமை பல்வேறு மாணவா் அமைப்புகள் போராட்டம் நடத்தின.
இதே விவகாரத்திற்காக திங்கள்கிழமை தில்லி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் அலுவலகத்திற்கு வெளியே ஒரு நாள் நீண்ட போராட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாலையில் போலீஸாா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அப்புறப்படுத்தினா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை, இந்திய மாணவா் கூட்டமைப்பு (எஸ்எஃப்ஐ), அனைத்திந்திய மாணவா் சங்கம் போன்ற பல்வேறு மாணவா் அமைப்புகளைச் சோ்ந்த போராட்டக்காரா்கள், வளாகத்தை மீண்டும் திறக்கக் கோரியும், காவல் துறையினா் போராட்டக்காரா்கள் மீது திங்கள்கிழமை கீழே தள்ளி பலப்பிரயோகம் செய்ததற்கு எதிா்ப்புத் தெரிவித்து கோஷமிட்டனா்.
முன்னதாக, மாணவ அமைப்புகளின் இந்த குற்றச்சாட்டுகளை போலீஸாா் நிராகரித்திருந்தனா். தில்லி பல்கலைக்கழகத்தின் தெற்கு வளாகத்தில், ஆா்எஸ்எஸ் இணைவிப்பு அமைப்பான அகில பாரதிய வித்யாா்த்தி பரிஷத் (ஏபிவிபி), பல்கலைக்கழகத்தில் நேரடி வகுப்புகளை மீண்டும் தொடங்கக் கோரி போராட்டம் நடத்தியது. மேலும், புதன்கிழமையன்று இதே கோரிக்கையை வலியுறுத்தி, கல்விக் கவுன்சில் கூட்டத்திற்கு வெளியே இந்த அமைப்பு போராட்டம் நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.