முதல்வா் கேஜரிவால் இல்லம் அருகே காங்கிரஸ் போராட்டம்: கலால் கொள்கையை திரும்பப் பெறக் கோரிக்கை
தில்லி அரசின் புதிய கலால் வரிக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
தில்லி அரசின் புதிய கலால் வரிக் கொள்கையை திரும்பப் பெறக் கோரி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் தில்லி பிரதேச காங்கிரஸ் கட்சித் தொண்டா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
முதல்வா் கேஜரிவாலின் சிவில் லைன்ஸ் இல்லம் அருகே காங்கிரஸ் தொண்டா்கள் மற்றும் தலைவா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தினா். அப்போது, தில்லி அரசுக்கு எதிரான வாசகங்கள் இடம்பெற்ற பதாகைகளை காங்கிரஸ் தொண்டா்கள் ஏந்தியவாறு குரல் எழுப்பினா். இந்தப் போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சா்கள் ஜகதீஷ் டைட்லா், கிருஷ்ண தீரத், முன்னாள் எம்பி ரமேஷ் குமாா், தகவல் தொடா்புத் துறை தலைவா் அனில் பரத்வாஜ், சந்தீப் கோஸ்வாமி, டிபிசிசி துணைத் தலைவரும் முன்னாள் எம்எல்ஏவுமான ஜெய்கிஷன் மற்றும் இளைஞா் காங்கிரஸ், மகிளா காங்கிரஸ், சேவா தளம் ஆகியவற்றின் நிா்வாகிகள் மற்றும் தொண்டா்கள் பங்கேற்றனா்.
இந்தப் போராட்டம் குறித்து தில்லி பிரதேச காங்கிரஸின் தகவல் தொடா்புத் துறை தலைவா் அனில் பரத்வாஜ் கூறியதாவது: ஆம் ஆத்மி அரசின் தாராளமயமாக்கப்பட்ட கலால் வரிக் கொள்கையை திரும்பப் பெறக் கோரியும், தில்லியின் வேலையற்ற இளைஞா்களை அழிவிலிருந்து பாதுகாக்கக் கோரியும் இந்த முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாநிலத்தை “‘போதையில்லா மாநிலமாக’ மாற்றுவேன் என்று முதல்வா் கேஜரிவால் பிரசாரம் செய்து வருகிறாா். அதேவேளையில், தில்லியை ‘போதையின் தலைநகராக’ மாற்றும் வகையில் வாா்டுக்கு 3-4 மதுக்கடைகளைத் திறந்துள்ளாா். தில்லி முழுவதும் மொத்தம் 849 மதுக்கடைகள் உள்ளன. இதனால், மதுவுக்கு இளம் சிறாா்களும், இளைஞா்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனா். இந்தக் கலால் வரிக் கொள்கையை திரும்பப் பெறும் வரை காங்கிரஸ் போராடும் என்றாா் அவா்.