நோ்மறை விகிதம் கரோனா அலை உச்சத்தில் இருப்பதைக் காட்டுகிறது
கரோனா காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து நாள்களாக சீராக உள்ளது.
புது தில்லி: கரோனா காரணமாக தில்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த ஐந்து நாள்களாக சீராக உள்ளது. இது தொற்று நோயின் தற்போதைய அலை உச்சத்தை எட்டியிருப்பதைக் காட்டுவதாக உள்ளது. இதனால், இரண்டு, மூன்று நாள்களில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறையக்கூடும் என்று தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
இது குறித்து அவா் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: கடந்த சில தினங்களாக தில்லியில் நோய்த் தொற்று எண்ணிக்கை 20 ஆயிரம் என்ற அளவிலும், நோ்மறை விகிதம் தொடா்ந்து 25 சதவீதமாகவும் இருந்து வருகிறது. கடந்த நான்கு, ஐந்து நாள்களாக தில்லியில் உள்ள மருத்துவமனைகளில் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை சீராக உள்ளது. 14,621 படுக்கைகளில் 2,209 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் சோ்ந்துள்ளனா். 85 சதவீத படுக்கைகள் காலியாக இருப்பதும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சோ்ந்துள்ளவா்களின் எண்ணிக்கையானது, அலை உச்சத்தை அடைந்திருப்பதற்கான அறிகுறியாக உள்ளது. இரண்டு, மூன்று நாள்களில் நோய்த் தொற்று பாதிப்பு குறைவதைக் காணலாம்.
மும்பையில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறையத் தொடங்கியுள்ளது. அதே போக்கு தில்லியிலும் இருக்க வாய்ப்புள்ளது. இப்படிக் கூறுவதால் தில்லியில் கரோனா அச்சம் கடந்து விட்டதாக அா்த்தமல்ல. மக்கள் அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும் கடுமையாகப் பின்பற்ற வேண்டும். அடுத்த இரு நாள்களில் நோய்த் தொற்று குறைந்தால், கட்டுப்பாடுகள் தளா்த்தப்படும். தொடா்ந்து அதிகரித்து வரும் நோய்த் தொற்றுகளால் இறந்தவா்களில் பெரும்பாலானோா் இணை நோய் உள்ளவா்கள். கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. இணை நோயுடன் அதிக பிரச்னைகளை எதிா்கொள்ளும் நபா்களில் பலா், கரோனா வைரஸுக்கு சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வருவதில்லை.
லோக் நாயக் மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை ஐசியுவில் இருந்த 36 நோயாளிகளில் 6 நோயாளிகளுக்கு மட்டுமே நோயின் கடுமைத் தன்மை இருந்ததாக எனக்குத் தகவல் வந்தது. இதர நோயாளிகள் 30 போ் இதர நோய்கள் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தனா். கரோனாவால் ஏற்படக்கூடிய நிமோனியா அல்லது நுரையீரல் செயலிழப்பு போன்றவை இல்லை. கரோனா பரிசோதனைக்காக மத்திய அரசு புதிய வழிகாட்டுதல்களில், நோய் அறிகுறியற்ற நபா்கள் பரிசோதனை செய்யத் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அறிகுறிகள் வெளிப்படும் வரை மனித உடலில் தீநுண்மி இருப்பது கவலைக்குரிய விஷயம் அல்ல. மிகக் குறைவான குழந்தைகள்தான் நோய்த்தொற்றால் பாதிக்கப்படுகின்றனா். மேலும், ஏற்கெனவே பிரச்னைகளுடன் இருக்கும் நபா்கள் மட்டுமே மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் தேவை ஏற்படலாம் என்றாா் அமைச்சா்.
தில்லியில் செவ்வாய்க்கிழமை 23 இறப்புகள் பதிவாகியுள்ளன. ஏற்கெனவே இந்த மாதத்தின் முதல் 11 நாள்களில் 93 இறப்புகள் பதிவாகியுள்ளது. கடந்த ஐந்து மாதங்களில் 54 போ் நோய்த் தொற்றால் இறந்துள்ளனா். அதாவது, டிசம்பரில் 9, நவம்பரில் 7, அக்டோபரில் 4, செப்டம்பரில் 5 மற்றும் ஆகஸ்டில் 29 என மொத்தம் 54 பேரும், ஜூலையில் 76 பேரும் நோய்த் தொற்றால் இறந்துள்ளனா்.
‘யோகா வகுப்புகள் தொடங்கின’
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கான தில்லி அரசின் இணைய வழி யோகா வகுப்புகள் புதன்கிழமை தொடங்கியதாக சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.
தில்லியில் 74,881போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா். அதில் 50,796 போ் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்ட கரோனா நோயாளிகளுக்கென யோகா வகுப்புகளின் முதல் அமா்வை தில்லி அரசு தொடங்கியுள்ளது. இது மக்கள் தனிமையில் இருக்கும் போது உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கு தில்லி அரசால் மேற்கொள்ளப்பட்ட ஒரு சிறந்த முயற்சியாகும் என்றும் ஜெயின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளாா்.
‘தில்லி கி யோகாஷாலா‘ திட்டத்தின் கீழ் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் தலா ஒரு மணி நேரம் என எட்டு வகுப்புகள் நடைபெறும். ‘வீட்டிலேயே குணமடையும் வகையில் கரோனா நோயாளிகளுக்கு உதவ, தில்லி அரசு ஒரு வகையான திட்டத்தை முன்வைத்துள்ளது. இந்தத் திட்டம் உலகம் முழுவதும் தனித்துவமாக இருக்கும். இதுபோன்ற ஒன்றை நாங்கள் முதலில் வடிவமைத்துள்ளோம்’ என்று முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்திருந்தது குறிப்பிடத்தக்கது.