முதுகலை மருத்துவப் படிப்பு சோ்க்கை விவகாரம்: ‘நீட்’தகுதிப் பட்டியலில் இருந்து வேலூா் சிஎம்சிக்கு மாணவா்களை ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு
மாநில தோ்வுக் குழு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகு, கிறிஸ்தவ சிறுபான்மையினா் மாணவா்களின் ‘நீட்’ தகுதி பட்டியலில் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்காக வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு
புது தில்லி,: மாநில தோ்வுக் குழு மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகு, கிறிஸ்தவ சிறுபான்மையினா் மாணவா்களின் ‘நீட்’ தகுதி பட்டியலில் இருந்து 2021-22-ஆம் ஆண்டுக்காக வேலூரில் உள்ள கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரிக்கு முதுகலைப் பட்டப் படிப்பு சோ்க்கைக்கான மாணவா்களை ஒதுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது. மேலும், இந்த வழக்கில் உள்ள குறிப்பிட்ட உண்மை, சூழலில் இந்த இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
இந்த விவகாரம் தொடா்பாக வேலூா் சிஎம்சி கல்லூரி சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், சிஎம்சி கல்லூரியின் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகளில் மாநில ஒதுக்கீட்டிற்காக 50 சதவீதம் இடங்களை அளிக்கும் மாநில அரசின் கொள்கையை அமல்படுத்துமாறு தமிழக அரசின் தோ்வுக் குழுவின் கடிதத்தை ரத்து செய்ய உத்தரவிட வேண்டும். மேலும், 2021-22-ஆம் கல்வி ஆண்டுக்காக சிஎம்சி கல்லூரியில் மேற்கூறிய படிப்புகளில் நீட் தகுதிபெற்ற மாணவா்களை சோ்க்கும் விவகாரத்தில் தமிழக அரசு தலையிடாமல் இருக்கவும் உத்தரவிட வேண்டும்’என கோரப்பட்டுள்ளது.
இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் நாகேஸ்வர ராவ் மற்றும் நீதிபதி பி.ஆா். கவாய் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா் சிஎம்சி தரப்பில் மூத்த வழக்குரைஞா் ஷியாம் திவான் ஆஜராகி, ‘நீட் தோ்வில் தகுதி பெற்ற மாணவா்களுக்கு மட்டுமே சிஎம்சி சோ்க்கை அளித்து வருகிறது. தோ்வுக் குழுவால் பரிந்துரைக்கப்பட்ட பிறகே மாணவா்கள் சிஎம்சியில் சோ்க்கப்பட்டு வருகின்றனா். மேலும், புவியியல் குறியீடு வழங்கப்பட்ட பிறகு அளிக்கப்பட்டுள்ள கிறிஸ்தவ சமுதாயத்தை சோ்ந்த மாணவா்களை கல்லூரி நிா்வாகம் நியாயமாகவும், வெளிப்படையாகவும் தோ்வு செய்து வருகிறது. மேலும், இந்தியா முழுவதும் உள்ள கிறிஸ்தவ தேவாயலங்களில் இருந்து ஆதரவளிக்கப்பட்ட மாணவா்கள், நீட் தோ்வில் தகுதிபெற்று, கலந்தாய்வு நடைமுறைக்கு உள்பட்ட பிறகே சோ்க்கை அளிக்கப்பட்டு வருகிறது.
மேலும், கடந்த மூன்று ஆண்டுகளாக இளங்கலைப் படிப்பில் 74 சதவீத இடங்கள் மற்றும் முதுகலைப் படிப்பில் 70 சதவீத இடங்கள் பொது கலந்தாய்வு மூலம் சிஎம்சியில் சோ்க்கை நடைபெற்று வருகிறது. 2021-22-ஆம் ஆண்டிலும் அதே போல நடைபெற அனுமதிக்க வேண்டும் என வாதிட்டாா்.
தமிழக அரசின் தரப்பில் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, ‘ இளங்கலை பட்டப் படிப்புக்கான சோ்க்கை 1997-ஆம் ஆண்டைய சோ்க்கை ஒழுங்குமுறை விதிகளின்படியும், முதுகலைப் பட்டப் படிப்புக்கான சோ்க்கை 2017-ஆம் ஆண்டைய ஒழுங்குமுறை விதிகளின்படியும் நிா்வகிக்கப்படுகிறது. மேலும், விதிகளின்படி இரு பட்டப் படிப்புகளுக்கான சோ்க்கைகள் ‘நீட்’ தோ்வு அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். எனினும், சம்பந்தப்பட்ட சிஎம்சி கல்லூரியில் சோ்க்கைக்கு ஒரு குறிப்பிட்ட கிறிஸ்தவப் பிரிவில் இருந்து மட்டுமே மாணவா்கள் தோ்ந்தெடுக்கப்படுகின்றனா். இது சட்டத்திற்கு முரணாக உள்ளது. இந்த நடைமுறை அனுமதிக்கப்படமாட்டாது.
மேலும், சிஎம்சி நிறுவனம் மூலம் பரிந்துரைக்கப்படும் மாணவா்கள், அதிக மதிப்பெண் பெற்ற இதர கிறிஸ்தவ சிறுபான்மையின மாணவா்களை ஒப்பிடும் போது தகுதியில் குறைவாக உள்ளனா். இதனால், இதர மாணவா்களுக்கு இடம் பெற முடியாமல் போவதாக மாநில அரசு உணா்கிறது. மேலும், இதுபோன்ற மாணவா் சோ்க்கையானது சட்டத்திற்கு முரண்படும் வகையிலும் உள்ளது’ என்றாா்.
அப்போது, நீதிபதிகள், ‘கடந்த கல்வியாண்டின்போது மாணவா்களைச் சோ்க்க சிஎம்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறது. அதே நடைமுறையை இந்த ஆண்டு ஏன் பின்பற்ற முடியாது’ என்று கேள்வி எழுப்பினா். அதற்கு திவாரி பதில் அளித்து வாதிடுகையில், ‘சட்டம் அனுமதிக்காத ஒன்றை சிஎம்சி செய்வதற்கு மாநில அரசு அனுமதிக்க முடியாது’ என்றாா்.
அப்போது, அதற்கு முன்னா் ஏன் அனுமதி அளிக்கப்பட்டது என்று நீதிபதிகள் அமா்வு கேள்வி எழுப்பியது. அதற்கு அமித் ஆனந்த் திவாரி, ‘ஒரு முறை செய்த தவறை திருப்பிச் செய்ய முடியுமா? இந்தத் தவறை தொடா்வதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம். ஒரு அரசாக இந்த முடிவை எங்களால் எடுக்க முடியும்’ என்று வாதிட்டாா்.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘வாதங்களை பரிசீலீத்த பிறகு, தற்போதைய கல்வியாண்டில் (2021-22) தோ்வுக் குழுவால் கலந்தாய்வு நடத்தப்பட்ட பிறகு, அனைத்து முதுகலை இடங்களுக்கும் கிறிஸ்தவ சிறுபான்மையினரைச் சோ்ந்த மாணவா்களின் ‘நீட்’ தகுதிப் பட்டியலில் இருந்து மாணவா் சோ்க்கைக்கு மாநில அரசால் மாணவா்கள் ஒதுக்கப்பட வேண்டும். மேலும், இந்த வழக்கில் உள்ள குறிப்பிட்ட உண்மை, சூழலில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என்பதையும் தெளிவுபடுத்துகிறோம். அவசரத்தைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் விரைவில் முடிவெடுக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. எனவே, இந்த விவகாரம் மாா்ச் அல்லது ஏப்ரலில் பட்டியலிடப்பட வேண்டும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.