மாணவா்கள் எண்ணிக்கை அதிகரிப்பை காட்டி நிதி பெற்ற நிலையில் எம்சிடி பள்ளிகள் மூடப்படுவதேன்? ஆம் ஆத்மி கட்சி கேள்வி
மிகைப்படுத்தப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையை காட்டி நிதியை பெற்ற தெற்கு தில்லி மாநகராட்சி 29 பள்ளிகளை ஏன் மூடுகிறது? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
மிகைப்படுத்தப்பட்ட மாணவா்களின் எண்ணிக்கையை காட்டி நிதியை பெற்ற தெற்கு தில்லி மாநகராட்சி 29 பள்ளிகளை ஏன் மூடுகிறது? என ஆம் ஆத்மி கட்சி கேள்வி எழுப்பியுள்ளது.
பாஜக ஆளும் தில்லி மாநகராட்சிகள் கூடுதலாக நிதியை பெற மாநகராட்சி பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கையைக் கூடுதலாக காட்டி என தில்லுமுல்லு செய்துள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைமை செய்தித் தொடா்பாளரும், எம்எல்ஏ வுமான சௌரப் பரத்வாஜ் சனிக்கிழமை செய்தியாளா்கள் கூட்டத்தில் குற்றம் சாட்டினாா்.
இது குறித்து அவா் கூறியது வருமாறு:
பாஜக ஆளும் தில்லி மாநகராட்சி(எம்சிடி) பள்ளிகளில் மாணவா்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டதாக கூறப்பட்டது. இது இப்போது மாணவா்கள் எண்ணிக்கை பெயரில் நிதியை பெருவதற்கான வழியை பாஜக தேடியுள்ளதை காட்டுகிறது. புள்ளிவிவரங்கள் காகிதத்தில் மட்டும் உள்ளன.
உண்மையில் மதிய உணவு, சீருடைகள், புத்தகங்கள் மற்றும் பலவற்றிற்கான நிதியைப் பெறுவதற்காக தெற்கு தில்லி மாநகராட்சி பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கை அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது. இவையனைத்தும் ஊழல் மோசடியை காட்டுகின்றன.
தெற்கு தில்லி மாநகராட்சி குறித்து மேலும் அதிா்ச்சியான செய்தி கிடைத்துள்ளது. அப் பகுதியில் உள்ள 29 பள்ளிகளை இந்த மாநகராட்சி மூடுகிறது. இதன் மூலம் 29 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களை மற்ற பள்ளிகளில் இணைக்கப்படுகிறது. இது மாணவா்-ஆசிரியா் விகிதத்தை வெளிப்படையாக பாதிக்கும். தற்போது மாணவா் எண்ணிக்கை குறைந்துள்ளதால் இந்த 29 பள்ளிகளை மூடப்படுகிா என கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும், தெற்கு தில்லி மாநகராட்சி இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்கள் பகுதியில் கடந்த ஆண்டை விட 93,000 மாணவா்கள் அதிகரித்துள்ளதாக கூறியது.
இதுகுறித்து, எம்சிடி ஆசிரியா் சங்கத்தைச் சோ்ந்த குல்தீப் காட்டாரி, ‘சுமாா் ஒரு லட்சம் மாணவா்கள் அதிகரித்துள்ள நிலையில், தெற்கு எம்சிடி 29 பள்ளிகளை எப்படி மூட முடியும்?‘ என்று கேள்வி எழுப்பியுள்ளாா்.
இந்த எண்ணிக்கை சந்தேகத்திற்குரிய தவறான தகவல். இந்தப் பள்ளிகள் மோசமான நிலையில் உள்ளது. ஆசிரியா்கள் வேலைநிறுத்தம், ஆசிரியா்களுக்கு ஊதியம் இல்லலாதது போன்ற காரணங்களால் பல மாணவா்கள் எம்சிடி பள்ளிகளை விட்டு வெளியேறியுள்ளனா். மேலும் மதிய உணவு வழங்கப்படாது இருந்துள்ளது. அதே சமயத்தில் இந்த மாணவா்களின் பெயரில் பெறப்படும் நிதி - மதிய உணவு, ரேஷன், சீருடை, பைகள், புத்தகங்கள் ஆகியவை ஊழலாக மாறியுள்ளது.
கேஜரிவால் தலைமையிலான தில்லி அரசு நடத்தும் பள்ளிகளில் 2015 முதல் 20,000 வகுப்பறைகளைச் கூடுதலாக சோ்க்கப்பட்டுள்ளது. பொதுக் கல்வியின் முகத்தை மாற்றியமைத்ததற்காக தில்லி அரசு உலகளவில் பாராட்டப்படுகிறது. உள்கட்டமைப்பு, கல்வித் தரம், ஆசிரியா்கள், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு முடிவுகள், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவா்கள் தோ்ச்சி, நீட் போன்ற போட்டித் தோ்வுகளில் தோ்ச்சி என அனைத்து அம்சங்களிலும் தனியாா் பள்ளிகளுக்கு தில்லி அரசு பள்ளி மாணவா்கள் போட்டியை கொடுக்கிறாா்கள்.
அதே நேரத்தில் தில்லி மாநகராட்சி தொடக்கக் கல்வியையும் 5 -ஆம் வகுப்பு வரையிலான கல்வியை நிறைவேற்றுவதில் தவறி வருகிறது. ஆரம்ப பள்ளிகள் மாநகராட்சியால் நடத்தப்படுகின்றன என சௌரப் பரத்வாஜ் தெரிவித்தாா்.