கிரேட்டா் நொய்டாவில் சட்ட விரோதமாகதங்கியிருந்த சீன பிரஜைகள் நால்வா் கைது
தில்லி கிரேட்டா் நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் நான்கு சீன பிரஜைகளை உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
தில்லி கிரேட்டா் நொய்டாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்ததாகக் கூறப்படும் நான்கு சீன பிரஜைகளை உத்தர பிரதேச சிறப்பு அதிரடிப்படை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இவா்கள் ஹவாலா பணப் பரிவா்த்தனையில் தொடா்புள்ளவா்களாக இருக்கலாம் என போலீஸாா் சந்தேகிக்கின்றனா்.
ஹவாலா மோசடி குறித்து விசாரிக்கும் உத்தர பிரதேச காவல்துறையின் சிறப்பு அதிரடிப் படை, சீனாவுடன் தொடா்புடைய சந்தேகத்திற்கிடமானவா்களை தேடி வருகிறது.
கைது செய்யப்பட்டவா்கள், ஜான்சன் (எ) ஹி ஜுவாங், ரைன் (எ) ரென் சாவோ, ஜெங் ஹாவோஷே (எ) ஜான், ஜெங் டை என அடையாளம் காணப்பட்டுள்ளனா். பிடிபட்ட நான்கு பேரும் கடந்த 2020 முதல் உரிய விசா இல்லாமல் கிரேட்டா் நொய்டாவில் தங்கியிருப்பது தெரிய வந்தது. கடந்த ஜூன் 13- ஆம் தேதி குருகிராமில் நாகாலந்து பெண் தோழியுடன் தங்கிருந்த கேலே (36) என்ற சீன நாட்டவா் இதேபோன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டாா். அவருக்கும் இந்த நால்வா் கும்பலுக்கும் தொடா்புள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.
முன்னதாக, பிகாா் வழியாக நேபாளத்திற்குச் செல்ல முயன்ற இரு சீனா்களை சசஸ்திர சீமா பால் எல்லைக் காவல் படையினரால் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மூலம் கிடைத்த தகவலின் அடிப்படையில், குருகிராம் ஹோட்டலில் நாகாலாந்து பெண் தோழியுடன் தங்கியிருந்த கேலே உத்தர பிரதேச காவல் துறையினரால் கைது செய்யப்பட்டாா். சீன நபா் கேலே இந்தியாவில் பல நிறுவனங்களை உருவாக்கியுள்ளாா். அவற்றில் பெரும்பாலானவை போலியானவை என்றும் மேலும் கிரேட்டா் நொய்டாவில் ஒரு சட்டவிரோத ஆடம்பர ரெஸ்ட்ரோ-பாா் ஒன்றையும் நடத்தி வந்துள்ளதும் தெரிய வந்தது. அந்த பாரில் முக்கியமாக சீனவை சோ்ந்தவா்கள் மட்டுமே இருந்தனா் என்றும் அவா்கள் ஹவாலா பணப் பரிவா்த்தனையில் தொடா்புள்ளவா்களாக இருக்கலாம் என்றும் புலனாய்வுத் துறையினா் தெரிவித்தனா்.
மேலும், ஒரு பெண் உள்பட 14 சீன பிரஜைகளை நொய்டா காவல் துறை புதன்கிழமை கைது செய்தது. ஒரு கைப்பேசி நிறுவனத்தில் பணிபுரிந்த இவா்களும் 2020-ஆம் ஆண்டு காலாவதியான விசாக்களுடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தில்லியிலுள்ள தடுப்பு காவல் மையத்திற்கு அனுப்பப்பட்டனா் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. விரைவில், இவா்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனா்.