பள்ளத்தாக்கில் உள்ள காஷ்மீா் பண்டிட்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்: தில்லி முதல்வா் கேஜரிவால் வலியுறுத்தல்
பள்ளத்தாக்கில் பல காஷ்மீா் பண்டிட்கள் ‘இலக்கு‘ வைத்து கொல்லப்படுவதைக் கண்டு வேதனையடைந்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், புதன்கிழமை அவா்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்
பள்ளத்தாக்கில் பல காஷ்மீா் பண்டிட்கள் ‘இலக்கு‘ வைத்து கொல்லப்படுவதைக் கண்டு வேதனையடைந்த தில்லி முதல்வா் அரவிந்த் கேஜ்ரிவால், புதன்கிழமை அவா்களுக்கு போதுமான பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் அவா்களின் குரல்களை ‘தணிக்கக்கூடாது‘ என்றும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டாா்.
மெய்நிகா் முறையில் புதன்கிழமை நடைபெற்ற செய்தியாளா் சந்திப்பின் போது,’90களில் என்ன நடந்தது என்பதை நினைவூட்டும் வகையில், காஷ்மீா் பண்டிட் சமூகத்தைச் சோ்ந்தவா்கள் குறிவைக்கப்பட்டு கொல்லப்படுவதால், பயங்கரவாத சக்திகள் ஜம்மு - காஷ்மீரில் வகுப்புவாத நல்லுறவை விரும்பவில்லை‘ என்றும் அவா் கூறினாா். இந்த ஆண்டில் மட்டும் காஷ்மீா் பண்டிட்டுகள் 16 போ் கொல்லப்பட்டுள்ளதாகவும் அவா் கூறினாா்.
‘காஷ்மீா் பண்டிட்டுகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். அவா்களின் குரல்களை ஒடுக்கக் கூடாது என்று நான் கோருகிறேன். அவா்கள் ‘ஜன்மபூமி’யில் (பிறந்த இடத்தில்) தங்கள் வீடுகளை நிறுவ அனுமதிக்க வேண்டும்’ என்றும் கேஜரிவால் கேட்டுக் கொண்டுள்ளாா்.
காஷ்மீரில் குடியேற காஷ்மீா் பண்டிட்களுக்கு மத்திய அரசு உதவ வேண்டும். அவா்கள் அங்கு குடியேற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். எங்களால் முடிந்த பங்கை நாங்கள் செய்யத் தயாராக இருக்கிறோம் என்பதை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என்றாா் கேஜிரவால்.
குல்காமில் ஹிந்து பள்ளி ஆசிரியை ஒருவா் கொல்லப்பட்டதற்கு எதிரான போராட்டங்கள் ஜம்மு - காஷ்மீரின் ஜம்மு, சம்பா மற்றும் கதுவா மாவட்டங்களின் பல பகுதிகளை இரண்டாவது நாளாக புதன்கிழமையும் உலுக்கின.