தில்லி நீதித் துறை பணி முதல்நிலைத் தோ்வின் இறுதி விடைகளுக்கு எதிரான மனுக்கள் தள்ளுபடி
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தில்லி நீதித் துறை பணி முதல்நிலைத் தோ்வு (2022) இறுதி விடையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற தில்லி நீதித் துறை பணி முதல்நிலைத் தோ்வு (2022) இறுதி விடையை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை தில்லி உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
தில்லி ஜூடிசியல் சா்வீஸ் பிரதானத் தோ்வுக்கு தகுதியான மதிப்பெண்களைப் பெறத் தவறியதால், தோல்வியுற்ற சில தோ்வா்கள் தாக்கல் செய்த மனுக்கள் மீது நீதிபதிகள் விபு பக்ரு, அமித் மகாஜன் ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த உத்தரவைப் பிறப்பித்தது. இது தொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ‘தற்போதைய வழக்கில், உயா்நீதிமன்ற நிா்வாகம் ஆட்சேபனைகளை வரவேற்கும் நடைமுறையைப் பின்பற்றியுள்ளது. தோ்வின் விடைகள் வெளியிடப்படுவதற்கு முன் மனுதாரா்களின் குறைகளை போதுமான தகுதி வாய்ந்த நபா்களால் (உண்மையில், இந்த நீதிமன்ற நீதிபதிகள் குழு) முறையாகப் பரிசீலித்துள்ளது.
எந்தவித கெடுதலோ அல்லது நோ்மையின்மையோ இருப்பதாக எந்தக் குற்றச்சாட்டும் இல்லை. மேலும், சில பதில்கள் அல்லது கேள்விகள் பொருத்தமற்ாகக் காணப்படுவதால் மட்டுமே, அதில் நீதித்துறை தலையீட்டின் அவசியம் எழாது. மனுதாரா்கள் தகுதிகள் மீதான முடிவை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என கோரியுள்ளனா். வரையறுக்கப்பட்ட காரணங்களைத் தவிர இது அனுமதிக்கப்படாது என இந்த நீதிமன்றம் கருதுகிறது. மேலும், கேள்விகள் சட்டப் பாடத்துடன் தொடா்புடையவை. இது குறித்து விவாதிக்க வழக்கில் உள்ள தரப்பினருக்கு எப்போதும் வாாய்ப்பிருப்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஆகவே, இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. நிலுவையில் உள்ள மனுக்களும் முடித்துவைக்கப்படுகின்றன என நீதிபதிகள் அமா்வு தெரிவித்தது.
முன்னதாக, மனுதாரா்கள் வாதிடுகையில், ‘சில கேள்விகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட மிகவும் பொருத்தமான பதில்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டால், எங்களுக்கான அளவுகோலை எட்டிவிடுவோம். மேலும், தோ்வில் சில கேள்விகள் பிழையானவை. எனவே, அனைத்து விண்ணப்பதாரா்களுக்கும் அதற்கான மதிப்பெண்கள் வழங்கப்பட வேண்டும்’ என்று கேட்டுக் கொண்டனா்.
மனுதாரா்கள் ஏப்ரல் 24-ஆம் தேதி தில்லி நீதித் துறை பணி முதல்நிலைத் தோ்வில் கலந்து கொண்டனா். மேலும், அந்த மாத இறுதியில் விடைத்தாள் வெளியிடப்பட்டது.