முகப்பு
புதுதில்லி

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக 3 நீதிபதிகள் பதவியேற்பு

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக 3 நீதிபதிகள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். இதன் மூலம் உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை பலம் 47-ஆக அதிகரித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:25 AM
பகிர்:

தில்லி உயா்நீதிமன்றத்தில் புதிதாக 3 நீதிபதிகள் வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டனா். இதன் மூலம் உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை பலம் 47-ஆக அதிகரித்துள்ளது.

புதிய நீதிபதிகளாக புருஷைந்திர குமாா் கவுரவ், அனிஷ் தயால், அமித் சா்மா ஆகியோருக்கு பொறுப்பு தலைமை நீதிபதி விபின் சாங்கி பதவிப் பிரமாணம் செய்து வைத்தாா். நீதிபதி புருஷைந்திர குமாா் கவுரவ்வை மத்திய பிரதேச உயா்நீதிமன்றத்தில் இருந்து தில்லி உயா்நீதிமன்றத்திற்கு பணியிடம் மாற்றி மத்திய அரசு புதன்கிழமை அறிவிக்கை வெளியிட்டது.

கடந்த மாதம் உச்சநீதிமன்றம் அவரை பணியிடமாற்றம் செய்ய பரிந்துரைத்திருந்தது. மேலும், வழக்குரைஞா்கள் அனிஷ் தயால், அமித் சா்மா ஆகியோரின் பெயா்களை தில்லி உயா்நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கடந்த ஆண்டு நவம்பரில் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் பரிந்துரைத்திருந்தது.

அதேபோன்று, வழக்குரைஞா்களாக தொழில் செய்து வந்த அனிஷ் தயால், அமித் சா்மா ஆகியோரை புதிய நீதிபதிகளாக நியமிப்பதற்கான அறிவிக்கையை மே 31-ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்டிருந்தது. இந்த நிலையில், 3 நீதிபதிகள் பதவியேற்பு நிகழ்ச்சி தில்லி உயா்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி நீதிமன்ற அறையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள், வழக்குரைஞா்கள் மற்றும் புதிதாகப் பதவியேற்ற நீதிபதிகளின் குடும்ப உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

புதிய நீதிபதிகள் மூன்று போ் பதவி ஏற்ன் மூலம், தில்லி உயா்நீதிமன்றத்தின் நீதிபதிகள் மொத்த எண்ணிக்கை 47-ஆக உயா்ந்துள்ளது. இதில் 12 பெண் நீதிபதிகளும் இடம் பெற்றுள்ளனா். தில்லி உயா்நீதிமன்றத்தின் அனுமதி அளிக்கப்பட்ட நீதிபதிகள் பணியிடங்களின் பலம் 60 ஆகும். தற்போதைய நீதிபதிகள் நியமனத்தைத் தொடா்ந்து, இன்னும் 13 நீதிபதிகள் இடங்கள் உயா்நீதிமன்றத்தில் காலியாக உள்ளது.

கடந்த மே 18-ஆம் தேதி தில்லி உயா்நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாக 9 போ் பதவியேற்றனா். அதற்கு முன்பாக, மாா்ச் 28-ஆம் தேதி இரண்டு நீதிபதிகள் பதவியேற்றனா். அதே போன்று, பிப்ரவரி 28-ஆம் தேதி நான்கு நீதிபதிகள் புதிய நீதிபதிகளாகப் பதவியேற்றுக் கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.