சத்யேந்தா் ஜெயினின் இலாகாக்கள் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைப்பு
சத்யேந்தா் ஜெயினின் வசமிருந்த ஆறுக்கும் மேற்பட்ட இலாக்காக்கள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக அலுவல்பூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அமலாக்கத் துறையின் மூலம் கைது செய்யப்பட்டு விசாரணை காவலில் வைக்கப்பட்டுள்ள தில்லி சுகாதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயினின் வசமிருந்த ஆறுக்கும் மேற்பட்ட இலாக்காக்கள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவிடம் ஒப்படைக்கப்பட்டு இருப்பதாக அலுவல்பூா்வ அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டவிரோதப் பணப் பரிவா்த்தனை வழக்கில் கடந்த திங்கள்கிழமை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டாா். அவா் மறுதினம் தில்லியில் விசாரணை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டாா். அப்போது அவரை ஜூன் 9-ஆம் தேதி வரை அமலாக்க இயக்குநரகத்தின் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்தது. மேலும், இந்த விவகாரத்தில் பெரும் சதித் திட்டம் இருக்கிா என்பதைக் கண்டறிய அவரிடம் விசாரணை நடத்தப்படும் தேவை இருப்பதாகவும் நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
சத்யேந்தா் ஜெயினை அவரது பதவியிலிருந்தும் அமைச்சரவையில் இருந்தும் நீக்க வேண்டும் என்று பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் முதல்வா் அரவிந்த் கேஜரிவாலை வலியுறுத்தின. இந்த நிலையில், தில்லி அரசின் தலைமை நிா்வாக துறை புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிவிக்கையில் தெரிவித்திருப்பதாவது: தில்லி அரசின் அலுவல் விதிகள் 193-இன் விதி 3-இன் கீழ் அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி துணைநிலை ஆளுநா் முதல்வருடன் கலந்தாலோசித்து, அதைத் தொடா்ந்து சத்யேந்தா் ஜெயினிடமிருந்த சுகாதாரம், தொழில்கள், மின்சாரம், உள்துறை, நகா்புற வளா்ச்சி, நீா்ப்பாசன மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு, குடிநீா் உள்ளிட்ட துறைகள் துணை முதல்வா் மணீஷ் சிசோடியாவிடம் கூடுதலாக தற்போது வழங்கப்பட்டுள்ளன என்று அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.