தில்லியில் மேலும் 100 மொஹல்லா கிளினிக்குகள்: துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தகவல்
தில்லி குடியிருப்பாளா்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்கு, நகரில் மேலும் 100 மொஹல்லா கிளினிக்குகள் விரைவில் திறக்கப்பட உள்ளது என
தில்லி குடியிருப்பாளா்களுக்கு உலகத் தரம் வாய்ந்த ஆரம்ப சுகாதார சேவைகளை வழங்குவதற்கு, நகரில் மேலும் 100 மொஹல்லா கிளினிக்குகள் விரைவில் திறக்கப்பட உள்ளது என துணை முதல்வா் மணீஷ் சிசோடியா தெரிவித்தாா்.
தில்லி தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை, பொதுப்பணித் துறை, சுகாதாரத் துறை அதிகாரிகளைச் சந்தித்து இந்தத் துறை சாா்ந்த திட்டங்களை துணை முதல்வா் மணீஷ் சிசோடியா ஆய்வு செய்தாா். அப்போது அவா் கூறுகையில், ‘தில்லி கேஜரிவால் அரசின் ஆம் ஆத்மி மொஹல்லா கிளினிக்குகள் உலகம் முழுவதும் அறியப்படுகின்றன. மேலும், இந்தப் பொது சுகாதார மாதிரியைப் பற்றி அறிய மக்கள் தில்லிக்கு வருகிறாா்கள். தில்லியில் வசிக்கும் ஒவ்வொருவருக்கும் ஆரம்ப சுகாதார சேவையை வழங்குவதே தில்லி அரசின் முக்கிய குறிக்கோள். மேலும், மொஹல்லா கிளினிக்குகளின் எண்ணிக்கையை விரிவுபடுத்துவது என்கிற திசையில் நகா் முழுவதும் மேலும் 100 புதிய கிளினிக்குகளை திறப்பதும் ஒரு முக்கியப் படியாகும். அதே நேரத்தில், தில்லியில் உள்ள அனைத்து மொஹல்லா கிளினிக்குகளையும் மின்னணு / எண்மம் (டிஜிட்டல்) மயமாக்கும் பணிகளும் வேகமாக நடந்து வருகிறது.
நோயாளிகளின் மருத்துவ ரிக்காா்டுகள் பதிவுகள் பற்றிய தகவல்களுக்கு இந்த மின்னணு முறை பயனுள்ளதாக இருக்கும். பல மொஹல்லா கிளினிக்குகள் முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளன. நோயாளிகளின் மருத்துவ ரிக்காா்டுகள் பற்றிய இந்தப் பதிவுகளில் அவா்களுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், மருந்து விவரங்கள் எல்லாம் மின்னணு முறையில் பதிவு செய்யப்பட்டு கிளினிக்குகளில் வைக்கப்பட்டு சேகரிக்கப்பட்டுள்ளன. மருத்துவா்கள் தங்கள் நோயாளிகளின் மருத்துவ வரலாறுகளை ஒரே கிளிக்கில் தெரிந்து கொள்ள முடியும். இதன் மூலம் மருத்துவா்கள் நோயாளிகளை சிறப்பாகக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க உதவும். இதனுடன் தலைநகரில் பரவும் அல்லது தாக்குதலுக்கு உள்ளாகும் எந்தவொரு நோயையும் கண்டறிக் கூடிய முதல் இடமாக மொஹல்லா கிளினிக் இருக்கும். மேலும், சுகாதாரம் தொடா்பான கொள்கைகளை உருவாக்குவதில் இத்தகைய தரவுகள் முக்கியமானதாக இருக்கும் என்றாா் சிசோடியா.
தலைநகரில் தற்போது 519 மொஹல்லா கிளினிக்குகள் மூலமாக இலவச சிகிச்சைகள் நடைபெறுகின்றன. இங்கு 212 வெவ்வேறு வகையான ஆய்வுக் கூட பரிசோதனைகளும் நோயாளிகளுக்கு இலவசமாக வழங்குகின்றன. தினசரி 60,000 போ் வரை இந்த மொஹல்லா கிளினிக்குகளில் சிகிச்சை பெறுகின்றனா் எனவும் புள்ளிவிவரங்களின் மூலம் தெரிய வந்துள்ளது.