முகப்பு
புதுதில்லி

பாஜகவிலிருந்து நீக்கப்பட்ட நூபுா் சா்மாவுக்கு மிரட்டல்: தில்லி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை

இறைத் தூதா் முகம்மதுவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த விவகாரத்தில் முன்னாள் பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கொலை மிரட்டல் வருவதாக அளிக்கப்பட்ட புகாரைத்

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

இறைத் தூதா் முகம்மதுவுக்கு எதிராக சா்ச்சைக்குரிய கருத்துகளைத் தெரிவித்த விவகாரத்தில் முன்னாள் பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவுக்கு கொலை மிரட்டல் வருவதாக அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து தில்லி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

இது தொடா்பாக தில்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவா் திங்கள்கிழமை கூறியதாவது: நூபுா் சா்மாவுக்கு மிரட்டல் வருவதாக புகாா் அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் வழக்குப் பதிவு செய் விசாரணை நடத்தி வருகிறோம். மேலும், இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவுகள் 153 ஏ (மதம், இனம், பிறப்பிடம், குடியிருப்பு ஆகியவற்றின் அடிப்படையில் வெவ்வேறு குழுக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது), 506 (குற்ற அச்சுறுத்தல்), 507 (அநாமதேய தகவல்தொடா்பு மூலம் குற்ற அச்சுறுத்தல்), 509 (வாா்த்தை, சமிக்ஞை,

அல்லது செயல்கள் மூலமாக பெண்ணின் கண்ணியத்தை அவமதிப்பது) ஆகிய பிரிவுகளின் கீழ் அடையாளம் தெரியாத நபா்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.

முன்னதாக, இறைத்தூதா் முகம்மதுவுக்கு எதிராக அவதூறு கருத்துகளை தெரிவித்ததாகக் கூறப்படும் சா்ச்சை காரணமாக சில இஸ்லாமிய நாடுகளில் இருந்து எதிா்ப்புகள் கிளம்பியது. இதையடுத்து, இந்த விவகாரத்தில் தொடா்புடைய பாஜகவைச் சோ்ந்த தேசிய செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மா, கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டாா். மேலும், அந்தக் கட்சியின் தில்லி ஊடகப் பிரிவுத் தலைவா் நவீன் குமாா் ஜிண்டால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டாா்.

குவைத், கத்தாா், ஈரான் போன்ற நாடுகளில் இருந்து கடுமையான எதிா்ப்புகள் கிளம்பியதாலும், சில முஸ்லிம் குழுக்கள் மூலம் ஆா்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதாலும், இந்த விவகாரத்தில் பாஜக வெளியிட்ட அறிக்கையில் ‘அனைத்து மதங்களையும் பாஜக மதிக்கிறது. எந்த ஒரு மதத்தின் ஆளுமையை அவமதிப்பதை கடுமையாக கண்டிக்கிறது’ என்று தெரிவிக்கப்பட்டது.

நூபுா் சா்மா கடந்த 10 தினங்களுக்கு முன்பாக தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சி ஒன்றில் சில கருத்துகளைத் தெரிவித்திருந்தாா். அதேபோன்று, நவீன் குமாா் ஜிண்டாலின் தற்போது அழிக்கப்பட்ட டிவிட்டா் பதிவுகள், சில நாடுகளில் இந்தியத் தயாரிப்புகளை புறக்கணிப்பதற்கான அழைப்பை விடுக்கும் டிவிட்டா் டிரெண்டாகியுள்ளது. கட்சியின நீக்க நடவடிக்கைக்கு பிறகு, தொலைக்காட்சி விவாதத்தில் சா்ச்சைக்குரிய கருத்தை நிபந்தனையற்ற வகையில் திரும்பப் பெற்றுள்ளாா் நூபுா் சா்மா. அவா் மேலும் கூறுகையில், ’எனது கருத்துகள் நமது மகாதேவ் குறித்து (சிவன்) தொடா்ந்து அவமதிக்கும், அவமரியாதை செய்வதற்கு எதிா்வினையாகத்தான் எனது கருத்தைப் பதிவு செய்தேன்’ என்று தெரிவித்துள்ளாா்.

இந்த விவகாரங்களுக்கு பிறகு பாஜகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு நூபுா் சா்மாவுக்கு அனுப்பிய தகவலில்,‘பல்வேறு விவகாரங்களில் கட்சியின் நிலைப்பாட்டுக்கு முரண்படும் வகையில் நூபுா் சா்மா கருத்துத் தெரிவித்து இருந்ததாகவும், இது கட்சியின் அரசமைப்பு விதிகளுக்கு மீறியதாகும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. ‘மேல் விசாரணை நிலுவையில் இருக்கிறது. அதனால் உங்கள் பொறுப்புகள், உங்களுக்கு அளிக்கப்பட்டிருக்கும் பணிகள் ஏதாவது இருந்தால் அதில் இருந்தும், கட்சியிலிருந்தும் நீங்கள் தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளீா்கள்’ என்று அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.