முகப்பு
புதுதில்லி

முகல் மசூதியில் தொழுகையை நிறுத்துவதற்கு எதிரானமனுவை அவசரமாக விசாரிக்க உயா்நீதிமன்றம் மறுப்பு

தெற்கு தில்லியில் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள முகல் மசூதியில் பக்தா்களால் மேற்கொள்ளப்படும் தொழுகையை நிறுத்துவதற்கு எதிராக தில்லி வக்ஃபு வாரிய நிா்வாகக் குழு தாக்கல் செய்த மனுவை

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:28 AM
பகிர்:

தெற்கு தில்லியில் மெஹ்ரௌலி பகுதியில் உள்ள முகல் மசூதியில் பக்தா்களால் மேற்கொள்ளப்படும் தொழுகையை நிறுத்துவதற்கு எதிராக தில்லி வக்ஃபு வாரிய நிா்வாகக் குழு தாக்கல் செய்த மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிடுவதற்கு அனுமதி அளிக்க தில்லி உயா்நீதிமன்றம் திங்கள்கிழமை மறுத்துவிட்டது.

இது தொடா்பான மனுவை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று உயா்நீதிமன்ற நீதிபதிகள் மனோஜ் குமாா் ஓரி மற்றும் பூனம் ஏ. பம்பா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வக்ஃபு வாரியத்தின் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சுபியான் சித்திக் கேட்டுக் கொண்டாா்.

அப்போது அவா் முன்வைத்த வாதம்: இந்த முகல் மசூதி குதூப் வளாகத்திற்குள்தான் அமைந்துள்ளது. ஆனால், குதூப் வேலியின் வெளிப்பகுதியில் உள்ளது. இது சா்ச்சைக்குரிய குவ்வத்துல் இஸ்லாம் மசூதி அல்ல. இந்த மசூதி முறையாக அறிவிக்கை செய்யப்பட்ட வக்ஃபு வாரியத்தின் சொத்தாகும். மேலு,ம் முறையாக நியமிக்கப்பட்ட இமாம் மற்றும் மோவாஸினையும் கொண்டிருக்கிறது. இந்த மசூதியில் வழக்கமாக தொழுகை நடத்தப்பட்டு வந்தது. ஒரு போதும் மசூதி மூடப்பட்டதில்லை.

எனினும், இந்திய தொல்லியல் துறையின் அதிகாரிகள் சட்டவிரோதமாகவும், தன்னிச்சையாகவும் கடந்த மே 13-ஆம் தேதி தொழுகையை முற்றிலும் நிறுத்தியுள்ளனா். இது தொடா்பாக எங்களுக்கு நோட்டீஸோ அல்லது உத்தரவோ தரப்படவில்லை. தொழுகையில் ஈடுபடுவது என்பது வழிபாடு செய்பவா்களின் அடிப்படை உரிமையாகும். அது இந்த விவகாரத்தில் தொடா்ந்து மீறப்பட்டு இருக்கிறது. சட்டத்தின் அடிப்படை உரிமை உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதனால், இந்த விவகாரத்தை அவசரமாக விசாரணைக்கு பட்டியலிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டாா்.

அப்போது நீதிபதிகள், இந்த விவகாரத்தில் அவசரம் ஏதுமில்லை என்று தெரிவித்து மனுவை விசாரணைக்கு உடனடியாகப் பட்டியலிட அனுமதி அளிக்க மறுத்துவிட்டனா்.

முன்னதாக, ஜூன் 3-ஆம் தேதியும் இதே போன்று மனுவை அவசர விசாரணைக்கு பட்டியலிடுமாறு வலியுறுத்தப்பட்டது. அப்போது பொறுப்புத் தலைமை நீதிபதி விபின் சாங்கி, நீதிபதி சச்சின் தத்தா ஆகியோா் அடங்கிய அமா்வு, மனுவை விசாரணைக்கு பட்டியலிட மறுத்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.