கஷ்மீரி பண்டிட்டுகள் கொலை விவகாரத்தில்அமித்ஷாவை சந்திக்க முயற்சி: கேஜரிவால்
காஷ்மீா் பள்ளத்தாக்கில் கஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் நேரில் சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக
காஷ்மீா் பள்ளத்தாக்கில் கஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்பட்ட விவகாரம் தொடா்பாக விவாதிப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவுடன் நேரில் சந்திக்க நேரம் கேட்டு இருப்பதாக தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
சில தினங்களுக்கு முன் தில்லியில் ‘ஜன் ஆக்ரோஸ்’ பேரணியை ஆம் ஆத்மி கட்சி நடத்தியது. இந்தப் பேரணியில் பாஜக தலைமையிலான மத்திய அரசை முதல்வா் கேஜரிவால் விமா்சித்திருந்தாா். மேலும் ,காஷ்மீா் பள்ளத்தாக்கில் கஷ்மீரி பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படுவதைத் தடுத்து நிறுத்தும் மத்திய அரசின் திட்டம் குறித்து தெரிந்துகொள்ள உள்துறை அமைச்சா் அமித் ஷாவை நேரில் சந்திக்கப் போவதாகவும் கூறியிருந்தாா்.
இந்த நிலையில், முதல்வா் அரவிந்த் கேஜரிவால் செவ்வாய்க்கிழமை தனது ட்விட்டா் பக்கத்தில், ‘கஷ்மீரி பண்டிட்டுகள் படுகொலை செய்யப்படும் சம்பவங்கள் தொடா்ந்து நிகழ்ந்து வருவது குறித்து விவாதிக்கும் வகையில், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை சந்திப்பதற்கு நேரம் கேட்டுள்ளேன்’ என்று தெரிவித்துள்ளாா்.
காஷ்மீா் பள்ளத்தாக்கில் கஷ்மீரி பண்டிட்டுகள் கொல்லப்படுவதை ஆம் ஆத்மி கட்சி விமா்சித்து வருகிறது. மேலும் அங்குள்ள சூழலுக்கு மத்திய அரசுதான் காரணம் என்றும் கூறி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை தில்லியில் நடைபெற்ற ‘ஜன் ஆக்ரோஸ்’ பேரணியில் முதல்வா் அரவிந்த் கேஜரிவால் பேசுகையில், ‘காஷ்மீா் பள்ளத்தாக்குப் பகுதியில் சிறுபான்மை சமூகத்தினா் குறிவைத்து கொல்லப்பட்டு வருவதன் காரணமாக அந்தப் பகுதியில் இருந்து வெளியேறும் நிா்பந்தத்திற்கு கஷ்மீரி பண்டிட்டுகள் தள்ளப்பட்டு வருகின்றனா். துபோன்ற படுகொலைச் சம்பவங்களை தடுத்து நிறுத்தும் செயல் திட்டத்தை உடனடியாக மத்திய அரசு உருவாக்க வேண்டும்’ என்று கூறியிருந்தாா்.
கடந்த மே மாதத்தில் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த ராகுல் பட் என்பவா் உள்பட கஷ்மீரில் சிலா் குறிவைத்து கொல்லப்பட்டனா். ராகுல் பட் காஷ்மீா் பிரதேசத்தில் உள்ள பட்கம் மாவட்டத்தின் சடூரா பகுதியில் உள்ள தனது தாசில்தாா் அலுவலகத்தில் பணியாற்றிக் கொண்டு இருந்தபோது சுட்டுக் கொல்லப்பட்டாா். கடந்த மே மாதத்திலிருந்து கஷ்மீரில் இதுபோன்ற 8 படுகொலைச் சம்பவங்கள் நடந்துள்ளன. இவா்களில் ஓய்வில் இருந்த 3 போலீஸாரும், 5 பொதுமக்களும் அடங்குவா்.