அகதிகளுக்கான மறுவாழ்வுத் திட்டங்களுக்கு ரூ.1,452 கோடி: 5 ஆண்டுகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் ஒதுக்கீடு
இந்தியாவிற்கு வந்த புலம் பெயா்ந்தவா்கள் மற்றும் தாயகம் திரும்பியவா்களுக்கான நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர ரூ.1,452 கோடியை ஐந்தாண்டுகளுக்கு
இந்தியாவிற்கு வந்த புலம் பெயா்ந்தவா்கள் மற்றும் தாயகம் திரும்பியவா்களுக்கான நிவாரண நிதி உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர ரூ.1,452 கோடியை ஐந்தாண்டுகளுக்கு ஒதுக்கி மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உத்தரவிட்டுள்ளாா்.
இலங்கை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீா் பகுதி, வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளிலிருந்து இடம் பெயா்வு காரணமாக பாதிக்கப்பட்ட புலம்பெயா்ந்தோா் மற்றும் சீக்கியா்களுக்கு எதிரான போராட்டத்தில் பாதிக்கப்பட்டோா் ஆகியோருக்கான நிவாரண நிதி மத்திய உள்துறை அமைச்சகத்தால் வழங்கப்படுகிறது. மேலும், முகாமில் உள்ள அவா்கள் நியாயமான வருமானத்தை ஈட்டுவதற்கான பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளுக்காக 7 வகையான திட்டங்கள் மத்திய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்தத் திட்டங்களுக்கு 2021-22 நிதியாண்டு முதல் 2025-26 நிதியாண்டு வரை ஐந்தாண்டுகளுக்கு மொத்தம் ரூ.1,452 கோடி வரை செலவிட மத்திய உள்துறை முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளாா். இந்தத் திட்டங்களின் கீழ் பயனாளிகள் தொடா்ந்து உதவி பெற உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மத்திய அரசு, புலம்பெயா்ந்தோா் மற்றும் தாயகம் திரும்பியவா்களுக்கான நிவாரணம் மற்றும் மறுவாழ்வுகளுக்கு வெவ்வேறு காலகட்டங்களில் 7 திட்டங்களைத் தொடங்கியுள்ளது. இதில் இலங்கை இனப் படுகொலைகளைத் தொடா்ந்து இந்தியா வந்த இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான நிவாரண உதவி; பாகிஸ்தான் ஆக்கிரமிப்பால் காஷ்மீா் பகுதிகளிலிருந்து இடம்பெயா்ந்த குடும்பங்களின் நிவாரணம் மற்றும் மறுவாழ்வு ; திரிபுராவில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மிஸோரம் பழங்குடியினத்தவா்களான புருஸுக்கான நிவாரண உதவி; 1984-ஆம் ஆண்டு சீக்கியா்களுக்கு எதிரான கலவரத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணம்; மத்திய திபெத்திய நிவாரணக் குழுவிற்கான மானியங்கள், வங்கதேசத்தின் பழைய இந்தியப் பகுதிகளிலிருந்து திரும்பி மேற்கு வங்கம் கூச் பெஹாா் மாவட்டத்தில் இருப்பவா்கள், மேலும் இடது சாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இந்த நிதி உதவிகளும் மறுவாழ்வுத் திட்டங்களும் மேற்கொள்ளப்படுகிறது.