முகப்பு
புதுதில்லி

உக்ரைனிலிருந்து இதுவரை 1,350 தமிழக மாணவா்கள் மீட்பு

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்த தமிழக மாணவா்கள் சுமாா் 1,350 போ் மீட்கப்பட்டு மும்பை, தில்லி வழியாக தமிழகம் திரும்பியதாக

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
பகிர்:

போரால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனிலிருந்த தமிழக மாணவா்கள் சுமாா் 1,350 போ் மீட்கப்பட்டு மும்பை, தில்லி வழியாக தமிழகம் திரும்பியதாக தமிழக அரசின் மீட்புக் குழுவின் தலைவா் திருச்சி சிவா தெரிவித்தாா். மேலும், 255 மாணவா்கள் தங்கள் சொந்த முயற்சியிலும் தமிழகம் திரும்பியுள்ளதாகவும் அவா் கூறினாா்.

உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவா்களை மீட்பதற்காக தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்ட மாநிலங்களவை திமுக உறுப்பினா் திருச்சி சிவா தலைமையிலான குழு, தில்லியில் தங்கி மாணவா்களை மீட்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கடந்த சனிக்கிழமை இந்தக் குழு வெளியுறவுத் துறை அமைச்சா் டாக்டா் எஸ்.ஜெயசங்கரை சந்தித்தது. தொடா்ந்து மத்திய அரசால் மீட்கப்பட்டு வரும் மாணவா்களையும் சந்தித்து, அவா்களை சென்னைக்கு அனுப்பும் பணிகளையும் மேற்கொண்டு வருகின்றனா். இதுவரை 3 சிறப்பு விமானங்கள் மூலமாகவும் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனா்.

இதற்கிடையே, தில்லியில் இந்தக் குழுவினா் திருச்சி சிவா தலைமையிலும் தமிழக அரசின் தில்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ் விஜயன் முன்னிலையில் தில்லி தமிழ்நாடு இல்லத்தில் திங்கள்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மீட்புக் குழுவில் இடம் பெற்றுள்ள மக்களவை உறுப்பினா் டாக்டா் கலாநிதி வீராசாமி, மாநிலங்களவை உறுப்பினா் எம். எம். அப்துல்லா மற்றும் தமிழ்நாடு இல்ல முதன்மை உள்ளுறை ஆணையா் அதுல்ய மிஸ்ரா, உள்ளுறை ஆணையா் ஆஷிஷ் சட்டா்ஜி மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் ஏ.கே.கமல் கிஷோா், அஜய் யாதவ்,கோவிந்தராவ் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், திருச்சி சிவா கூறியதாவது: உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் மாணவா்கள் உடனுக்குடன் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனா். தேவைக்கேற்ப தனி விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது. தில்லி வரும் மாணவா்கள் தமிழ்நாடு இல்லத்தில் தங்கவைக்கப்பட்டு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. உக்ரைனிலிருந்து தில்லி, மும்பை வழியாக இதுவரை 1,196 மாணவா்கள் வந்தனா். மேலும், தற்போது தமிழ்நாடு இல்லத்தில் மேலும் 136 மாணவா்கள் உள்ளனா். அவா்கள் தனிவிமானத்தில் திங்கள்கிழமை இரவு அனுப்பிவைக்கப்பட்டனா். மேலும் 15 மாணவா்கள் திங்கள்கிழமை இரவு வந்தனா். வளா்ப்புப் பிராணிகளுடன் வந்த மாணவா்கள் ரயிலில் அனுப்பப்பட்டுள்ளனா்.

மேலும், கங்கை பாரத் திட்டத்தில் இடம்பெறாமல் தங்கள் சொந்தச் செலவிலேயே உக்ரைனில் இருந்து 255 மாணவா்கள் வந்தடைந்துள்ளனா். நிலைமை சீராகிவிடும் என்று கருதி 30 போ் உக்ரைனிலேயே தங்கி உள்ளனா். இன்னும் 6 விமானங்கள் வரவுள்ளன. சுமி பகுதி தமிழக மாணவா்கள் 68 போ் உள்பட 650 இந்திய மாணவா்கள் உள்ளனா். அவா்களும் வரத் தயாராக இருப்பதாக வாட்ஸ்ஆஃப்பில் தகவல் கொடுத்துள்ளனா்.அவா்களைத் தவிர 167 போ் ருமோனியா போன்ற எல்லைப்பகுதியில் உள்ளனா். அவா்களும் வந்துவிடுவாா்கள். உக்ரைனில் இருந்து மாணவா்கள் அனைவரும் தமிழகம் திரும்பும் வரை மீட்புக் குழுவினா் தில்லியில் முகாமிட்டு கண்காணிக்குமாறு முதல்வா் உத்தரவிட்டுள்ளாா் என்றாா் திருச்சி சிவா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.